Jul 22

யுத்தமின்றி சத்தமின்றி சீரழிகிறது ஒரு சமூகம்

மனுக்­குலம் தோற்றம் பெற்ற காலத்­தி­லி­ருந்தே அந்­தந்த கால கட்­டத்­துக்கு ஏற்றாற் போன்று மனித கலா­சா­ரமும் தொற்­றிக்­கொண்டு மனித வாழ்க்­கை­யோடு பின்னிப் பிணைந்­து­கொண்­டது. ‘மனித நாக­ரிகம்’ என்­ற­தான வார்த்தை ஒன்று அறி­மு­க­மா­வ­தற்கு முன்­பாக மனி­தனால் அவ்­வப்­போது அறி­யப்­பட்ட கலா­சா­ரங்­களே அன்று அவ­ர­வ­ரது கல்­வி­யா­கவும் இருந்து வந்­தது எனலாம்.

மனித நாக­ரிகம் வெளிப்­பட்­டதன் பின்னால் கலா­சாரம், கல்­வித்­துறை, தனி­ம­னித சுதந்­திரம், அடிப்­படை உரிமை என்ற அனைத்து வகை­யான அம்­சங்­களும் சருகாய் ஆகிப்­போ­யின என்­ப­துதான் உண்மை. மொழி உரிமை என்ற பெறு­மதி மிக்­க­தான சொற்­ப­த­மா­னது கலா­சாரம் என்ற பதத்­துக்குள் சங்­க­மித்­தி­ருக்­கின்ற கார­ணத்தால் அவை­யி­ரண்டும் பாது­காக்­கப்­பட வேண்­டி­ய­வை­க­ளா­கின்­றன. எனினும் நாக­ரிகம் என்ற சொல் மருவி நவ­நா­க­ரிகம் என்ற சொல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டா­தாலோ என்­னவோ தமிழ் சமூ­கத்தின் குறிப்­பாக மலைய தமிழ் சமூ­கத்தின் இருப்பும் எதிர்­கா­லமும் அடகு வைக்­கப்­பட்­ட­தா­கி­விட்­டது.

வடக்கு – கிழக்­கினை எடுத்துக் கொண்டால் அங்­குள்ள தமி­ழர்­க­ளி­டத்தில் தமிழ்­மொழி உயிர்­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. தமிழ் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றது. தமிழ் மொழி போற்றி புக­ழப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் மலை­யகத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் தமிழும் தமி­ழர்­களும் மொழி ரீதி­யா­கவும் கலா­சார ரீதி­யா­கவும் படு­கொலை செய்­யப்­ப­டு­வது மறை­மு­க­மா­கவும் அதே­நேரம் இயல்­பா­கவும் அரங்­கேறி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

தாலாட்டுப் பா என்­பது உள்­ளத்­தையும் சிந்­தை­யையும் சொக்­க­வைக்கும் ஒருவித அற்­புத சக்­தியை தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது என்­பதை எவ­ராலும் மறுத்துக் கூறு­வ­தற்­கில்லை. கல்வி அறிவே இல்­லாத பாட்­டி­யரின் அந்த வரிகள் பல்­வேறு அழுத்­த­மான அர்த்­தங்­க­ளையும் அதே­நேரம் இனி­மை­யையும் தரு­கின்­றவை.

இன்று மலை­ய­கத்தின் அநேக பிர­தே­சங்­களில் பொக்கை வாய்க்­கி­ழ­வி­களின் தாலாட்டும் கிடை­யாது. பாரதப் புல­வனின் பாப்பாப் பாட்டும் கிடை­யாது என்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. இன்பம் தரும் தமி­ழா­னது இன்­றைய கால கட்­டத்தில் மெது­வான நஞ்­சூட்­ட­லுக்குள் ஆட்­பட்டு மெது­வாக செத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது என்று கூட கூறலாம்.

