Jul 24

சட்டவிரோத எல்லை தாண்டல்: கியூபெக்கில் அதிகரிப்பு

சட்டவிரோதமாக எல்லைகளைக் கடந்து கனடாவுக்குள் புகலிடக் கோரிக்கையாளர்கள் நுளையும் சம்பவங்கள் தற்போது மனிட்டோபாவை விடவும் கியூபெக்கில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கனேடிய மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையில், கடந்த யூன் மாத்தில் மனிட்டோபாவை விடவும் கியூபெக்கின் ஊடாக அதிக புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாக நாட்டினுள் நுளைந்துள்ளமை பதிவாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த மாதத்தில் கனடாவுக்குள் இவ்வாறு சட்டவிரோதமாக எல்லைகள் ஊடாக நுளைந்து, கனேடிய மத்திய காவல்துறையின் கண்காணிப்பினுள் சென்றவர்களின் எண்ணிக்கை 884 எனவும், மே மாதத்தில் அந்த எண்ணிக்கை 742ஆக இருந்தது எனவும் அந்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த மாதத்தில் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்தவர்களில் 781 பேர் கியூபெக்கில் அடையாளம் காணப்பட்டதாகவும், 63பேர் மட்டுமே மனிட்டோபாவில் அடையாளம் காணப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தவிர பிரிட்டிஷ் கொலம்பியாவில் 39 பேரும், அல்பேர்ட்டா, நியூ பிரவுன்ஸ்விக், சாஸ்காச்சுவான் மற்றும் ஒன்ராறியோ ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் இவ்வாறு கடந்த மாததம் சட்டவிரோதமாக எல்லைதாண்டி வந்தமை அறியப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான வழிகளில் எல்லை தாண்டி வந்தோரில் அனேகமானோர் அரசியல் தஞ்சம் கோரி கனடாவில் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.