Jul 22

அல்பேர்ட்டாவிலும் காட்டுத்தீ அச்சுறுத்தல்!

பிரிட்டிஷ் கொலம்பியாவை அடுத்து அல்பேர்ட்டாவும் காட்டுத்தீ அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில், அங்கும் தீ மூட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அல்பேர்ட்டாவிலும் தற்போது வரட்சியான – வெப்பமான காலநிலை நிலவி வருவதுடன், பிரபல றொக்கி மலைப் பகுதியில் சிறிய அளவிலான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதை அடுத்தே, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இவ்வாறான காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள தென்மேற்கு பிராந்தியங்கள் மற்றும் மலைக் காட்டுப் பகுதிகளில் எந்தக் காரணம் கொண்டும் தீ மூட்ட வேண்டாம் என்று மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக விடுமுறைச் சுற்றுலா செல்லும் மக்கள் காட்டுப் பகுதிகளில் விறகுகளை கொண்டு தீ மூட்டுவது முற்றாக தடை செய்யப்படுவதாகவும், கையடக்கமான எரிவாயு அடுப்புகளை பாவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காட்டுத்தீ அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாகவும், அல்பேர்ட்டா மக்களையும், வனவளத்தினையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அல்பேர்ட்டாவின் வனவளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தடை உத்தரவினை மீறுவோருக்கு முதற்கட்டமாக 287 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.