Jul 22

உண்மையும் நீதியும் அழிந்து பொய்களும் அநீதிகளும் நிலைக்க முடியுமா?

ஏற்கெனவே நலிந்துபோயிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் அண்மைக்காலமாக உண்மை பொய் அறியாமல் சரிபிழை தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள். சில அரசியல் வாதிகளும் ஊடகங்களும் தமது நலன் சார்ந்த, ஆதிக்கம் சார்ந்த, வர்த்தக நோக்கத்தால் எரியும் நெருப்பில் இன்னுமின்னும் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழ்த் தலைவர்கள் என்றிருக்கும் அனைவரையும் வறுத்தெடுக்கின்றார்கள்.  தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சம்பந்தர், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசா போன்றோரை ஒருபக்கத்திலும் விக்னேஸ்வரன் தலைமையில் கஜேந்திரகுமார், சுரேஷ்  பிறேமச்சந்திரன் போன்றோரை மறுபக்கத்திலும் வைத்துக் கொண்டு பந்து விளையாடுகின்றார்கள். யார் தமது நண்பர், யார் மக்களுக்காகச் செயற்படுகின்றார்கள், யார் தமது சுயநலனுக்காகச் செயற்படுகின்றார்கள் என்று தெரியாமல் மக்களும் வாய்க்கு வந்தபடி தலைமைகளைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையான பிரச்சனை மறைக்கப்பட்டு வேண்டுமென்றே மக்கள் தவறாக வழிநடத்தப் படுகின்றார்கள்.  

உண்மையான பிரச்சனை என்ன?.

உலகில் ஒரு நாடு இன்னொரு நாட்டினால், ஒரு இனம் இன்னொரு இனத்தால், தமிழ் இனம் சிங்கள இனத்தால், அடக்கப் படுவதை அல்லது ஆளப்படுவதை விரும்புவதில்லை. பெரும்பான்மை சிறுபான்மையை அடக்கி ஆளாமல், இரு தரப்பாரும் சமமாக  ஒத்த உரிமையோடு வாழும் வகையில் ஆட்சி அமைவதையே விரும்புவார்கள். இது இயற்கை. இல்லாவிட்டால் மோதல்கள்,    சண்டைகள் ஏற்படும். ஈழத்தமிழர் 400 வருடங்கள் தூர தேச அந்நியராலும் பின்னர் அயலில் வாழும் சிங்களவராலும் ஆளப்படுகின்றார்கள். அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெறும் போது சிங்களவரும் தமிழரும் சம உரிமையுள்ள சம பங்காளிகளாக அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் வாழலாம் என்று தமிழர்கள்  நம்பினார்கள். பெரும்பான்மை இனம் சிறுபான்மை    இனங்களை அடக்கி ஆளும் என்ற பயம் இருக்கத் தேவையில்லை என்ற உத்தரவாதம் சிங்களத் தலைவரான டி.எஸ்.  சேனநாயக்கா அவர்களால் சட்டசபையில் வழங்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதற்கான ஒரே காரணம் பல்லின மக்கள் வாழும்  இலங்கைக்குப் பொருத்தமற்ற இலங்கை அரசியல் அமைப்புத்தான். புதிய பொருத்தமான அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவது மட்டும்தான் ஒரு தீர்வைத் தரமுடியும். 

தமிழர் இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களவர்களால் ஆளப்படுவதை வெறுக்கிறார்கள், எதிர்க்கின்றார்கள்,   போராடுகின்றார்கள். 30 வருட ஜனநாயக சாத்வீகப் போராட்டத்தின் பின் 30 வருட ஆயுதப் போராட்டம் நடந்தது. அப்போது தமக்கான ஒரு நிழல் அரசை அவர்கள் நடத்தினார்கள். நிலத்தில் இருந்த தலைமையால் உருவாக்கப்பட்ட புலம்பெயர் தலைமை ஊடாக புலம்பெயர் தமிழ் மக்கள் அந்த அரசைத் தாங்கிக்கொண்டார்கள். 2009 மே மாதம் நிலத்தில் இருந்த தலைமை மறைந்த பின் அங்கு மிகப்பெரிய ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது. தமிழினம் வெற்றிகொள்ளப்பட்ட அடிமைகள் போல் நடத்தப்பட்டார்கள். மூன்று  இலட்சம் பேர்  வருடக்கணக்காக முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் மீண்டும் தமக்கான வலுவான ஒரு அரசியற் தலைமையை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் உதவ வேண்டிய ஒரு நிலை உருவானது. அப்போதுதான் அந்த விபரீதம் ஆரம்பித்தது. 

