Jun 26

முஸ்லீம்களின் தலைநகர் கல்முனை, பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை: மு.பா.வின் உறுப்பினர்


முஸ்லிம்களின் தலைநகர் கல்முனை. அதனைப் பாதுகாக்க வேண்டியது இலங்கைவாழ் ஒவ்வொரு முஸ்லிம்களின் தலையாய கடமை என்கிறார் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஏ.சி.யஹ்யாகான்.

ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

“கல்முனை வடக்கு பிரதேசத்துக்கு செயலகம் அவசியம் என்று தமிழ் மக்கள் கருதினால் துறவிகளினதும் அரசியல்வாதிகளினதும் நிகழ்ச்சிநிரலுக்கு அடிபணிந்துவிடாது சிவில் சமூகத் தலைவர்கள் பேசி சிறந்த முடிவுக்கு வரமுடியும்.

எனினும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழ்ச் சகோதரர்கள் முன்னெடுத்த போராட்டம் அவர்களுக்கான பிரதேச செயலகத்தைப் பெறுவது என்பதைவிட அடையாளமற்று இருந்த சில அரசியல்வாதிகள் தங்களது முகவரிகளைப் புதுப்பிக்கும் நிகழ்வாக அமைந்துவிட்டது.

மறுபுறம் கல்முனை விடயத்துக்குத் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொடுக்கப் பல்வேறு எத்தனிப்புக்கள் எடுக்கப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் முப்பது வருடங்களாக உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை முன்னிறுத்திப் போராடி வரும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த மக்களினது பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. அந்த மக்களின் கோரிக்கையும் சமாந்தரமாக தீர்க்கப்பட வேண்டும்” என்றார்.