இங்கே கூற விளை­வது என்­ன­வென்று பார்ப்­போ­மானால், மலை­ய­கத்தின் வாச­னை­யோடு ஒட்­டிக்­கொண்­டி­ருக்கும் களுத்­துறை, காலி, மாத்­தறை, இரத்­தி­ர­ன­புரி, குரு­ணாகல் மற்றும் மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­களில் தமிழ் மொழி எவ்­வாறு சிறிது சிறி­தாக படு­கொலை செய்­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. தமிழ் மக்கள் எவ்­வாறு அதற்கு உடந்­தை­யாக இருக்­கின்­றனர். இதில் இடம்­பெ­று­கின்ற அச­மந்தப் போக்­குகள் தான் என்­னென்ன என்­பதைப் பற்றி ஆராய்­வ­தாகும்.

இன்­றைய நிலையில் மொன­ரா­கலை, இரத்­தி­ன­புரி, மாத்­தறை, காலி, களுத்­துறை மற்றும் குரு­ணாகல் ஆகிய மாவட்­டங்­களில் செறிந்து வாழும் தோட்டத் தொழி­லா­ளர்கள் தமது தாய்­மொ­ழியை மறந்­த­வர்­க­ளா­கவும் மாற்றான் மொழியை அணு­கியும் வாழ்ந்து வரு­வதைக் காணக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

மேலே குறிப்­பிட்டுக் கூறக்­கூ­டிய மாவட்­டங்­களில் வாழும் தொழி­லா­ளர்கள் தமது பிள்­ளை­களின் எதிர்­காலம் எவ்­வாறு அமைய வேண்டும் என்று திட்­ட­மி­டு­கின்­ற­வர்­க­ளாக இருந்­தாலும் அதனை சரி­யான வழி­யிலும் நேர்த்­தி­யான முறை­யிலும் செயற்­ப­டுத்­து­வ­தற்கு முட்­டுக்­கட்­டை­யி­டப்­பட்­ட­வர்­க­ளாக ஆகிப்­போ­யுள்­ளனர் என்று கூறு­வது மிகப்­பொ­ருத்­த­மா­கி­றது.

மேற்­படி மாவட்­டங்­களில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் தமிழை வளர்ப்­ப­தற்­கான எந்­த­வி­த­மான ஏதுக்­களும் இல்­லா­துள்­ள­மையே இதற்குப் பிர­தான கார­ண­மாகும். தமிழ் மொழிப்­பா­ட­சா­லைகள் இல்லை. ஆல­யங்கள், சன­ச­மூக நிலை­யங்கள் இல்­லா­துள்­ளமை, நூல­கங்கள் இருந்­தாலும் கூட தமிழ்­மொழி அங்கு புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளமை என்­ற­வா­றான கார­ணங்­களை அடுக்கிச் செல்ல முடியும்.

இங்கு பெயர்­கூறி குறிப்­பிட்­டுள்ள மாவட்­டங்­களில் பெருந்­தோட்ட மக்கள் வாழ்­கின்ற பிர­தே­சங்­களில் தமிழ் மொழி­மூல முன்­பள்­ளிகள் இல்லை. தமிழ் மொழி மூல பாட­சா­லை­களும் இல்லை. இப்­ப­டி­யான சூழ­லுக்குள் வாழ்­கின்ற தோட்டத் தொழி­லா­ளர்கள் தமது ஆசை மக­னையோ, அருமை மக­ளையோ சிங்­கள மொழி­யி­லான முன்­பள்­ளி­க­ளி­லேயே இணைத்து விடு­கின்­றனர். ஏனெனில் மூன்று வய­து­களை கடந்­துள்ள சிறு­வனோ, சிறு­மியோ முன்­பள்­ளிக்கு சென்றே ஆக­வேண்டும் என்­ற­தான நிலைமை உரு­வாக்­கப்­பட்­டு­விட்­டது. திணிக்­கப்­ப­டு­­கின்­ற­தான கல்­வி­மு­றை­க­ளுக்குள் வலிந்து தள்­ளப்­பட்­டுள்ள இன்­றைய கால­கட்­டத்தில் தமது பிள்­ளையின் எதிர்­காலம் குறித்து சிந்­திக்கும் அந்த அப்­பாவிப் பெற்றோர் அந்த சந்­தர்ப்­பத்தில் மாற்று மொழி என்­பது பற்றி சிந்­திப்­ப­தற்குப் பதி­லாக தமது பிள்ளை படிக்க வேண்டும் என்­பதை மாத்­தி­ரமே சிந்­திக்­கின்­றனர்.