அதுவரை அன்றய சூழ்நிலையில் த. தே. கூ. தேசியத் தலைமைக்குக் கட்டுப்பட்டதாகவே இருந்தது. அதன்பின்னர் தேசியத் தலைமைக்குப் பதிலாக அங்கே தமிழ் மக்கள் தமக்கான ஒரு சுயாதீனமான அரசியற் தலைமையை உருவாக்க உதவுவதற்குப் பதிலாக தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்ட புலம்பெயர் தலைமையின் ஒருபகுதி; தேசியத் தலைமைக்குப் பதிலாக தாமே ஈழத்தமிழரின் தலைமைச் சக்தியாகத் தொடர விரும்பினார்கள். தாயகத்தில்  இருக்கும் தலைமை தமக்குக் கட்டுப்பட்ட, தம்மால் வழிநடத்தப் படுகின்ற, தங்கள் சொற்படி நடக்கக் கூடிய தலைமையாக  இருக்க வேண்டும் என்று  பேராசைப்  பட்டார்கள். அதன்படி 2010ம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலின் போது மிதவாத அரசியல்வாதிகள் என்று அவர்களால் கணிக்கப்பட்ட 

தமிழ்த் தலைமையை மாற்ற கடுமையான முயற்சியை மேற்கொண்டார்கள். ததேகூ இன்  தலைமை கூறியது இதுதான். " எமது குறிக்கோள் ஒன்றாக இருந்தாலும் போராட்ட வடிவம் மாறிவிட்டது. இனி நாம் சர்வதேச நாடுகளின் ஆதரவோடு ஒரு இராஜதந்திர அரசியற் போராட்டத்தையே செய்ய வேண்டும். அது மட்டுமன்றி 21 நாடுகள் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை அழித்தார்கள். ஆயுதப் போராட்டக் குழுவோடு  அல்லது அவர்களைச்  சேர்ந்தவர்களோடு அந்தச் சர்வதேச நாடுகள் பேசத் தயாரில்லை. இருந்தும் தாயகத் தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழரின் பேராதரவும் உதவியும் அத்தியாவசியமானது. உங்கள் உதவிகளையும் ஆலோசனைகளையும் நாம் பெற்றுக்கொள்வோம். ஆனால் எமது சர்வதேச அரசியற் போராட்டத்தை சுதந்திரமாக நாமே முன்னெடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர். 

அதை ஏற்றுக்கொள்ளாத புலம்பெயர் தலைமை தமக்குக் கட்டுப்பட்ட ஒரு அரசியற் தலைமையை தாயகத்தில் உருவாக்கும் தமது முயற்சியை அன்றிலிருந்து இன்றுவரை முழுமூச்சாக மிக மூர்க்கத்தனமாக தொடர்கின்றார்கள். மாற்றத்தின் குரல், மாற்றுத் தலைமை, புதிய தலைமை, தலைமை மாற்றம் என்று பேசப்படுவதெல்லாம் அதனுடைய தொடர்ச்சிதான். இதுதான் உண்மையான பிரச்சனை.

ஈழத்தமிழரின் நல்வாழ்வுக்காக புலம்பெயர் தமிழரால் அதுவரை வாரி வழங்கப்பட்ட நிதிபலம், கட்டமைக்கப்பட்டிருந்த  ஆட்பலம் மற்றும் உருவாக்கப்பட்டிருந்த ஊடக பலம்  அவர்களிடம் இருக்கின்றபடியால் அவர்களது செயற்பாட்டை முடங்கச் செய்வது இலகுவான காரியமாக இல்லை. முதலில்2010ல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சிலரைத் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பில் இருந்து உடைத்தெடுத்து தமது கட்டுப்பாட்டில் உள்ள தலைமையாக  தேர்தலில் நிறுத்தி படுதோல்வி கண்டார்கள்.

பின்னர் சுரேசை பிரித்தெடுத்து கட்சிக்குள்ளிருந்தே குடைச்சல் கொடுக்க வைத்தார்கள். பின்னர் வடமாகாண சபையை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அனந்தியையும்  சிவாஜிலிங்கத்தையும் உடைத்தெடுத்தார்கள். முதல்வரின் தனிச் செயலாளர் மூலம் முதலமைச்சரையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இவர்களை எல்லாம் ஒன்றிணைத்துப் போட்டியிட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணி (ததேமமு) 2015 ஓகஸ்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் படுதோல்வி அடைந்தது. இதன் பின்னர்  ததேகூ க்குள் இருந்த அதிருப்தியாளர்கள், ததேமமு, சிவில் சமூகம் என சிலர் எல்லோரையும் ஒன்றிணைத்து தமிழ்மக்கள் பேரவை என்ற பெயரில் டிசெம்பர் 20, 2015 ஆம் ஆண்டு ஒரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன் இணைத் தலைவர்களில் ஒருவராக தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர்தான் இருக்கிறார்.

