Jun 18

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் அடிப்படைவாதம் - விமல் வீரவன்ச

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் அடிப்படைவாதம் இன்று நாட்டில் செயற்பட்டு வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை விஜயமானது, நாட்டின் எதிர்க்காலத்திற்கே பாரிய ஆபத்தாக அமையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏப்ரல் 21 ஆம் திகதி, முஸ்லிம் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் நாடே தற்போது சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பொருளாதாரம், ஐக்கியம், சுதந்திரம், தனி மனித உரிமை என அனைத்து விடயங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அடுத்தவாரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் விசேடமாக திருகோணமலைக்கு செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தமான சோபா ஒப்பந்தத்துக்கு இணங்க, அமெரிக்கத் துருப்புக்களை இலங்கைக்குள் இறக்குவது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.

அவ்வாறு அமெரிக்க இராணுவத்தினரை இலங்கைக்குள் இறக்குவதால் ஏற்படும் விளைவுகளை நாம் தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

சோபா ஒப்பந்தத்துக்கு இணங்க, இலங்கையில் வந்திறங்கும் அமெரிக்கத் துருப்புகளை, இலங்கை சட்டத்திற்கு இணங்க கட்டுப்படுத்த முடியாது.

இது பாரதூரமான விளைவுகளை எதிர்க்காலத்தில் ஏற்படுத்திவிடும். இவ்வாறு நாட்டுக்கே அச்சுறுத்தலான விடயம் தொடர்பிலான செயற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவந்தாலும், அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது.

இன்று அடிப்படைவாதம் நாட்டில் பாரியளவில் வளர்ந்து வருகிறது. கிழக்கில் மட்டும், பல இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் அடிப்படைவாதிகள், முழு கிழக்கையும் அரபுலகமாக மாற்றவே முயற்சித்து வருகிறார்கள். வேறு எந்த சமயத்திற்கும் கிழக்கில் அனுமதியில்லாத நிலைமையே அங்கு தற்போது நிலவுகிறது.

இந்த அடிப்படைவாதம் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே இடம்பெறுகிறது. இதனை சாதாரண ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. எதிர்க்காலத்திற்கான அச்சுறுத்தல் தொடர்பிலேயே நாம் இன்று கதைத்துக்கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் சொந்தமான இந்த நாட்டின் எந்தவொரு அடிப்படைவாதத்துக்கும் அனுமதியளிக்க முடியாது.” என விமல் வீரவன்ச கூறினார்.