Jul 11

சாஸ்காச்சுவானில் மூடிய அறைக்குள் மாநில முதல்வர்கள் பேச்சு

கனடாவின் 13 மாநிலங்களின் முதல்வர்களும் சாஸ்காச்சுவானில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

சாஸ்கட்டூன் டவுன்ரவுனில் உள்ள விருந்தினர் விடுதி மாநாட்டு மண்டபம் ஒன்றில் மூடிய அறைக்குள் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த வருடாந்த மாநாட்டில், ஏனைய பல விடயங்களுடன் முக்கியமாக வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான விடயங்கள் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டை தலைமையேற்று நடாத்தும் சாஸ்காச்சுவான் முதல்வர் ஸ்கொட் மோ, இந்த மாநாடு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்போது, மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தக தடைகளை குறைப்பது அல்லது இல்லாது செய்வது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய பொதுத் தேர்தலுக்கு இன்னமு்ம் சில மாதங்களே உள்ள நிலையில், மாநில முதல்வர்களின் இந்த மாநாடு, அந்த வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது.

முதல்வர்கள் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள போதிலும், நேற்றே சாஸ்காச்சுவானைச் சென்றடைந்த பல முதல்வர்களும், நேற்று சாஸ்கட்டூனின் வடக்கே அமைந்துள்ள பிக் றிவர் பழங்குடியின மக்கள் பகுதிக்குச் சென்று, அங்குள்ள பழங்குடியின மக்கள் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.