இந்த அமைப்பு தமிழரசுக் கட்சியின் தலைமையை குறிவைத்துத் தாக்கி வருகிறது. குறிப்பாக ததேகூ இன் பேச்சாளர் சுமந்திரன் மற்றும்  மாகாணசபை அமைச்சர்  ப.சத்தியலிங்கம் போன்றோர் தாக்கப்படுகிறார்கள். காரணம் எதிர்காலத்தில் தமக்குக் கட்டுப்படாத சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் அமைச்சர்  சத்தியலிங்கம் வடமாகாண சபை முதல்வராகவும் வரக்கூடும் என இவர்கள் நினைக்கிறார்கள். வேறு எந்தக் காரணமும் கிடையாது. தமது ஊடக பலத்தால்  மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களை தமிழரசுக் கட்சிக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள். தமக்கு வேண்டியவருக்கு ஆதரவாகவும் வேண்டாதவருக்கு எதிராகவும் செய்திகளை புனைந்து அல்லது திரித்து வெளியிடுகின்றார்கள். தாயகத்தில் தமக்குக் கட்டுப்பட்ட  ஒரு தமிழரின் தலைமையை உருவாக்கும் வரை அவர்கள் ஓயமாடடார்கள் போல் தெரிகிறது. நாம்  ஒன்றை உணர வேண்டும். இப்போது வெளிநாடுகளில் இருக்கின்ற இவர்கள் தாயக அரசியலில் காட்டும் அக்கறை,  இவர்களின் அடுத்த தலைமுறையினர் நிட்சயம் காட்டப் போவதில்லை. தாயக மண்ணில்  பிறவாத, அங்கு வாழாத, அந்த மண்ணின் வாசனை தெரியாத புலம்பெயர் தமிழ் மக்களின் வாரிசுகளால்  தாயக  மக்களின் அரசியல்,  பொருளதார,

சமூகப் பிரச்சனையை  விளங்கிக்கொள்ளவோ அக்கறை கொள்ளவோ வழிநடத்தவோ வாய்ப்பே இல்லை.

தாயகத்தில்  வாழும் தமிழர் எடுக்க வேண்டிய முடிவு இதுதான்.

ஈழத்தமிழரோடு கூடவே வாழுகின்ற, அவர்களது உண்மை நிலையை அறிந்த, சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல்கொண்ட,  யதார்த்தமாக நிலைமைகளை அணுகி ராஜதந்திரமாக காய்களை நகர்த்தி சர்வதேச உதவியோடு மிகப் பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களின் தலைவர்களை, சிங்கள அமைப்புகளை தமது தர்க்கரீதியான யதார்த்தபூர்வமான அவர்களின் மனதை மாற்றக்கூடிய வாதத்திறமையால் சம்மதிக்க வைத்து, தமிழர்களுக்கான நல்வாழ்வை அமைத்துக் கொடுக்கக்கூடிய தலைமை வேண்டுமா?அல்லது வெளிநாட்டில் வாழும் சிலரது கைப்பொம்மைகளாகச் செயற்படும் தலைமை வேண்டுமா?. முடிவெடுக்க வேண்டியவர்கள்  தாயகத்தில்  வாழும் தமிழ் மக்களே. ஆனாலும் உண்மையாக அந்த மக்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ள அதிகார ஆசையில்லாத புலம்பெயர் தமிழரின் உதவிகள் நிட்சயம் இப்போதுபோல் எப்போதும் தொடரவே செய்யும். அவர்களது இனவுணர்வு, மனித நேயம் செத்துப் போகாது

முப்பது  வருடப் போரினால் ஏற்பட்ட  பிரச்சனைகள் தமிழ் மக்களுக்கு பாரிய அளவில் இருக்கத்தான் செய்யும். பல   ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட அநீதிகளை ஓரிரு வருடங்களில் தீர்த்து விட முடியாது. அதற்காக அதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயலாமை என்று காட்டி தமது தலைமைக்கு எதிராக தாமே போர்க்கொடி தூக்கி போராடினால், அவர்களின் ஒற்றுமையைச் சிதறடித்து பலவீனப் படுத்தினால் அது எமது உண்மையான பொது எதிரிக்கு  சாதகமாக அமைந்துவிடும்.