தவிர்க்­கவே முடி­யாத நிலை­மை­களின் நிமித்தம் சிங்­கள மொழி­மூல முன்­பள்­ளியில் இணைத்­து­வி­டப்­ப­டு­கின்ற சிறு­வர்கள் அது முதல் சிங்­கள மொழி­யையே கற்­கின்­றனர். பாலர் பாட­சா­லையில் சிங்­கள மொழி கற்ற சிறு­வர்கள் முதலாம் தரத்­துக்கு இணையும் போதும் சிங்­கள மொழி பாட­சா­லைக்கே இணைக்­கப்­ப­டு­கின்­றனர்.

இவ்­வாறு வளர்­கின்ற சிறுவன் சமய பாட ரீதி­யா­கவும் பாதிப்­புக்­குள்­ளா­கின்றான். கிறிஸ்­தவ சிறு­வ­னா­கவோ அல்­லது இந்து சிறு­வ­னா­கவோ இருப்­பினும் மேற்­படி பிர­தே­சங்­களில் உள்ள சிங்­கள பாட­சா­லை­களில் இணையும் சிறு­வர்கள் சமய பாடத்­திற்­காக பௌத்த மத பாடத்தை கற்கும் நிலைக்கு தள்­ளப்­ப­டு­கின்றான்.

அண்­மையில் மத்­திய மாகா­ண­சபை உறுப்­பினர் சத்தார் மத்­திய மாகாண சபை அமர்­வொன்றில் உரை­யாற்­றி­ய­போது, கண்டி மாவட்­டத்தில் சில முஸ்லிம் பாட­சா­லை­களில் கற்­று­வரும் இந்து மாண­வர்­கள்­அங்கு இந்து சம­யத்­துக்­கான ஆசி­ரி­யர்கள் இல்­லா­ததால் அவர்கள் இஸ்லாம் பாடத்தை கற்க வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும் இந்து சமய ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தா­கவும் குறை­பட்­டிந்தார்.

இது ஒரு புற­மி­ருக்க சிங்­க­ள­வர்கள் சூழ­வுள்ள பிர­தே­சங்­களில் வாழும் தமிழ் மக்கள் தம்மை தமது கலா­சாரம், மொழி உரிமை ஆகிய அனைத்­தி­லி­ருந்தும் விடு­வித்துக் கொண்­ட­வர்­களைப் போன்று முற்­று­மு­ழு­தாக சிங்­களக் கலா­சா­ரத்­துக்கு மாறி வரு­கின்­றனர்.

அணியும் ஆடைகள், பேச்சு, நடை பாவ­னைகள், சமய ரீதி­யி­லான விட­யங்கள் என அனைத்து விட­யங்­க­ளிலும் தமிழ் கலா­சா­ரமும் உரி­மையும் பறிக்­கப்­பட்­ட­வர்­க­ளா­கவும் சிங்­கள கலா­சா­ரத்­துக்குள் வலிந்து புகுத்­தப்­பட்­ட­வர்­க­ளா­கவும் ஆக்­கப்­பட்­டுள்­ளனர். இங்­குள்­ள­வர்கள் பிறப்பால் தமி­ழர்­க­ளாக இருந்­தாலும் சிங்­கள்­பெ­யரே சூட்­டப்­ப­டு­கின்­றனர். இவர்கள் தமி­ழர்­கள்தான் என்று அறிந்­து­கொள்­வ­தற்கு எந்த அறி­கு­றி­யையும் இவர்­க­ளி­டத்தில் காண­மு­டி­யாது.

