Jul 20

காட்டுத்தீயில் எரிந்த வீடுகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ அனர்த்தம் தொடர்ந்துவரும் நிலையில், தீயினால் அழிவடைந்து போயுள்ள வீடுகளை அடையாளம் கண்டு உரியவர்களுக்கு அறிவிக்கும் கடினமான பணியினை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

காட்டுத்தீ இன்னமும் கட்டுக்கடங்காமல் பரவிவருவதுடன், மாநிலம் தழுவிய அவசரகால நிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தீக்கிரையான பிராந்தியங்களுக்கு சென்று எரிந்துபோன வீடுகளை அடையாளம் காண்பது என்பது மிகவும் கடினமான பணி என்பதனையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருந்த போதிலும் காட்டுத்தீ எரிந்து அணைந்து போன சில இடங்களுக்கு அதிகாரிகள் செல்ல ஆரம்பித்திருப்பதாகவும், அங்கு எரிந்துபோயுள்ள வீடுகள் கட்டிடங்கள் போன்றவற்றின் விபரங்களைச் சேகரிக்கும் பணிகளை அவர்கள் ஆரம்பித்திருப்பதாகவும் பிரிட்டிஷ் கொலம்பிய மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓரளவுக்கு தெளிவான தரவுகள் சேகரிக்கப்பட்டதனை தொடர்ந்து, அதன் உரிமையாளர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, அழிவடைந்த வீடுக்ள குறித்த தகவல்களை அவர்களுக்கு வழங்கமுடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை தீப்பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த மாத ஆரம்பத்திலேயே மக்கள் வெளியேறிய இடங்கள் சிலவற்றுக்கு அருகே உள்ள பகுதிகளில, காட்டுத்தீ கட்டுப்பாடடினுள் வந்துள்ள நிலையில், அவ்வாறான குடியிருப்புகளுக்கான மி்னசாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை மீள ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு தீப்பரவல் அபாயம் தணிந்துள்ளதாக கருதப்படும் இடங்களுக்கு மக்கள் திரும்பிச் செல்வதற்கான திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ அனர்த்தம் காரணமாக இதுவரை 40,000ற்றும் அதிகமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் 17,000 மக்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.