23 வீதமாக இருந்த தமிழ் இனம் இப்போது 15 வீதமாகக் குறைந்து விட்டது. தற்காலிகமாக இணைக்கப்பட்ட  வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் பிரிக்கப்பட்டுவிட்டன. தமிழர் செறிந்து வாழும் பூமியாக வடக்கு கிழக்கு மாகாணங்களாக இருந்தது பின்னர் வடக்கு மாகாணமாகி அதுவும் யாழ்ப்பாணமாகி அதிலும் பலாலி, நாவற்குழிகள் பறிபோய்விட்ட நிலையில் கிணற்றுத் தவளைகள் போல வெளிநாட்டில் இருந்துகொண்டு வெறும் வெற்றுக் கூச்சல்களை மட்டும் இன்னும் எழுப்பிக் கொண்டு  வாய்வீரம் பேசிக்கொண்டு மிச்சமாக இருப்பவர்களையும் புதைகுழிக்குள் அனுப்ப வேண்டுமா?.  தலைமை மாற்றம், தலைமை மாற்றம் என்கிறார்களே அது  அடுத்த தேர்தலுக்கு முன் எப்படிச் சாத்தியமாகும்.?. சாத்தியமே இல்லை என்பதை உணராதவர் இருக்க முடியாது. அப்படியாயின் இப்போது இருக்கும் தலைமையை இப்போதே சிதறடித்து பலவீனப் படுத்துவதால் யார் நன்மை பெற விழைகிறார்கள்? தனிநாட்டுத் தேசியத்தின் சொந்தக்காரர் தாமே என்று கூக்குரலிடுபவர்கள் , சிங்களவர்களோடு, சிங்கள அரசோடு பேசுவதையே துரோகமாகச் சித்தரிக்கிறார்கள். எமது உரிமைகளைப் பறித்து வைத்திருப்பவர் யார்? அதைப் பறித்துத் தம்மிடம் வைத்திருக்கும் அவர்களிடம் பேசி அதை அவர்களிடமிருந்து பெறாமல் வேறு யாரிடமிருந்து பெறுவது? பேச்சுவார்த்தையாலன்றி இன்னொரு  ஆயுதப் போராட்டம்  சாத்தியமா? அமெரிக்காவையும் இந்தியாவையும் வறுத்தெடுப்போர் சர்வதேசத்தை நம்பக்கூடாதென்போர் வேறு யார் பலத்தால்  தமிழர்களது உரிமைகளை வென்றெடுப்பது?

இன்றய தமிழர் தலைமை சாதித்தது என்ன?

அன்றிருந்த நிலைமை:-

1. போர் முடிவிற்கு வந்ததும் தமிழர் யாராவது "ம்" என்றால் சிறை வாசம், "ஆ" என்றால் வானவர் வாசம் என்ற  நிலைமைதான் இருந்தது. 

2. வரவு செலவுத் திட்டத்தில் படையினருக்கான செலவீனங்கள் போர் முடிந்தபின் இன்னுமின்னும் அதிகரிக்கப்பட்டு படையினர் குடியேற்றங்கள் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றம், அதற்கான நிலஅபகரிப்பு, அவர்களுக்கான உல்லாசப் பொழுதுபோக்குகள், கோட்டல்கள் ,வடக்கின் வசந்தம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்களுக்குத்  தேவையான நெடுஞ்சாலைகள் மற்றும் அபிவிருத்திகள், மூலைக்கு மூலை புத்த சிலைகள் விகாரைகள் என்று தொடர்ந்தன.

3. ஒரு தமிழர் வீட்டில் ஒரு நல்ல காரியம் நடந்தால்  அதற்குப் படையினரையும் அழைக்க வேண்டும்.

4. சிங்களவர் ஒருவருக்கும் தமிழர் ஒருவருக்கும் ஒரு பிரச்சனை என்றால் தீர்ப்பு சிங்களவர் பக்கமாகத்தான் இருக்கும்.

5. தமிழருக்கெதிராக ஒரு சாதாரண சிப்பாய் கூட என்ன செய்தாலும் அவர்களுக்கு எதிராக எந்தவொரு விசாரணையும் இருக்காது.

6. சிவில் நிர்வாகத்தை, பொலிஸ் அதிகாரத்தை படையினர்தான் செயற்படுத்தினார்கள்.  நிர்வாகத் தலைவர்களாக படைத் தலைவர்களே நியமிக்கப் பட்டார்கள். 

7. எந்தத் தமிழனும் எங்கேயும் எவ்விடத்திலும் கைது செய்யப்படலாம், காணாமல் ஆக்கப்படலாம், கொல்லப்படலாம்,யாரும் எதுவும் கேட்க முடியாது.

8. தமிழரின் வளமான நிலங்களை அபகரித்து படையினர் தாங்களே விவசாயம் செய்து பண்ணைகளை நடத்தினார்கள்.

9. 2010 ல் தீவிரவாதத்தை ஒழித்த நாடாக இலங்கைக்கு சர்வதேசம் மகுடம் சூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.

இன்றுள்ள நிலைமை:-

1. சிவில் நிர்வாகம் சிவில் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது,பொலிஸ் அதிகாரம் பொலிஸாரினால் மட்டுமே கையாளப்படுகின்றது, படையினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளார்கள். 