இவ்­வா­றான பிர­தே­சங்­களை பிறப்­பி­ட­மா­கவோ அல்­லது வசிப்­பி­ட­மா­கவோ கொண்­டி­ருப்போர் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இங்­குள்ள தமி­ழர்கள் இருவர் சந்­தித்துப் பேசிக்­கொள்­கின்ற போது தமது தாய் மொழியை விடுத்து சிங்­கள மொழியில் உரை­யாடிக் கொள்­கின்­றனர். இந்த நிலை­மையை தலை­ந­கரில் அதி­க­மாகக் காண­மு­டியும். இரு சிங்­க­ள­வர்கள் சந்­தித்துக் கொள்ளும் போது தமிழ் மொழியில் பேசிக் கொள்­வது கிடை­யாது. ஆனால் இரு தமி­ழர்கள் சந்­திக்கும் போது சிங்­கள மொழியில் பேசிக்­கொள்­கின்­றனர். அப்­ப­டி­யானால் தமிழ்­மொழி மெது­வாக செத்து மடிந்து கொண்­டி­ருக்­கின்­றது என்று அர்த்தம் கொள்­ள­லா­மென்று சிந்­திக்கத் தோன்­று­கி­றது.

மேலே குறிப்­பிட்டுக் கூறப்­பட்­டுள்ள மாவட்­டங்­களில் தமிழ் மொழியும் தமிழ் கலா­சா­ரமும் அருகிச் செல்­கின்­ற­ன. பெற்­றோரும் சிங்­களத் தழு­வல்­களில் ஈர்க்­கப்­பட்­ட­வர்­களாய் ஆகி­விட்­டனர். இந்த நிலைமை நீடித்துச் செல்­கின்­றது. இது நிலைத்­து­வி­டு­மாக இருந்தால் காலி, களுத்­துறை, மாத்­தறை, இரத்­தி­ன­புரி, குரு­ணாகல், மொன­ரா­கலை உள்­ளிட்ட மாவட்­டங்­களில் தோட்­டப்­பு­றங்­களைச் சேர்ந்த தமி­ழர்­களின் எதிர்­காலம் என்­ன­வாகும் என்­பது பற்றி சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தை எடுத்துக் கொண்டால், அங்கு வரு­டந்­தோறும் தமி­ழர்­களும் குறிப்­பாக தோட்டத் தொழி­லா­ளர்­களும் சிங்­க­ள­வர்­களும் மோதிக்­கொள்ளும் நிலைமை காணப்­ப­டு­கி­றது . இதே நிலைதான் களுத்­துறை, மத்­து­கமை பிர­தே­சங்­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றது.

அதே­வ­கையில் தான் சிங்­க­ள­மொழி மூல பாட­சா­லை­களில் கற்கும் தமிழ் மாண­வர்கள் ஏதோ­வொரு வகையில் இரண்டாம் தர மாண­வர்­க­ளா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றனர். பிறப்பால் தமி­ழ­ராக இருந்தும் வளர்ப்­பாலும் கலா­சா­ரத்­தாலும் மொழி­யாலும் சிங்­கள மயத்­துக்குள் தள்­ளப்­ப­டு­வ­தென்­பது அபத்­த­மா­ன­தாகும்.

ஒரு இனத்தின் மொழி, கலை, கலா­சாரம், மர­புக்கள், உரி­மைகள் என அனைத்தும் இங்கு நேர­டி­யா­கவோ அல்­லது முறை­மு­க­மா­கவோ மறக்­கப்­ப­டு­கின்­றன என்­பதை ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும்.

இலங்கை அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு என்று 30முதல் 40 வரு­டங்­க­ளுக்கும் முன்­ப­தா­கவும் கற்­பிக்­கப்­பட்­டது. ஆனால் பல தசாப்­தங்கள் கடந்து இன்­றைய நிலை­யிலும் இலங்கை அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு என்றே வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யெனில் எமது நாடு இன்­னுமே அபி­வி­ருத்­தியை நோக்கி நக­ர­வில்லை என்று அர்த்தம் கொள்­ள­லாமா. இல்­லா­விட்டால் எமது நாடு தன்­னி­றைவு அடை­வ­தற்கு இன்னும் எத்­தனை தசாப்­தங்கள், தலை­மு­றைகள் கடக்க வேண்­டுமோ என்­பது புரி­யா­தி­ருக்­கின்­றது.

