Mar 28

ஜெனீவா தீ்ர்மானம் மூலம் சதிவலைக்குள் இலங்கை: கம்பன்பில எச்சரிக்கை

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயற்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் 2 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசமானது இலங்கைக்காகக் பின்னப்பட்டுள்ள மிகப்பெரிய சதி வலை ஒன்றே  எனவும் இதனை அரசாங்கம் புரிந்துகொண்டு செயற்பட வேண்டுமெனவும் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

பத்தரமுல்லையிலுள்ள பிவித்துறு ஹெல உறுமய அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் இந்த ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்; 

"ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தமக்கு வெற்றி கிடைத்துவிட்டது எனக் கூறி, ஆனந்தக் கூத்தாடும் இலங்கை அரசாங்கம், 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற தமக்கு 2 வருடகால அவகாசம் வழங்கப்பட்டமையானது இராஜதந்திர ரீதியிலான வெற்றி எனவும்  தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், இதன் மூலம் சர்வதேசத்தின் ஊடாக மிகப்பெரிய சதிவலையொன்று இலங்கைக்கு எதிராகப் பின்னப்பட்டுள்ளமையை அரசாங்கம் இன்னும் உணரவில்லை.  

தற்போது நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இன்னும் சிறிது காலத்தில் நாட்டில் பாரியளவிலான பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். இதன்போது உலக வங்கியூடாக இலங்கைக்கு கடன் வழங்க மேற்குலக நாடுகள் முன்வரும். இவ்வாறு உதவிக்கு வரும் நாடுகள் சமஷ்டித் தீர்வை முன்வைத்தும் யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச நீதிமன்றமொன்றை அமைக்க வேண்டும் என்று கூறியும்  கடனுக்கான நிபந்தனைகளை விதிக்கும் நிலை வரும். அப்போது  நாட்டின் நிலைமையும் மோசமாக இருக்கும் காரணத்தினால் அரசாங்கமும் இந்நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டி வரும். 

இது போன்ற உதாரணத்திற்கு இந்தோனேசியாவைக் குறிப்பிடலாம். அங்கு 1998 ஆம் ஆண்டில்  பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, அந்நாட்டுக்குக் கடன் வழங்க முன்வந்த உலக வங்கியானது இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு திமோரை பிரிக்க வேண்டும் என்ற நிபந்தனையைத்தான் முதலாவதாக விதித்தது. இதன்போது மக்கள் நிலைமையை கருத்திற் கொண்டு,  கிழக்கு திமோர் இந்தோனேசியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. 

இது போன்ற நிலைமை இலங்கைக்கும் ஏற்படும். குறிப்பாக, தற்போது பாரிய பொருளாதார வீழ்ச்சி இல்லாத காரணத்திற்காக இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் புரிந்துகொண்டு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.  இதேவேளை அமைச்சர் சரத் பொன்சேகாவைக் கைது செய்ய வேண்டுமெனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் லசந்தவின் கொலை தொடர்பில் வாக்குமூலமளித்துள்ள  அமைச்சர் சரத் பொன்சேகா, தனக்கும் இக்கொலைக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துக் குழுவொன்றின் பெயரையும் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு சம்பவம் தொடர்பிலேயே சரத் பொன்சேகா 2017 இல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.  இத்தனை காலமாக அவர் இவ்விடயங்களை வெளிக்காட்டாமல் இருந்துள்ளார் என்பதே இதன் மூலம் உறுதியாகின்றது. இதற்காகவே அவரைக் கைது செய்ய வேண்டுமெனவும்  தெரிவித்தார்.