Jul 11

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல : ஆட்சிபீடம் ஏற்றிய தமிழ்த்தரப்பினருக்கும் எதிரானது!

‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்’ என்பார்கள். இங்கே ஆட்சி இரண்டு பட்டிருக்கிறது. இதை கொண்டாடுகின்ற கூத்தாடிகள் யார்? என்று பார்க்க வேண்டும்.

இந்த ஆட்சிக்குள்ளேயே சிலருக்கும், இந்த ஆட்சியைக் கொண்டு வந்தவர்கள் எனக் கூறிக் கொள்கின்ற பலருக்கும், எதிர்த் தரப்பு அரசியலில் இருக்கின்ற சிலருக்கும் கோமாளி வேடங்கள் வெகுவாகப் பொருந்துகின்றதாகக் கூறுகின்ற மக்கள், இந்த நாடு அரசியல் கேலிக் கூத்துக்களுடன் முன்னேறிக் கொண்டிருப்பதையே  பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தானே என்று கட்சிக்கு கட்சி, ஆளுக்காள் தம்மைத் தாமே சிபாரிசு செய்து கொண்டிருக்கின்ற நிலையில், மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு தேவைக்கு உதவாத வெவ்வேறு தலைப்புகள் முன்னிறுத்தப்பட்டு, அவை தொடர்பில் விவாதித்துக் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்ற ஒரு நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், மயிலிட்டிப் பகுதிக்கு சென்று ஆராய்கின்ற வரையில் அது குறித்து பாதுகாப்புத் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அறிந்திருக்கவில்லை எனக் கூறப்படுகின்ற நிலையில், இந்த நாட்டில்; தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நாட்டை எவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய நாட்டின் நடைமுறை நிலைமைகளைப் பார்க்கின்றபோது ‘கூத்தாடிகள் யார்? என்பது தொடர்பில் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இந்த நாட்டு மக்கள் இல்லை என்றே நினைக்கின்றேன்.

கூத்தாடிகள் தங்கள் தங்களது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொள்கின்ற ஒரு மேடையாக இந்த நாடு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  எமது நாட்டு மக்கள் இலவச பார்வையாளர்களாக இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், எமது மக்களது உரிமைகள் மேலும், மேலும் உருவப்பட்டு வருவதுடன், அவர்களது அன்றாட வாழ்க்கை பெரும் சுமையாக்கப்பட்டு அவர்களிடமே திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டில் தேசிய பாதுகாப்புத் தொடக்கம் அனைத்துத் துறை சார்ந்தும் உரிய அவதானங்கள் தொடர்ந்து செலுத்தப்பட்டிருக்குமானால், கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மட்டுமல்லாது, எமது மக்களுக்கு எதிரான அனைத்து நேரடி மற்றும் மறைமுகத் தாக்குதல்களையும் நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும் எனக் கருதுகின்றேன்.

(நாடாளுமன்றில் நடைபெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்…)

கூட்டமைப்பின் மாநாட்டில் மக்கள் இட்ட சாபங்கள்; அவர்களின்; அரசியல் செயற்பாடுகளுக்கு கொடுத்த சான்றிதழ்!

எமது மக்களுக்கான அரசியல் உரிமை தொர்பிலான பிரச்சினைக்குரிய தீர்வு கிடைப்பதற்கு புலிகள் இயக்கம் அழிகின்ற வரையில் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், புலிகள் இயக்கம் அழிந்தும், இன்னமும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாகக் கூறுகின்ற தமிழ்த் தரப்பினர் கூறுகின்றனர். 

இந்தத் தமிழ்த் தரப்பினருக்கு இன்று இருக்கின்ற அரசியல் பலத்தை வைத்துக் கொண்டு இவர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளை மாத்திரம் கவனித்துக் கொண்டு, அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வேலையை மட்டுமே சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்களே அன்றி, எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இதுவரையில் அவர்கள் எவ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதை எமது மக்கள் அறிவார்கள். இந்த அரசாங்கமும் நன்கு அறியும்.