மலை­யக அர­சி­யலை எடுத்துக் கொண்டால் பிர­தேச சபை­க­ளிலும், மாகாண சபை­க­ளிலும், பாரா­ளு­மன்­றத்­திலும் பாரி­ய­தொரு மக்கள் பிர­தி­நி­தி­களைக் கொண்­டி­ருப்­ப­தாக பேசி மார்­தட்டிக் கொள்­கின்­றனர். மக்கள் பிர­தி­நி­தி­களின் குறிப்­பாக மலை­யக மக்­களின் பிர­தி­நி­தி­களின் எண்­ணிக்­கையை இன்­னு­மின்னும் அதி­க­ரிக்க வேண்டும் என்ற தொனியில் மேடை­போட்டு கூவி வரு­கின்­றனர். மக்கள் பிர­தி­நி­திகள் குவிந்து என்ன பயன்? மக்­க­ளுக்கு என்ன இலாபம்? இங்கு தமது சமூகம் ஒரு­வி­த­மான சீர­ழி­வுக்குள் சிக்கிக் கொண்டு மீள முடி­யா­தி­ருக்கும் போது பிர­நி­தித்­துவ அதி­க­ரிப்பு என்ன செய்­தி­ருக்­கி­றது. இனியும் என்­னதான் செய்து விடப்­போ­கின்­றது.

மலை­ய­கத்தில் அர­சியல் பணி செய்­வோரும் புத்தி ஜீவிகள் என்­ற­ழைக்­கப்­படும் கூட்­டத்­தாரும் சமூக சிந்­த­னை­யா­ளர்­களும் ஏன் மேற்­படி மாவட்­டங்­களில், பிர­தே­சங்­களில் இடம்­பெற்­று­வரும் இன, மொழி, கலா­சார அழி­வுகள் தொடர்பில் வாய் திறக்­கா­தி­ருக்­கின்­றனர்.

புத்­தி­ஜீ­விகள் எனப்­ப­டுவோர் அவ்­வப்­போது அர­சாங்­கத்­துக்கும், அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் நல் ஆலோ­ச­னை­களை வழங்க முடியும். அதற்­காக ஊட­கங்­களை பிர­தா­ன­மாகக் கொண்டு செயற்­பட முடியும். ஆனால் அவை இடம்­பெ­று­கின்­ற­னவா?

இங்கு குறித்துக் காட்­டப்­பட்­டுள்ள மாவட்­டங்­களில் தமிழ் மக்கள் வாழும் பிர­தே­சங்கள், தோட்­டப்­பு­றங்கள், எந்­த­ளவில் அறி­யப்­பட்­டுள்­ளன, எந்­த­ளவில் தக­வல்கள் திரட்­டப்­பட்­டுள்­ளன, குறைப்­பா­டுகள் என்ன, நிறை­வுகள் தான் என்ன, சவால்கள் எவை என்­ப­தை­யெல்லாம் தேடிப்­பார்க்கும் போக்கு எவ­ருக்கும் இல்லை. குறைந்­த­பட்­ச­மாக இந்­நி­லை­மைகள் தொடர்பில் பேசு­வது கூட கிடை­யாது. அப்­ப­டி­யென்றால் ஒரு பகு­தியைச் சேர்ந்த தமிழ் சமூகம் சீர­ழி­வ­தற்கு இத்­த­கை­ய­வர்கள் துணை போகின்­ற­னரா என்­பதைப் பற்றி சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

ஒரு சமூகம் சீர­ழி­வ­தற்கு பாரிய தவ­றுகள் இழைக்­கப்­ப­டு­கின்­றன. யுத்­தத்தால் வடக்கும் கிழக்கும் சீர­ழிக்­கப்­பட்­டது. ஆனாலும் யுத்­த­மு­மின்றி, சத்­த­மு­மின்றி மலை­யகத் தமி­ழர்கள் சீர­ழிக்­கப்­ப­டு­கின்­றனர்.

