Jun 19

கிளிநொச்சியில் அதிகஸ்டப் பிரதேச பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கான 2500 ரூபா அதிகஸ்டப்பிரதேசபடி நிறுத்தப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில் காணப்படும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு 2500 ரூபா அதிகஸ்டப் பிரதேசப்படி வழங்கப்பட்டுவந்த நிலையில் தற்போது எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி அதிகஸ்டப் பிரதேசப்படி நிறுத்தப்பட்டுள்ளது.



நாட்டிலுள்ள அதிகஸ்டப் பிரதேசப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு அதிகஸ்டப் பிரதேசப்படியாக 2500 ரூபா வழங்கப்பட்டுவருகின்றது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அதிகஸ்டப் பிரதேசப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கும் மேற்படி அதிகஸ்டப் பிரதேசப்படியான 2500 ரூபா இதுவரைகாலமும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த மே மாதத்திலிருந்து எவ்வித முன்னறிவித்தலுமின்றி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில் அதிகஸ்டப் பிரதேசமாகக் கொள்ளப்பட்டுவந்த அக்கராயன், ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம், கோணாவில், யூனியன்குளம், கராஞ்சி, வலைப்பாடு, ஜெயபுரம் போன்ற பகுதிகளில் காணப்படும் அதிகஸ்டப் பிரதேசப்பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த அதிகஸ்டப் பிரதேசப்படியான 2500 ரூபா எவ்வித முன்னறிவித்தலுமின்றித் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.



கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்படி பகுதிகளாகக் காணப்படும் அதிகஸ்டப் பிரதேசங்களில் வீதி வசதிகள், வங்கிச் சேவைகள், மருத்துவமனை, உரிய சீரான போக்குவரத்துச் சேவை, பிரதேச செயலகம், தபால் நிலையம் போன்றன காணப்படாதமை மற்றும் பிரதானமாக வெளிமாவட்ட ஆசிரியர்கள் தங்கிக் கற்பிப்தற்கான ஆசிரியர் விடுதிகள் எதுவும் காணப்படாதமை போன்ற அடிப்படை வசதிகளற்ற நிலையில் உள்ளதாலேயே மேற்படி பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் அதிகஸ்டப் பிரதேசப் பாடசாலைகளாகக் கொள்ளப்பட்டு அங்கு சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு அதிகஸ்டப் பிரதேசப்படியாக 2500 ரூபா இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்தது. அப்பகுதிகளுக்கு வீதி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எதுவும் பூர்த்தியாக்கப்படாத நிலையில் எவ்வித முன்னறிவித்தலுமின்றி அதிகஸ்டப் பிரதேசப்படி நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை எதிர்வரும் யூலை மாதம் நாட்டிலுள்ள அரச ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதாக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகஸ்டப் பிரதேசங்களில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த அதிகஸ்டப்பிரதேசப்படியை எவ்வித முன் அறிவித்தலுமின்றிக் கடந்த மே மாதத்திலிருந்து, நிறுத்தியுள்ளமையானது அதிகஸ்டப் பிரதேசப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு எனக்கூறி ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்தெடுக்கப்பட்டதாகவே கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.