எனவே, இந்தத் தமிழ்த் தரப்பினர் தங்களது சுய நலன்கைள மாத்திரமே கருதுகின்றவர்கள் என்பதை இந்த அரசு அறிந்து கொண்டும், இவர்களை தடவிக் கொடுப்பதிலேயே காலத்தைக் கழித்து வருகின்றதே தவிர, எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நேர்மையான முன்னெடுப்புகளை தானாகவேணும் மேற்கொள்ளவில்லை என்ற கருத்து எமது மக்களிடத்தில் இருக்கின்றது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்தத் தமிழத் தரப்பினர் அண்மையில் மகநாடு நடத்திக் கொண்டிருந்த நிலையில், எமது மக்கள் - குறிப்பாக தாய்மார்கள் அந்த மகாநாட்டு நுழைவாயிலில் இருந்து இட்ட சாபங்கள் இந்தத் தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளின் அரசியல் செயற்பாடுகளுக்கு எமது மக்கள் கொடுத்த சான்றிதழ் என்றே கருத வேண்டியிருக்கின்றது.

இத்தகைய சான்றிதழ்கள் நிறையவே எமது மக்களிடம் இருக்கின்றன. காலப்போக்கில் குறிப்பாக தேர்தல்களின் போது அவை இவர்களுக்குக் கிட்டும் என்றே எமது மக்கள் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள்.

எமது மக்களின் வாக்குகளைப் பொய் கூறிப் பறித்த இவர்களால், எமது மக்களுக்கு வயிற்றெரிச்சலைத் தவிர இதுவரையில் வேறெதனையும் கொடுக்க முடியாதிருக்கின்றது எனில், எதற்காக இவர்கள் இந்த அரசை இன்னமும் தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்? என எமது மக்கள் கேட்கிறார்கள்.

எமது மக்கள் வருடக் கணக்கில் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக இன்னமும் வீதிகளில் இறங்கி, அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மட்டுமன்றி, எமது மக்களுக்கு ஓர் ஆறுதல் வார்த்தையைக் கூடக் கூறுவதற்கு வக்கினை இல்லாத இவர்கள், இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே எனக் கூறிக் கொள்வதில் இன்னமும் கூச்சப்படுவதாகத் தெரியவில்லை என்றே எமது மக்கள் கருதுகின்றனர்.

எனவே, இந்த அரசு தொடர்பில் எமது மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கையானது இன்று படிப்படியாகக் குறைந்துவிட்டுள்ளது. இதற்குக் காரணமாக இந்த அரசைக் கொண்டு வந்ததாகக் கூறும் தமிழ்த் தரப்பினரும், அவர்களது ஆதரவுக்காக அவர்கள் சொல்வதைக் கேட்டு, எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்க்காதிருக்கின்ற அரசு தரப்புமே விளங்குகின்றன என்பதே எமது மக்களது கருத்தாக இருக்கின்றது.

(நாடாளுமன்றில் நடைபெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்…)

நாங்கள் சொல்வதைத்தான் அரசாங்கம் செய்கிறது என்றால் அரசு எதையுமே செய்யாதிருப்பதற்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும்!

தாங்கள் சொல்வதைக் கேட்டுதான் இந்த அரசாங்கம் அனைத்தையும் செய்யும் என இந்தத் தமிழ்த் தரப்பின் தலைமைகள் அன்றே கூறின. ஆக, இவர்கள் சொல்லித்தான் இந்த அரசு எமது மக்களுக்கு எதையுமே செய்யாதிருக்கின்றது என்று தானே எமது மக்களும் நம்புவார்கள்.

சொந்தக் காணி நிலங்களைக் கேட்டு எமது மக்கள் இன்னமும் நடுத்தெருவில் நிற்கின்றார்கள். 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி அவர்களது உறவுகள் இன்னமும் கண்ணீருடன் காத்திருக்கின்றார்கள். காணமற்போன உறவுகளைக் கண்டறிவதற்காக அவர்களது உறவுகள் இன்னமும் நடுத்தெருவில் காத்துக் கிடக்கின்றனர்.

கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக தங்களது தொழிற்துறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வருகின்றன. நியாயமான விலையோ, ஒழுங்கான சந்தை வாய்ப்புகளோ இன்றி எமது விவசாய மக்கள் தங்களது உற்பத்திகளுடன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு கையால் கொடுத்து, மறு கையால் பறிப்பது போல், விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற எமது மக்களின் காணி, நிலங்கள் வெவ்வேறு பெயர்களால் மீளவும் பறிக்கப்பட்டு வருகின்றன.வேiலாவய்ப்புகள் இன்றி ஆயிரக் கணக்கான எமது பிள்ளைகள் காத்துக் கிடக்கின்றனர்.

கைத்தொழிற்துறை முன்னேற்றங்கள் அறவே இல்லாத நிலையில் எமது மக்கள் தொழில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிகின்றனர்.படுகடன்கள் அதிகரித்து, தற்கொலையை நாடும் அளவிற்கு எமது சமூகம் தள்ளப்பட்டு வருகின்றது.இவை எல்லாம் இன்று எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளாகவும், அடிப்படைப் பிரச்சினைகளாகவும் அப்படியே தேங்கி நிற்கின்றன. 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலகட்டங்களிலும் அதன் பின்னராக கடந்த பொதுத் தேர்தல் காலகட்டங்களிலும் எமது மக்களின் மேற்படி பிரச்சினைகள் தீர்க்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இன்று இருக்கின்ற அரசாங்கத்தாலும், இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாகக் கூறிக் கொள்கின்ற தரகுத் தமிழ் அரசியல் தரப்பாலும் அந்த வாக்குறுதிகள் எமது மக்களுக்கு வழங்கப்பட்டன.

தங்களது நியாயமான கோரிக்கைகளைக் கேட்டு, அவற்றை நிறைவேற்றித் தருவார்கள் என நம்பி வாக்களித்திருந்த எமது மக்களின் கைகளில் நான்கு வருடங்கள் சென்ற நிலையில் வெறும் கடன் அட்டைகளே கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குக் கூட ஒருவரிடம் இருந்து ஐந்நூறு ரூபா வீதமாக வசூலித்துக் கொண்டுள்ளீர்கள்.

வெறும் அறிக்கை அரசியல் செய்து கொண்டிருக்கின்ற தமிழ்த் தரப்பு போல், இங்கே வெறும் அறிக்கை அரசாங்கமே நடந்து கொண்டிருப்பதுபோல்தான் எமது மக்கள் காண்கின்றனர்.ஒரு வண்டி. இரண்டு சாரதிகள். இரண்டு பேருமே தான், தான் செல்வதுதான் சரி என்றால், இறுதியில் அதில் பயணிப்போரின் நிலை தான் இன்று இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

திக்குத் தெரியாத காட்டில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களது துயரங்களை யாரிடம் போய்ச்; சொல்வதென்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் பிரிந்திருக்கலாம். ஆளுங் கட்சியும், எதிர்க்கட்சியும் பிரிந்திருக்கலாம். அரசாங்கமே பிரிந்து நின்றால், எப்படி இந்த நாடு முன்னேறப் போகின்றது? என்பது தொடர்பில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

(நாடாளுமன்றில் நடைபெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்…)

தரகு அரசியல் தமிழ்த் தலைமைகளின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்களே! 

ஸ்திரமற்ற நிலையிலான அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதானது இந்த நாட்டு மக்களுக்குச் சாத்தியமான வழிவகைளை ஏற்படுத்திக் கொடுக்க இயலாமல் போகின்றது என்பதற்கு இன்று பல்வேறு விடயங்கள் உதாரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. 

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா? அல்லது எதிராக வாக்களிப்பதா என்ற வாதப்பிரதி வாதங்களுக்கு அப்பால்,... தமிழ் பேசும் மக்களுக்கு இந்த அரசின் மீதும், இந்த அரசினைக் கொண்டுவந்ததாகக் கூறும் தமிழ்த் தரப்பினர் மீதும் இருக்கும் நம்பிக்கையீனங்கள் குறித்தே இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இன்று எமது மக்கள் சந்தித்து வரும் பலத்த ஏமாற்றங்களுக்கு யார் காரணம் என்பது குறித்தே நான் பேச விரும்புகிறேன். தமக்கு வாக்களித்தால் தமிழர் வாழ்வு விடியும் என்று தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள்!...

