Mar 28

நான் அரசியல்வாதியல்ல: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவில்லை: கோதா

அரசிலுக்கு வருவதற்கு விருப்பிமில்லை என்ற போதிலும் நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை தவறவிடுவதில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இலங்கையிலுள்ள சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தான் ஒரு அரசியல்வாதியல்ல என்று கூறினார். தனக்கு அரசியல் தெரியாது என்பதுடன், அரசியல் நடவடிக்கைகளில் தான் கலந்து கொண்டதில்லை என்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரவேசத்தை ஒரு உதாரணமாக எடுத்து கூறிய கோட்டாபய ராஜபக்‌ஷ, ட்ரம்பின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கண்கானித்து வருவதாக கூறினார். 

அத்துடன், ஊடகவியலாளர்களை கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொள்ளல், கொலை செய்தல் போன்ற செயற்பாடுகளுக்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று இருந்ததாக முன்னாள் இரணுவத்தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது. 

இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்த கோட்டாபய ராஜபக்‌ஷ, அது அடிப்படையற்ற அரசியல் ​நோக்கம் பொண்ட குற்றச்சாட்டு என்று கூறினார். இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அவ்வாறான குழுவொன்று இருந்தால் அதன் பொறுப்பை இராணுவத் தளபதியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

இராணுவப் புலனாய்வுப் பிரிவு இராணுவத் தளபதியின் கீழ் இருக்கவில்லை எனக் கூறுவது நகைச்சுவையானது என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இந்த சந்திப்பில் கூறியுள்ளார்.