Jun 21

ஊடகவியலாளர்களையே ஏமாற்றிய ஊடக அமைச்சு!


அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக 2005-2015 வரையான காலப்பகுதியில் பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் இன்னல்களுக்கு உட்பட்ட ஊடகவியலாளர்களுக்குச் சலுகை வழங்குதல் என அறிவித்த நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை விண்ணப்பிக்க வைத்து அவர்களது தகவல்களைப் பெற்றுக் கொண்டதுடன் அவர்களை ஏமாற்றிவிட்டது. 
மேற்படி ஊடகத்துறை அமைச்சின் அறிவித்தலுக்கமைவாக விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு என எஸ்.எம்.எஸ் மூலம் ஒருசிலருக்கு அறிவித்து அழைத்த இலங்கையின் ஊடகத்துறை அமைச்சு கடந்த மாதம் அவர்களுக்கான நேர்முகத்தேர்வினையும் நடாத்தியிருந்தது. 



இலங்கை அரசின் பொறுப்பான ஒரு ஊடகத்துறை அமைச்சு பொறுப்பற்ற முறையில் ஊடகவியலாளர்களை நோக்கி எஸ்.எம்.எஸ் மூலம் அறிவித்து நேர்முகத்தேர்வு நடாத்தியிருந்தமையும் விண்ணப்பித்த ஊடகவியலாளர்கள் பலருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படாது விடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடம் ஆவணங்களின் பிரதிகளைப் பெற்றுவிட்டு இது தொடர்பில் தங்களுக்குப் பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறிச் சென்றவர்கள். பின்னர் அவர்களுக்கு இது விடயம் தொர்பில் அறிவிக்கவும் இல்லை. தற்போது இவ்விடயம் பற்றிய கதையே இல்லாமல் போய்விட்டது.
இது ஊடகத்துறை அமைச்சின் அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைவான இவ்வேலைத்திட்டம் 2019 ஆம் ஆண்டு ஊடகத்துறை அமைச்சினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது என்பதைக் காட்டி அறிக்கைப்படுத்துவதற்கான ஒரு ஏமாற்று வேலைத்திட்டம் எனக் கூறிச் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.