Jun 26

மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் தீர்மானம் மறுபரீசிலனை செய்யப்பட வேண்டும் - மன்னிப்புச்சபை

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு அத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன ஒப்புதல் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.

 ஏனைய நாடுகள் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் தாம் கடைப்பிடிக்கும் கொள்கைகளில் மறுசீரமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உணரத் தொடங்கியிருப்பதுடன், மரணதண்டனையை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இலங்கை அதற்கு மாறாக செயற்படுகின்றது என்று சாடியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இது சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கைக்குக் காணப்படும் அங்கீகாரத்திற்குப் பெரும் பாதகமாக அமையும் என்பதுடன், ஜனாதிபதி தனது தீர்மானத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

மரணதண்டனைக் கைதிகள் வரிசையிலுள்ள நால்வருக்கு விரைவில் அத்தண்டனை அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தார். 

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் தான் கையெழுத்திட்டு விட்டதாக ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் செய்தி ஆசிரியர்களுடன் நடத்திய விசேட சந்திப்பின் போது ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

ஜனாதிபதியின் இத்தீர்மானம் தொடர்பில் கடும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை,போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய நால்வருக்கு மரணதண்டனையை அமுல்படுத்தப்போவதை ஜனாதிபதி உறுதி செய்திருக்கின்ற போதிலும், மரணதண்டனையை எதிர்கொண்டிருக்கும் நபர்கள், அவர்கள் தொடர்புபட்டுள்ள குற்றச்செயல்கள் குறித்த எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

இத்தகவல்கள் வெளியிடப்படாமல் இருப்பதால் குறித்த மரணதண்டனைக் கைதிகள் கருணைமனுவிற்கு விண்ணப்பிக்கவோ அல்லது இதிலிருந்து மீள்வதற்கோ வாய்ப்பில்லாத நிலையொன்று ஏற்பட்டுள்ளது. 

அந்த நான்கு கைதிகள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு இவ்விடயம் குறித்து அறிவிக்கப்பட்டமை தொடர்பில் இதுவரையில் எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கையில் கடந்த 1976 ஆம் ஆண்டின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகவே அமையும்.

 43 வருடகாலத்தின் பின்னர் மரணதண்டனையை நிறைவேற்றுவத்றகு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளமை தொடர்பில் நாம் வெறுப்படைகின்றோம். 

மிகக் கொடூரமானதும், மனிதாபிமானமற்றதும், இழிவானதுமான இந்தத் தண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஜனாதிபதி சிறிசேன முற்றுப்புள்ளி வைக்கின்றார்" என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் பிராஜ் பட்நாய்க் விசனம் தெரிவித்திருக்கிறார்.