Jul 24

கறுப்பு ஜூலை நினைவாக லண்டனில் இளையோர்களால் ஓவியக் கண்காட்சி நடாத்தப்பட்டது.

கறுப்பு ஜூலை நினைவாக லண்டனில் இளையோர்களால்  ஓவியக் கண்காட்சி  நடாத்தப்பட்டது.

கடந்த காலத்தை புரட்டிப் பார்ப்போமேயானால் 1958 /1977 என இனப்படுகொலைகள் எமக்கெதிராக அரங்கேற்றப் பட்டது. அந்தக் காலகட்டதில் தமிழர்கள் அகிம்சை வழியில் உரிமைப் போராட்டங்களை நடத்தினார்கள். அவ் இனப்படுகொலைகளின் தொடர்ச்சியின் உச்சகட்டம் 1983அம் ஆண்டு யூலை 23ல் இருந்து 27 வரை திட்டமிட்டு காட்டுமிராண்டி தனமாக நிறைவேற்றப் பட்டது.

24ஆம் திகதி தமிழர்கள் வாழ்வின் இருண்ட காலம் எனப்படும் கறுப்பு யூலையின் தொடக்க நாள். 25ஆம் திகதி வெலிக்கடை சிறையில் பெரும் கொடூரம் நிறைவேற்றப்பட்டது இலங்கை இராணுவமும் சிங்கள இனவெறி காடையருமாக இணைந்து சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை ஈவிரக்கம் இன்றி கொன்றளித்தனர்.

ஏறத்தாள 3000 பேர் வரை படுகொலை செய்தும். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபல்யமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அறைகூவல் ஜெயவர்த்தனவால் விடுக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூறையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை.

இந்த யூலை மாதமானது தமிழ் மக்களின் ஆத்மாவில் என்றும் ஆறாத கடும் வடுவாக இன்றும் பதிவாகி உள்ளது. 2003 ஆம் ஆண்டில் லண்டன் BBC யின் பதிவேட்டில் பிரான்சிஸ் ஹரிசன் கூறுகையில் போரின் தொடக்கத்திற்கு அத்திவாரம் இட்டதே இந்த கறுப்பு ஜூலை தான் என்று கூறியுள்ளார்.

1983 யூலை மாதக் காலபகுதிகளில் ஐக்கியதேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது 2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாள் நடந்தேறிய இனப்படுகொலையின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சியில் இருந்தது , எனவே எந்த இனவாத சிங்கள கட்சிகளாக இருந்தாலும் அவர்கள் தமிழ் இனஅழிப்பு என்னும் கோற்ப்பாட்டில் ஒன்றாகவும் நேர்த்தியாகவும் செயல்ப்பட்டு வருகின்றனர்.

இதன் நினைவாக இன்று லண்டனின் மத்திய பகுதியில் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சியில் பல்வேறு இனத்தவர்கள் கலந்துகொண்டார்கள். நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற கண்காட்சியில் முதலில் மாணவர்களால் மற்றும் இளையோர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் விளக்கங்களுடன் வைக்கப்பட்டிருந்தன, இரண்டாவது பகுதியில் கறுப்பு ஜூலை இனப்படுகொலை சார்ந்த மூன்று நிமிட காணொளி காண்பிக்கப்பட்டது,

மூன்றாவது பகுதியில் பிரிந்து இருக்கும் எழுத்துக்களை ஒன்றுபடுத்தி படமாக்குதல் பின்பு அதில் கறுப்பு ஜூலை சம்பவத்தினை பார்த்தவர்களின் கருத்துக்கள் உள்ளடங்கியிருப்பதை வாசிக்கலாம், நான்காவது பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் அவரவர் விரல் அடையாளத்தை சிவப்பு நிறத்தில் வைத்தல், இவ் பதாகை கறுப்பு ஜூலையில் இறந்த மக்களின் எண்ணிக்கை வரும் வரை அதனை ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக வைக்கப்படும்.

இவ் ஓவியக் கண்காட்சி லண்டனின் மத்திய பகுதியில் இடம்பெற்றதால் பல்வேறு வேற்றின மக்களை கவரக்கூடியதாக இருந்தது. தமிழ் இளையோர்களின் ஒவ்வொரு சிறிய போராடடமும் எமக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை அனைத்துலகத்துக்கும்  எடுத்துரைக்கும்.