Jul 27

ரொரன்ரோ விமானநிலையத்தில் நாளை பணிப் புறக்கணிப்பு?

ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தின் பயணப் பொதிகளைக் கையாளும் பணியாளர்கள் நாளை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை விமானநிலைய சேவைகளில் தாமதங்கள் எதிர்நோக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அங்கு பணியாற்றும் சுமார் 700 பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், தமது இந்த பணிப் புறக்கணிப்பு குறித்த 72 மணிநேர முன்னறிவிப்பை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டிருந்தது.

அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், நாளை வியாழக்கிழமை முதல் தமது பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த பணியாளர்களின் தொழில் வழங்குநர்கள் முன்வைத்துள்ள தீர்வுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியன அல்ல எனவும், அதனை எதிர்த்து நாளை இரவு முதல் தமது பணியாளர்கள் பணிப் பறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் தொழிற்சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பியர்சன் விமான நிலையத்தில் பயணப் பொதிகளை கையாளும் பிரிவு மற்றும் சரக்கு கொள்கலன்களை கையாளும் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவார்கன் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இவ்வாறன பணிப்புறக்கணிப்பு ஒன்று இடம்பெறுமானால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று ரொரன்ரோ விமான நிலையங்கள் அதிகார சபை நேற்று தெரிவித்துள்ளது.