Jul 22

காட்டுத்தீ: தீக்கிரையான 41 வீடுகள் அடையாளம் காணப்பட்டன

பிரிட்டிஷ் கொலம்பிய காட்டுத்தீயில் குறைந்தது 41 வீடுகள் அழிவடைந்துள்ளமை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

காட்டுத்தீ ஏற்பட்ட பிரதேசங்களில் உள்ள ஒரு பிராந்திய நிர்வாகம் மட்டும் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், உண்மை நிலைவரம் இதனைவிடவும் அதிகமாக இருக்கும் எனவும் அது தெரிவித்துள்ள நிலையில், மாநிலத்தில ஒட்டுமொத்தமாக தீக்கிரையான வீடுகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

“கரிபோ” பிராந்திய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், தமது பிராந்தியத்திலிருந்து 35,000க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மேலும் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு அல்லது வெளியேற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் அங்கு குறைந்தது 41 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாகவும், உண்மையான எண்ணிக்கை அதனை விடவும் அதிகமாக இருக்கும் எனவும் கரிபோ பிராந்திய நிர்வாகத் தலைவர் அல் றிச்மண்ட் தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் இன்னமும் தீ எரிந்து வருவதனால், அவ்வாறான பகுதிகளுக்கு இதுவரை அதிகாரிகள் செல்லவில்லை எனவும், அவ்வாறான நிலையில், அழிவு எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் முன்னெப்போதும் ஏற்படாத அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பரவல் கட்டுக்கடங்காது செல்வதனால், மாநிலம் தழுவிய அவசரகால நிலையினை இன்னமும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதான அறிவிப்பினை பிரிட்டிஷ் கொலம்பியாவின் புதிய முதல்வர் ஜோன் ஹோர்கன் விடுத்து்ளள நிலையில், வீடுகளின் அழிவு தொடர்பிலான இநத விபரமும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.