Mar 28

விவசாயிகளுக்கு ஆதரவாக பெருகும் போராட்டங்கள்

டில்லியில் தமிழக விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவாக மாணவ அமைப்புகளும் வட இந்திய விவசாயிகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து டில்லி  நோக்கி படையெடுத்து வருகின்றனர். அத்தோடு தமிழகமெங்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக .பி. அரியானா.  மாநில விவசாயிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு ஜந்தர் மந்தருக்கு வந்து, விவசாயிகளை சந்தித்தார்.

இதேபோல், விவசாயிகளின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி.கே.ரங்கராஜன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.

டில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜந்தர் மந்தருக்கு பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பதாகைகள் ஏந்தியபடி போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் காமராஜர் சிலை அருகே தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று பொலிஸ் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முன்பாக நேற்று கல்லிக்குடி, அடிப்புதுச்சேரி, காணூர் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் அரசு கலைக்கல்லூரி முன்பு மாணவ, மாணவியர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து வீடு திரும்பினர். இதுபோல் தமிழகத்தில் பல இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

 தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் நேற்று காலையில் விவசாயிகளையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேச்சுவார்ததையில் ஈடுபட்டனர்.

இதேவேளை நாட்டில் விவசாயம் அழிந்தால் நாடும் பேரழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்றும், மத்திய, மாநில அரசுகள் விழித்து எழ வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கண்ணீருடன் கூறினர்.

அவர்களின் கண்ணீர் குரல்களைக் கேட்டு விவசாயத்தை காக்க வேண்டும் என்று மாணவர்கள் ஆவேசமாக கோஷம் எழுப்பினர்.தொடர்ந்து போரட்டம் நடைபெற்று வருகின்றது