Jul 26

நோர்த் யோர்க் உயர்மாடிக் கட்டிடத்தில் தீ: ஒருவர் பலி!

ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தில் சிக்குண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜேன் வீதி மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில், ஷேர்ஹம் ட்ரைவில் அமைந்துள்ள உயர்மாடிக் கட்டிடம் ஒன்றில் நேற்று அதிகாலை 5.20 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அந்தக் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்து பலத்த புகை வெளியேறியவாறு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர், குறித்த அந்த தளத்தில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட பெண் ஒருவரை மீட்டு அவசர மருத்துவப் பிரிவினரிடம் கையளித்துள்ளனர்.

எனினும் குறித்த அந்த பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டதாக ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மூச்சுத் திணறலால் பதிக்கப்பட்ட மேலும் ஒரு நபருக்கும் அங்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புகைத்தல் அல்லது மெழுகுவர்த்தி போன்றவை கவனயீனமாக கையாளப்பட்டதனாலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்க கூடும் எனவும், தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ரொரன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.