வேதாளாம் குடி புகுந்த வீடு கூட விடியும்! ஆனாலும் அங்கு வெளிச்சம் வராது!... இந்த உண்மையைக் கூட உணர மறுத்து, தரகு அரசியல் தமிழ்க் கட்சி தலைமைகளின் தகிடு தத்தங்களும், மலையைப் புரட்டி,.. மா கடலையும் தாண்டி,.. சொர்க்க வாசலுக்குத் தமிழர்களை அழைத்துச் செல்வோம் என்ற அடைய முடியாத ஆசைகளுக்கும்,... வாக்களித்து ஆணை வழங்கிய தவறை இன்று தமிழ் பேசும் மக்கள் உணரத்தொடங்கி விட்டார்கள். 

இது தமிழ் பேசும் மக்களின் வாக்குப்பலத்தில் நிலைத்திருக்கும் அரசு! அந்த வாக்குப் பலத்தை அரசுக்குப் பெற்றுக் கொடுத்தவர்கள் யார்?.. அவ்வாறு தமிழர்களின் ஆதரவை பெற்றவர்களும், இந்த ஆட்சியைத் தொடர்ந்தும் தக்க வைத்து வருபவர்கள்,.. அரசிடமிருந்து தமிழ் பேசும் மக்களுக்கு எதைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்?..

இந்த அரசு ஆட்சி ஏறிய போது,. அதற்கு ஆதரவளித்த தரகு அரசியல் தமிழ் கட்சிகள் தமது அரசியல் பலத்தை வைத்து பேரம் பேசி பெற்றதுதான் என்ன?..

ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த போதுகூட ஓடிச்சென்று இந்த அரசைக் காப்பாற்றி தாம் இன்றும் ஒட்டுண்ணிகளே என்பதை நிரூபித்தவர்களே,.. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாம் வாக்குறுதி அளித்த தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுத்தார்களா?..

(நாடாளுமன்றில் நடைபெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்…)

தமிழ் மக்கள் முன்னால் 3 அரசியல் உள்ளது - தரகு அரசியல், சவப்பெட்டி அரசியல், நடைமுறைச்சாத்தியமான அரசியல்!

தமிழ்த் தரகு அரசியல் கட்சிகளை மன்னிப்போம் மறப்போம் என்று தமிழ் மக்கள் சிலவேளை எண்ணியிருந்தாலும்,,.. இன்று வந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்திலாவது தமக்கு வாக்களித்த தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளுக்காக எதையாவது பேரம் பேசி பெறுவார்களா என்பதையே தமிழ் பேசும் மக்கள் எதிர் பார்க்கிறார்கள். 

தமது கட்சி மாநாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மூன்று மாதகால அவகாசம் கொடுத்திருக்கிறார் தமிழ் தரகு அரசியல் கட்சியொன்றின் தலைவர் ஒருவர். அடுத்த சில நாட்களில் வரப்போவது அரசின் மீதான நம்பிக்கையில்லா பிரேரனை என்பதை தெரிந்து கொண்டும்,.. அவர் அரசிற்கு மூன்று மாத அவகாசம் கொடுத்தது,  அரசின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எந்தவித அரசியல் பேரமுமின்றி ஆதரிப்பதற்கான அத்திவாரமா?..

அல்லது,.. இன்னும் சில மாதங்களில் அடுத்த தேர்தல் வரப்போவதைத் தெரிந்து போராட்டம் வெடிக்கும் என்ற அவரது வெடிப்புளுகின் வான வேடிக்கையா?..

நாம் ஓரளவு அரசியல் பலத்தோடு இருந்த போது எமது அரசியல் அழுத்தத்தாலும், நல்லிணக்க சமிஞையாலும் உருவாக்கப்பட்ட சந்திரிக்கா அரசு கால அரசியல் தீர்வுத்திட்டத்தை இந்த நாடாளுமன்றத்தில், எதிர்த்து எரித்தவர்களில், இந்தத் தரகு அரசியல் தமிழக்; கட்சித் தலைவர்களும் உள்ளடங்குகின்றனர். 