2.அபகரிக்கப்பட்ட கணிசமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, இன்னும் தொடர்ந்து விடுவிக்கப்படுகின்றன. 

3. சிலர் பகிஸ்கரித்த,  வேண்டாம் என்று எதிர்த்த மாகாண சபையைக்கொண்டு முழுமையாக இல்லாவிட்டாலும் சில விடயங்களையாவது சாதிக்க முடிந்துள்ளது, அதை வேண்டாம் என்றவர்களே இப்போது அதைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர படாத பாடு படுகின்றார்கள்.

4. 19ம் அரசியற் திருத்தத்தின் மூலம் சுயாதீனமான நீதி நிர்வாகம்,தேர்தல் திணைக்களம், அரசசேவை ஆணைக்குழு போன்ற ஜனநாயக விழுமியங்கள்,சட்டத்தின் ஆட்சி, ஊடக  மற்றும் பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடிப் போராடும் உரிமைகள், ஜனாதிபதியின் சர்வாதிகார  நீக்கம், செய்தி, தகவல் அறியும் உரிமை, இறந்தோருக்கு அஞ்சலி செய்யும் உரிமை, மதங்கள் இனங்களுக்கான பாதுகாப்பு, தொழிற்சங்கப் போராட்ட உரிமைகள்  என்று இன்னும் பல நன்மைகளை நாட்டு மக்கள் அனைவரும் அனுபவிக்கின்றனர். 

5. நாட்டையே கொள்ளையடித்தவர்கள், ஊழல் செய்தோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். ( முன்னைய அரச தலைவர்களில் இன்னும் கைவைக்க முடியவில்லை.) குற்றமிழைத்த ஆயுதப்படையினர் உட்பட அதியுயர் அதிகாரிகள் கூட சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடக்கின்றன,சிலர் தண்டிக்கப் பட்டுள்ளார்கள். ஒரு குற்றவாளியைத் தப்பிக்க உதவினார் என்ற குற்றத்தில் கூட ஒரு அதியுயர் பொலிஸ் அதிகாரி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

6. கரும்புலிகள் தினம் கொண்டாடியவர்களுக்கு எதிராகக் கூட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

7. பல்வேறு குறைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்துகின்றார்கள். சிலவற்றைச் சாதித்துள்ளார்கள். இன்னும் சாதிக்கின்றார்கள்.  எதற்கெடுத்தாலும் போராட்டம்தான். அந்த உரிமையை கொடுத்த அரசைக் கவிழ்ப்பதற்காகவும் போராட்டங்கள் நடக்கின்றன.

8. மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேனும் வீட்டுத்திட்டங்கள் அபிவிருத்திகள் நடக்கின்றன. சில நன்மைகள் இருக்கின்றன.

9. மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காவின் அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஸ்ரீலங்கா அரசு பாரிய அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது. அரசு இப்போது என்ன கூறினாலும் அதிலிருந்து அது இலகுவாகத் தப்ப முடியாது. காலம் தாழ்த்தப் பட்டாலும் ஒரு சந்தர்ப்பத்தில் எப்படியாவது அதைச் செயற்படுத்த வேண்டி இருக்கும். அந்தத் தீர்மானத்தையே தீயில் போட்டு எரித்தவர்கள் இன்று அதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கூப்பாடு போடுகின்றார்கள்.

10. காணாமற் போனோருக்கான விசாரணைக்கு சட்டபூர்வமான அடித்தளம் இடப்பட்டுள்ளது. சதிகாரரின்  திட்டங்கள் முறியடிக்கப் பட்டால் புதிய அரசியலமைப்புத் திட்டம் எப்படியோ வரத்தான் போகிறது. ஏதோ ஒரு கட்டத்தில் போர்க்குற்ற விசாரணைகூட நடக்கலாம்.

11. இலங்கைச் சரித்திரத்தில் முதன்முதலாக அரசியல் அமைப்புச் சட்டமானது சிறுபான்மையினரது ஒப்புதலோடும் உருவாக்கப் படவேண்டுமென்று அவர்களது பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய,

அவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பை உருவாக்கும் செயற்பாடு நடைபெறுகின்றது.

12. முதன்முதலாக "தமிழர்களுக்கு பிரச்சனைகள்  இருக்கின்றன அவை தீர்க்கப்பட வேண்டும், சிறுபான்மையினரின் உரிமைகளைக் கொடுக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது" என்று சிங்களத் தலைவர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். 

அரசு இன்னும் செய்யவேண்டியவற்றை மட்டும் சொல்லி புலம்புவோர் அரசு செய்த சிலவற்றை ஏன் மக்களுக்கு மறைக்கவேண்டும். 

அன்றிருந்த அந்த நிலைமையிலிருந்து இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது யார்?. 

