Feb 28

புதுக்குடியிருப்பில் ஏழரை ஏக்கர் காணியை விடுவிக்கத் தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள  ஏழரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட இராணுவக்  கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள  ஏழரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட இராணுவக்  கட்டளை அதிகாரி  தெரிவித்துள்ளபோதும் விடுவிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் ஏழரை ஏக்கர் காணிக்குள் தங்களை அனுமதிக்கும் பட்சத்திலேயே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று புதுக்குடியிருப்பில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் ஆகியோர் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் கடந்த 3ஆம் திகதியிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.  

இதன்போதுஇ முல்லைத்தீவு இராணுவக் கட்டளை அதிகாரியால் மாவட்ட அரச அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில் புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்கள் 29 பேரினுடைய 7.75 ஏக்கர் காணி 2 வாரத்தில் விடுவிக்கப்படும் என்றும் மீதமுள்ள 29 பேரின் 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்றும் பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுகின்றது எனவும் எனவே போராட்டத்தைக் கைவிடுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதற்கு புதுக்குடியிருப்பு மக்கள் உடன்படாத நிலையில் 7.75 ஏக்கர் காணிக்குள் தங்களை அனுமதிக்கும்  பட்சத்திலேயே தாம் போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.  

புதுக்குடியிருப்பு பொதுமக்களால் ஆரம்பிக்கப்பட்ட மண்மீட்பு அறவழிப் போராட்டம் இன்று புதன்கிழமை  26ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அதேவேளை புதுக்குடியிருப்பு மக்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 16 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.