Jul 25

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காற்றின் வேகம் காட்டுத்தீயை தீவிரப்படுத்தும்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் சிலர் வீடு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் அதிகரித்துள்ள காற்றின் வேகம் காட்டுத்தீப் பரவலை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

காட்டுத்தீ அனர்த்தத்திற்கு உள்ளான பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 50 கிலோமீட்டர் வரையில் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கையை கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் விடுத்துள்ள நிலையிலேயே, காட்டுத் தீ குறித்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே காட்டுத்தீப் பரவலை கட்டுப்படுத்துவதில் படையினர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவரும் நிலையில், இவ்வாறான காற்றின் வேக அதிகரிப்பானது நிச்சயமாக நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும், நிலைமையை தாம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தீயணைப்பு படையின் தகவல் தொடர்பு அதிகாரியான நவி சைனி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தீப்பரல் அச்சுறுத்தல் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளதாக கருதப்பட்ட சில பகுதிகளுக்கான குடியிருப்பாளர்களுக்கான வெளியேற்ற உத்தரவு சனிக்கிழமை தளர்த்தப்பட்டது.

இவ்வாறான நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட காற்று வேக அதிகரிப்பு, அதனால் ஏற்பட்டுள்ள காட்டுத்தீப் பரவல் அச்சுறுத்தல் என்பன, மீண்டும் வீடுகளுக்கு திரும்பும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் கவலையினை தோற்றுவித்துள்ளது.

இதேவேளை இந்த காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள சுமார் 44,000 மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கான நிதி உதவியினை மத்திய அரசு வழங்கவுள்ளதாகவும், நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அந்த நிதி கையாளப்படும் எனவும் மத்திய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரால்ஃப் குட்டேல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காட்டுத்தீ பரவலின் மிகவும் ஆரம்ப கட்ட அச்சுறுத்தல்களையே பிரிட்டிஷ் கொலம்பியா தற்போது எதிர்நோக்கி வருவதாகவும், இன்னமும் அபாயகரமான, சிரமமான நிலைமைகள் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடும் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.