தமிழ் மொழி மூல பாலர் பாட­சா­லைகள், தமிழ் மொழி மூல பாட­சா­லைகள் பற்றி சிந்­திக்­காமை இங்கு பாரிய தவ­றா­கி­றது. அதே­போன்று பெருந்­தோட்டப் பாட­சா­லைகள் தானே என்­ற­தொரு அலட்­சியப் போக்கும் மற்­றொரு தவ­றா­கி­றது.

சரி­யான தர­வு­களை திரட்­டா­ததும், தேவை­களை அறிந்து அதனை நிவர்த்­திப்­ப­தற்கு தகுந்த ஆலோ­ச­னை­களை எடுத்­து­ரைக்­கா­ததும் அதி­கா­ரி­க­ளு­டைய தவ­று­க­ளா­கின்­றன. தமிழ் மொழிப் பாட­சா­லை­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டு­கின்ற ஆசி­ரி­யர்கள் கஷ்டப் பிர­தேசம் என்ற கார­ணத்தைக் காட்டி அர­சியல் செல்­வாக்கில் இடம்­மாற்றம் பெற்றுச் செல்­வதன் மூல­மா­கவும் இவ்­வாறு பின் தங்­கிய பாட­சா­லை­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டு­கின்ற ஆசி­ரி­யர்கள் மற்றும் அதி­பர்கள் நேரத்தைக் கடத்தி விட்டுச் செல்­வதும் பெருந் துரோ­க­மாக பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கற்றுத் தேர்ந்த புத்­தி­ஜீ­வி­களை பொறுத்­த­மட்டில் அவர்கள் இவற்­றை­யெல்லாம் கண்டு கொள்­ளா­தி­ருப்­பதும், அவர்­க­ளது அக்­கறை காட்­டாத போக்கும் அவர்­க­ளது பல­வீ­னத்தை எடுத்துக் காட்­டு­கி­றது.

அர­சி­யல்­வா­தி­களைப் பொறுத்­த­வ­ரையில் செல்­லு­மி­டங்­க­ளி­லெல்லாம் பட்டாசு கொளுத்தி, மாலை அணிவித்து, பொன்னாடையும் போர்த்துவதற்கும், தூக்கி தோளில் சுமப்பதற்கும் தோட்டத் தொழிலாளர்கள் காத்திருப்பதை நன்கு அறிந்து வைத்திருப்பதால் சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொண்டு நழுவல் போக்குடன் அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் அரசியல்வாதிகளைப் பொறுத்தமட்டில் தமது தேர்தல் தொகுதிகளுக்கு காட்டுகின்ற அக்கறையை ஏனைய பிரதேசங்களுக்கு காட்டுவது கிடையாது.

இவ்வாறான தவறுகள் இழைக்கப்படுவதற்கு அனைத்து தரப்பினருமே உடந்தையாக இயங்கும் போது எவ்வாறு சமூக சீரழிவை தடுக்க முடியும் என்பது தான் கேள்வி. இந்த நிலைமைகள் தொடர்பில் சகலரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

மொனராகலை, மாத்தறை, காலி, குருணாகல், களுத்துறை மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருந்தோட்டங்களை ஆராய்ந்து அங்குள்ள இன, மொழி, கலை, கலாசார, கல்வி மற்றும் வாழ்க்கை நிலைவரங்களை ஆய்வுகளுக்குட்படுத்துவதும் அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்திப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.

தற்போது அங்குள்ள பிரதேசங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர் தமது பிள்ளைகளுக்கு சிங்கள பெயரை சூட்டி, சிங்கள மொழி பாலர் பாடசாலையில் இணைத்து, சிங்கள மொழிப் பாடசாலையில் கற்பித்து பெரியவனானாலும் அவனது தாயுரிமை மறுக்கப்பட்டவனாகி விடுகிறான். அவனது அடிப்படை உரிமை பறிக்கப்பட்டவனாகி விடுகிறான். மண்ணைத் தொடுகின்ற பிஞ்சுக்களின் அடிப்படை உரிமை பறிபோவதற்கு யாரும் துணை போக வேண்டாமே ஆகவே சிந்தனையுடனான செயலாற்றல் நன்மையை விதைக்கட்டும்.   

பசறையூர் 

ஜே.ஜி.ஸ்டீபன்