Jul 21

அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகள் மீதான பாதுகாப்பு சோதனைகள் தீவிரம்

கனடாவில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு பயணிப்போருக்கான மேம்படுத்தப்பட்ட புதிய சோதனை முறை நேற்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த புதிய பாதுகாப்பு நடைமுறை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், கனடாவில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்படும் அனைத்து விமானங்களும், பயணிகளும் நேற்றிலிருந்து இந்த சோதனை நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பொதுவாக அனைத்துவித சோதனை நடவடிக்கைகளிலும் சிறிது மேம்பட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் எனவும், குறிப்பாக laptop எனப்படும் மடிக் கணணிகள், tablet எனப்படும் வரைபட்டிகைக் கணினிகள் உள்ளிட்ட தனிப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பில் அதிகரித்த பாதுகாப்பு விதிமுறைக்ள பின்பற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.

எனவே இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்காவுக்கான பயணிகள் அனைவரையும் வழக்கத்தினை விடவும் முன்னரே விமான நிலையங்களுக்கு வருகை தருமாறும், இந்த புதிய சோதனை நடவடிக்கைகளுக்கு மேலதிக நேரம் தேவைப்படுவதால் குறைந்தது இரண்டு மணி நேரங்களுக்கு முன்னர் பயணிகள் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் எனவும் எயர் கனடா மற்றும் வெஸ்ட் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளன.

இதேவேளை அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள், அவர்கள் மீதும் அவர்களின் பொருட்கள் மீதும் அதிகரிக்கப்பட்ட சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களமும் தனது இணையப் பக்கத்தில் அறிவித்தல் விடுத்துள்ளது.

வர்த்தக விமானங்களை பங்கரவாதக் குழுக்கள் இலக்கு வைப்பதனை அடிப்படையாக கொண்டே இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.