Jul 23

நெடுஞ்சாலையில் தீப்பற்றிய வாகனம்: ஒருவர் பலி

நெடுஞ்சாலை 400இல், வியாழன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய வழித்தடத்தில், வோன் பகுதியில், றுதஃபோர்ட் வீதிக்கு அருகே நேற்று முன்தினம் இரவு 7.45 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

நெடுஞ்சாலையின் வாகனங்கள் பயணிக்கும் வழித்தடத்தில் வாகனம் ஒன்று பழுதடைந்து நின்ற வேளையில், அந்த வழியே வந்த பிறிதொரு வாகனம் அதன்மீது மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, வாகனங்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பழுதடைந்த நிலையில் நின்று மோதுண்ட வாகனத்தின் சாரதி, பாரதூரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மற்றைய வாகனத்தின் சாரதியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவருக்கு ஏற்பட்ட காயங்கள் ஆபத்தானவை அல்ல என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசமான விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், இந்த விபத்தினை நேரில் கண்டோரிடம் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே விபத்து இடம்பெற்ற வேளையிலோ, அல்லது அதற்கு சற்று முன்னதாகவோ பின்னரோ அந்த வழியே பயணித்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.