ஆரவாரம், சத்தம், கொக்கரிப்புகள், விளம்பரங்கள் இல்லாமல்  அமைதியாக பொறுமையாக நிதானமாக,  த. தே. கூ. தலைமைதான் அதைச் செய்துள்ளது,செய்துகொண்டிருக்கின்றது, இனியும் அதை நிறைவேற்றும்.

யார் ஆர்ப்பரித்தாலும்,சதிகள் செய்தாலும்,குழிபறித்தாலும், கொடும்பாவி எரித்தாலும் ஒற்றுமைக்காக வேண்டி  எதிர்த்துக் கத்தாமல், மனம் தளராமல் அவர்கள் மக்களுக்காக உறுதியோடு செயற்படுகிறார்கள். தமக்கு எதிராக யார் எவ்வளவு அநியாயங்களைச் செய்தாலும் தூற்றினாலும் பொறுத்துக் கொண்டு ஒற்றுமை, ஒற்றுமை என்று அதற்காக பொறுமையாக எதையும் விட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது அவர்கள் பலவீனம் அல்ல. பெருந்தன்மை. அவர்கள் செய்வது போதும் என்றோ பிழைகள் இல்லை என்றோ நாங்கள்  சொல்ல வில்லை. பிழைகள் இருக்கலாம். அவற்றை கூடஇருந்து கொண்டே முடிந்தவரை சீர்செய்யலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் அவர்களால் மக்களுக்கு நன்மை ஏதும் கிடைத்து அதன்மூலம் தமிழ்த் தேசியக் கூடாமைப்பு  பலம் பெற்று விடக்கூடாதென்று அனைத்தையுமே தடுத்துக் கொண்டே இருப்பதால் முழு இனமுமே அழிந்து போகலாமா?. எப்படி இருந்தாலும் அடுத்த தேர்தலுக்கு முன் இப்போதைக்கு அவர்களைவிட வேறு தெரிவு ஈழத் தமிழருக்கு இல்லவேயில்லை. அதைக் கெடுத்து மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை ஏற்படுத்தும் அளவுக்கு சதிகார எதிரிகளின் செயற்பாடுகள் அமையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு ஈழத் தமிழ்ப் பொதுமக்களிடமே உள்ளது.

இன்றய இலங்கையின் அரசியல் நிலைமைகள்:-

இலங்கையை ஒட்டுமொத்தமாக சீனாவுக்கு அடைவு வைக்காமல் தமக்குச் சாதகமாக குறைந்தது 

நடுநிலையாகவேனும் இருக்கக்கூடியவாறு அமெரிக்கத் தலைமையில் இந்திய அனுசரணையில் இலங்கைச் சிறுபான்மையினரின் சம்மதத்தோடு சர்வதேசம் ஒரு புதிய ஆட்சியை உருவாக்கி யுள்ளார்கள். அதில் சம்மந்தப்பட்டவர்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமானால் உருவாக்கிய அந்த ஆட்சி மூலம் இலங்கையை அமைதியான சமாதானமான பொருளாதார முன்னேற்றமான சர்வதேச ஜனநாயக விழுமியங்கள் பேணப்படுகின்ற நாடாக மாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு. அதனால் அந்த அரசின் மூலம் அதைச் சாதிக்க முயல்வார்களே தவிர அந்த அரசைக் கவிழ விட மாட்டார்கள். ஆனால் அவர்களின் செயற்பாட்டால் பாதிக்கப் பட்டவர்கள் அவர்களின் முயற்சியை எப்படியாவது முறியடிக்கவே முயற்சிப்பார்கள். பாதிக்கப்பட்டோர்  யார்?. இவர்களின் முயற்சி வெற்றி பெற்று அதன்மூலம் மக்களுக்கு  பெருநன்மைகள் கிடைத்து விட்டால் தாம் மீண்டும் அதிகாரத்துக்கு வரமுடியாதென்ற நிலையில் இருப்பவர்கள்தான் அவர்கள்.