அந்த வரலாற்றுத் தவறுக்கு செய்யும் பாவ விமோசனமாக இவர்கள் இனி எதைத்தான் எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இன்று தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது மூன்று வகையான அரசியல் வழிமுறைகள்தான்.

முதலாவது,.. தரகு அரசியல்,..

தீர்விருப்பதாகச் சொல்வார்கள், ஆனால் பிரச்சனைகளைத் தீராப் பிரச்சனைகளாக வைத்தக் கொண்டு, தமிழ் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் தரகு வேலை செய்து கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளைத் தாமும் அபகரித்து, அரசுக்குப் பெற்றுக்கொடுத்து அதன் பெயரால் தமது சொந்தச் சலுகைகளை மட்டும் பெற்றுக்கொள்பவர்கள். 

இரண்டாவது,.. சவப்பெட்டி அரசியல்,...

இவர்களும் தீர்விருப்பதாக சொல்வார்கள்,.. ஆனால் அவர்களிடம் அதற்கான திட்டமும் இருக்காது,.. வழிமுறையும் இருக்காது. வெறுமெனவே உசுப்பேற்றும் அரசியலின் உச்சக்கட்டம் அவர்கள்தான். அதிகாரம் கிடைத்தால் அவர்களும் தரகு அரசியலின் அதே குட்டையில் ஊறுவது தவிர இவர்களுக்கு மாற்று இல்லாதவர்கள். 

மூன்றாவது,.. நடைமுறைச்சாத்தியமான அரசியல்,..

இதற்குத் தீர்வுத் திட்டமும் உண்டு, அதை அடைந்து கொள்ளும், கொள்கைத் திட்டமும், வேலைத்திட்டமும் உண்டு, அதனூடாக அரசியல் உரிமைக்கும், அபிவிருத்திக்கும், அன்றாடப் பிரச்சனைக்கும் தீர்வும் உண்டு.

இதுவே எமது நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிமுறையாகும், அந்த வழியில் சந்திரிக்கா அரசு காலத்தில் எமது ஓரளவு அரசியல் பலத்தை வைத்து சிறந்ததொரு அரசியல் தீர்வைக் கொண்டுவந்திருந்தோம். அது தவிர ஆட்சிகளின் போது எமக்குக் கிடைத்த அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு தமிழ்த் தலைமைகளால் சாதிக்க முடியாத அளவிற்கு அரசியல் தீர்வு உள்ளடங்கலாக அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முடிந்;தளவு சாதித்திருந்தோம்,.. இனி வரும் காலங்களில் எமக்குக் கிடைக்கப்போகும் அரசியல் பலத்தை வைத்து சகலதையும் சாணக்கிய தந்திர வழிமுறையில் சாதிப்போம்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அரசுக்கு எதிரானது என்பதற்கு அப்பால்,.. இந்த அரசைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்பாத தமிழ்த் தரகு அரசியல் கட்சிகளுக்கும் எதிரானது என்றே தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். அந்தவகையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முடிவு எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை அறிந்துகொள்வதற்கு ஒரு தேர்தலுக்குச் செல்வதுதான் இப்போதைக்கு உரிய ஒரே தீர்வு என்றே கருதுகின்றேன். 

அதன்போது மக்கள் யாருக்கு ஆணை வழங்குகின்றார்களோ, அவர்கள் ஒரு ஸ்திரமான ஆட்சியை அமைத்துக் கொள்ளட்டும். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. யார் ஆட்சி அமைத்தாலும், இந்த நாட்டு மக்களது பிரச்சினைகள் - குறிப்பாக புரையோடிப் போயுள்ள எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய முறையில், இந்த நாட்டை எவருக்கும் தாரை வார்த்துக் கொடுக்காத வகையில், இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மை கருதி செயற்படக்கூடியதாக அந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும் .

(நாடாளுமன்றில் நடைபெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்…)