Jul 20

NAFTA குறித்து மக்கள் கருத்தறியும் நடவடிக்கை

NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்த மீள்பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், அது குறித்த பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறும் நடவடிக்கைகள் கனடாவில் தீவிரம் பெற்றுள்ளன.

கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ இடையேயான இந்த 23ஆண்டுகால தடையற்ற வர்த்தக உடன்படிக்கை குறித்து, மீண்டும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் இந்த வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனேடியர்களின் நிலைப்பாடு என்ன என்பதனை ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்வதற்கான பொதுமக்கள் ஆலோசனை நடவடிக்கைகளை கனேடிய மத்திய அரசாங்கம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த பொதுமக்கள் கருத்தறியும் நடவடிக்கைகள் திங்கட்கிழமையுடன் முடிவுற இருந்த போதிலும், இது குறித்த மக்கள் கருத்துக்களை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்கு கனேடிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய விடயங்கள், இந்த உடன்படிக்கையில் உள்ள எவ்வாறான விடயங்களை தொடர்ந்தும் பேண வேண்டும்?, எவ்வாறான விடயங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்?, எவ்வாறான புதிய விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்?, எவ்வாறான விவகாரங்கள் தற்போதய காலத்திற்கேற்ப நவீனமயப்படுத்தப்பட வேண்டும்? உள்ளிட்ட விபரங்களை பொதுமக்கள் இணையம் ஊடாக தெரிவிக்க முடியும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை விடவும், கனேடியர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக, நகரமன்ற கூட்டங்களைப் போன்ற மேலும் சில கூட்டங்களை நடாத்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த இந்த வர்த்தக உடன்பாடு தொடர்பிலான முதற்கட்ட பேச்சுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக இவ்வாறான பொதுமக்கள் கூட்டங்களை நடாத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.