சிங்களவர்  தரப்பில் நல்லாட்சிக்கு எதிரான மகிந்த தரப்பு, தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்பு. இந்த இருதரப்பாரும் வெளிப்படையாக எதிரிகளாயிருந்தாலும் நல்லாட்சியை கவிழ்க்கும் நோக்கம் ஒன்றாகவே இருப்பதால் திரை மறைவில் சேர்ந்து செயற்படுகின்றார்கள் என்றே நம்பவேண்டியுள்ளது. காணி விடுவிப்பு சம்பந்தம்மாக 100க்கும் குறைந்த தமிழர் பஸ்ஸில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டு கோட்டைப் புகையிரத நிலையம் முன்பாகப் போராட்டம் செய்தார்கள். ஆனால் அந்தப் போராட்டத்தில்  பல நூற்றுக் கணக்கான சிங்கள மக்களும் சேர்ந்து கொண்டார்கள். அந்தச் சிங்கள மக்கள் யார்?.நிட்சயமாக நல்லாட்சிக்கு ஆதரவானவர்களாக இருக்க முடியாது. வெளிப்படையான முன்னறிவித்தல் ஏதுமின்றி நடந்த அந்தப் போராட்டத்தில் முன்னேற்பாடு இல்லாமல் அந்தச் சிங்கள மக்கள் திடீரெனப்   பங்கு கொண்டிருக்க முடியாது. ஆகவே இரு பகுதியாரும் சேர்ந்துதான் அதை ஒழுங்கு செய்திருக்க வேண்டும் என்றே நம்ப வேண்டியுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட தமிழ்ச் சூத்திரதாரிகள்  மகிந்தவோடு சேர்ந்தாவது இன்றய அரசைக் கவிழ்த்து தாம் நன்மைபெற வேண்டுமென்று நினைக்கிறார்களே தவிர மீண்டும் மகிந்த ஆட்சியைக் கொண்டுவருவதால் தமிழருக்கு வரக்கூடிய அவலங்கள் பற்றிக் கவலை கொள்வதில்லை. இன்றய அரசு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய விடக்கூடாது மக்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடாது என்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள். 

அரசின் செயற்பாடுகளில் தாமதம் அல்லது இழுத்தடிப்பு ஏன்?.

2015ல் அரச தலைமை தான் மாறியுள்ளது. ஆனால் நீண்ட காலமாக மகிந்த கட்டியெழுப்பிய பாரிய அரசயந்திரம் அப்படியேதான் இருந்தது. அரசு எதைச் செய்யினும் தனது பலம் இருக்கும்வரைதான் செய்யலாம். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தான் அனைத்துப் பலமும் இருப்பதாக எழுத்தில் இருக்கலாம். ஆனால் அவர்களின் பலம் எது?. முதலில் அவர்கள் பலம் பாதுகாப்புப் படையினர். அவர்களைப் பெரிதும் பாதிக்கக் கூடிய விடயம் என்றால், அவர்கள் விரும்பாத விடயம் என்றால் 

அவர்கள் ஒன்றுதிரண்டு எதிர்த்தால் ஜனாதிபதி என்ன செய்யமுடியும்?. இராணுவ ஆட்சிதான் ஏற்படும். அடுத்து பெரும்பான்மையான மக்கள் எதிர்த்தாலும் அரசு அவர்களுக்கெதிராக எதையும் செய்ய முடியாது. மற்றது மந்திரிசபை, கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். அரச தலைவர்களுக்கு  எவ்வளவு பிரச்சனைகள் அழுத்தங்கள் இருக்கும். அவர்கள் எதைச் செய்யினும் அனைத்தையும் சமாளித்துத் தானே செய்யவேண்டும். நினைத்தவுடன் செய்துவிட முடியுமா?. இந்த அடிப்படைகளை மக்கள் உணரவிடாமல் ஜனாதிபதிதான், பிரதமர்தான்  வேணுமென்று செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என்று பழி போடுவதால், மக்களுக்கு உண்மையை மறைப்பதால் யார் நன்மையடைய முயற்சிக்கிறார்கள்?. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, குறிப்பாக சம்மந்தரும் சுமந்திரனும் இரவு பகலாக மிகக் கஷ்டப்பட்டு இப்படியான பாரிய சவால்களை சமாளித்துத்தான் சிலவற்றையாவது சாதிக்கிறார்கள் என்பதை ஏன் மக்களுக்கு மறைக்க வேண்டும். ஜனாதிபதி, பிரதமர்,மந்திரிமார், ஒவ்வொரு கட்சிப் பிரமுகர்கள், புத்தமதத் தலைவர்கள்,முஸ்லீம் தலைவர்கள், குறிப்பாக அனைத்து வெளிநாட்டுத் தூதர்கள், வெளிநாட்டுப் பிரமுகர்கள் என்று அனைத்துத் தரப்பாருடனும் மீண்டும் மீண்டும் சந்திப்புகளை ஏற்படுத்தி கலந்துரையாடல் மூலம்தான் அவர்கள் எதையாவது சாதிக்க வேண்டியுள்ளது. அப்படிச் செயற்படக் கூடிய வல்லமை கொண்டவர்களைச் செயற்பட விடாமல் தனியாகச் செய்கிறார்கள்,ஒழிச்சுச் செய்கிறார்கள், மறைக்கிறார்கள் என்று வீணான பழியைப் போடுவதற்கான அரசியற் காரணம் என்ன?. உள்நோக்கம் என்ன?.வேண்டுமென்றே அவர்கள் செய்வதனைத்தையும் ஊடகங்கள் மறைத்துவிட்டு ஒன்றும் செய்யவில்லை என்றும் தவறுகளை மாத்திரம் செய்கிறார்கள் என்றும் மக்களுக்கு காட்டப்படுகிறது. 

