Jul 19

ட்ரம்பிற்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படாது: லண்டன் மேயர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், பிரித்தானிய விஜயத்தின் போது அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட மாட்டாது என லண்டன் மேயர் சாதிக் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் பிரித்தானியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை முஸ்லிம் நாடுகள் மீதான அமெரிக்காவின் பயணத்தடையை தொடர்ந்து, ட்ரம்பின் செயற்பாடுகள் தொடர்பில் சாதிக் கான் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்த நிலையில், ட்ரம்பின் பிரித்தானிய விஜயத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், பிரித்தானியாவில் பாரம்பரியபடி, அமெரிக்க தலைவர்களுக்கு வழங்கப்படும் செங்கம்பள வரவேற்பு ட்ரம்பிற்கு வழங்கப்பட கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது பிரித்தானிய விஜயம் மேற்கொள்ளப்படாது எனவும் தனது விஜயத்தின்போது முறையான வரவேற்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் என்றும் ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயுடனான தொலைபேசி உரையாடலின்போது தெரிவித்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.