Jul 22

ரொரன்ரோவில் அதிரடி: $3M போதைப் பொருள் மீட்பு, 16 பேர் கைது

ரொரன்ரொ பெரும்பாகத்தில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கைகளின் போது சுமார் 3 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை ரொரன்ரோ பெரும்பாகம் முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என பல இடங்களில் இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாண காவல்துறையினருடன் இணைந்து ஹால்ட்டன், யோர்க் மற்றும் பீல் பிராந்திய காவல்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது துப்பாக்கி மற்றும் ரொக்கப்பணம் என்பவையும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் 85 கிலோகிராம் கஞ்சா, 9 கிலோகிராம் கொக்கெய்ன் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், புதன்கிழமை மட்டும் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ரொரன்ரோ, வோன், மிசிசாகா, பிரம்டன் மற்றும் ஸ்பிறிங் வாட்டர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களைத் தவிர மேலும் பத்து பேர் முன்னர் மேற்கொள்ப்பட்ட நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதாகவும், இவர்கள் மீது ஆயுதங்கள், போதைப் பொருட்கள், குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட பொருட்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.