இன்றய அரசைக் கவிழ்ப்பதற்கு என்னென்ன சதிகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

1. அத்தனை தொழிற் சங்கங்களையும் மாணவர் அமைப்புகளையும் தம்வசப் படுத்தி பாரியளவில் தேவையற்ற போராட்டங்களை உசுப்பி விட்டிருக்கிறார்கள்.

2.  இருக்கும் பிரச்சனைகளோடு இல்லாத பிரச்சனைகளையும் பூதாகாரமாக்கி மக்களை அரசிற்கு எதிராகத் தூண்டி விடுகிறார்கள்.

3. புத்த துறவிகளுக்கு இல்லாத பயத்தை உருவாக்கி இனவாதத்தைப் புகுத்தி அவர்களை அரசிற்கு எதிராக போராட தூண்டி விட்டுள்ளார்கள்.

4.  தமிழ் மக்களையும் அரசிற்கெதிராக கிளர்ந்தெளப் பண்ணுகிறார்கள். கிறிஸ் பூதங்கள், ஆவாக்குழு,வாள்வெட்டுக் குழு போன்றவை ஊடாகவும் ஓரிரு தமிழ் இளைஞர்களை இடையிடை சுட்டுக்கொல்வதன் மூலமும் வேறு வழிகளிலும் அதைச் செயற்படுத்துகிறார்கள்.

5. சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியோடு அரசிற்கெதிரான செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

6. மைத்திரியோடு நிற்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர் சிலரையாவது உடைத்தெடுத்து தேசிய அரசை 2/3 பெரும்பான்மை இல்லாமற் செய்ய அரும்பாடு படுகின்றார்கள். அரசியல் அமைப்பு வருவதற்கு முன் சுதந்திரக் கட்சியை அரசிலிருந்து வெளியேற்றுவதற்கு பாரிய பிரயத்தனம் நடக்கின்றது.

முடிவாக என்ன செய்யவேண்டும்?.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தமிழர் தரப்பும் அரசிற்கெதிரான  நடவடிக்கைகளில் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள். தமிழரின் ஒற்றுமையைச் சிதறடித்து மாகாணசபைக்குள் பூகம்பங்களை ஏற்படுத்தி தலைவலியைக் கொடுக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளால் அரசு புதிய அரசமைப்பை உருவாக்க முடியாது போனால் சிங்கள மக்களைவிட மிக மிக அதிகமாகப் பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள்தான்.

அதற்குத் துணைபோகும் தமிழர் தரப்பு அதைத்தான் விரும்புகிறீர்களா?. அந்த வரலாறுப் பழியை நீங்கள் சுமக்க வேண்டுமா?. அந்தப் புதிய அரசியல் அமைப்பு வரும்வரை யாவது ஒற்றுமையாய் இருந்து ஒரே குரலில் அதிஉச்சமாகப் பெறக்கூடியதை பெற்றபின் அதற்குமேல் பெறவேண்டியவற்றிற்கு புதிய அரசமைப்பினால் கிடைக்கும் பலத்தையும்  பன்படுத்தி  நீங்கள் தொடர்ந்து போராடலாம் அல்லவா?. கிடைப்பதை ஏன் கெடுக்கிறீர்கள். வரலாற்றில் சர்வதேச அனுசரணையுடன் இருபெரும் தேசியக் கட்சிகளும் சேர்ந்து அரசை அமைத்திருக்கிற மிக அரிய சந்தர்ப்பம் இதுதான். இனி இப்படி ஒரு வாய்ப்பு வரவே மாட்டாது. இதில் வெற்றிபெற முடியவில்லை என்றால், வெற்றிபெறுவதற்கு தமிழர் தரப்பு தமது பங்களிப்பைச் சரியாகச் செய்யவில்லை என்றால் சர்வதேசமும் தமிழர்களை ஒரு உதவாக்கரை, கையால் ஆகாதவர்கள்  என்று எம்மைப் புறந்தள்ளி விடுவார்கள். (தேசியத் தலைமையையும் அதற்காகத்தான் அப்படிப் புறமொதுக்கி அழித்தார்கள்.) அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்து மாற்றுத் தலைமையை உருவாக்கும் செயற்பாட்டை இனநன்மைக்காக இனியாவது நிறுத்துங்கள், அல்லது சற்றுத்   தள்ளிவையுங்கள் என்று இனத்தின் பெயரால் வேண்டுகின்றோம். உண்மையும் நீதியும்தான் நிலைத்து நிற்கும்.

V.Vin. மகாலிங்கம்.