Mar 28

ரவிராஜ் கொலை; கடற்படை தளபதி நீதிமன்றுக்கு அறிவிப்பு

படு கொலை செய்யப்பட்ட முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்  படுகொலை வழக்கில் பிரதிவாதிகள் அனைவரும் குற்றமற்றவர்கள் எனக் கருதி சிறப்புகள் ஜூரிகள் சபை விடுவித்தமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் பாதிக்கப்பட்ட தரப்பான ரவி ராஜின் மனைவி தாக்கல் செய்த மீளாய்வு மனு இன்று விசாரணைக்கு வந்த போது கடற்படை தளபதி சிறப்பு அறிக்கை ஊடாக இதனை மன்றுக்கு அறிவித்தார்.

 

யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவி ராஜ் மற்றும் அவரது மெய் பாதுகாவலர் பொலிஸ் காண்ஸ்டபிள் லக்ஷ்மன் லொக்குவெல்ல ஆகியோரின் படுகொலை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து மீள் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் ஆராய  அது குறித்த மனுவானது மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான எஹ்.சீ.ஜே.மடவல, எல்.டி.ஓ. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


இதன் போது மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

 

கடந்த தவணை அறிவித்தல் பிரகாரம் பொறுப்புக் கூறத்தக்கக தரப்பாக பெயரிடப்பட்டிருந்த மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ரவிராஜ் கொலை சந்தேக நபர்களான மூன்று கடற்படை வீரர்களும் மன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

 

இந் நிலையில் மூன்று கடற்படை வீரர்கள் தொடர்பிலான கடற்படை தளபதியின் அறிக்கையானது மன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதன் போதே அவர்கள் உள்ளார்கள் என்பது தனக்கு தெரியாது என கடற்படை தளபதி தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து மன்றில் கருத்துக்களை முன்வைத்த மனுதாரர் தரப்பு சட்டத்தரணியான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மேல் நீதிமன்றினால் ரவி ராஜ் கொலை விவகாரத்தில் விடுவிக்கப்பட்ட மூன்று கடற்படை வீரர்களில் ஒருவரான பிரசாத் ஹெட்டி ஆரச்சி என்பவருக்கு எதிராக 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம் தொடர்பிலும் பிடியாணை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

 

இதனையடுத்து இவ்வழக்கில் பொறுப்புக் கூறத் தக்க தரப்பான குறித்த மூன்று கடற்படை வீரர்களையும் கண்டுபிடிக்க குற்றப் புலனயவுப் பிரிவின் உதவியுடன் நடவடிக்கை எடுக்க உத்தர்விட்ட நீதிபதிகள் இது தொடர்பிலான வழக்கை எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.