Mar 27

ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது இனவெறித் தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்தவர் லீ மாக்ஸ் ஜாய். இவர் ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரின் உணவகம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை 5 இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து பிடிஐ செய்தி நிறுவனம், "லீ மாக்ஸ் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஆஸ்திரேலியாவில் செவிலியர் படிப்பை படித்துக் கொண்டே பகுதி நேர கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஹோபாட்டில் உள்ள மெக்டோனால்ட் உணவு விடுதியில் காபி அருந்திக் கொண்டிருக்கும்போது 5 இளைஞர்களால் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான லீ கூறும்போது, "என்னை 5 இளைஞர்கள் தாக்கினார்கள், அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தார். என்னை நிறரீதியாக தாக்கிப் பேசியதுடன் அவர்கள் என்னை பலமாக தாக்கினார்கள். அந்த உணவுவிடுதியில் இருந்தவர்கள் போலீஸுக்கு தகவல் அளிக்க அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். ஆனால் அதன் பிறகு அங்குவந்து என்னை தாக்கினார்கள்" என்றார்.

இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான லீ, அங்குள்ள ராயல் ஹோபார்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு இத்தாக்குதல் குறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

நிறவெறித் தாக்குதல் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் லீ கூறும்போது, "நான் கடந்த 8 வருடமாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறேன். நிறவெறித் தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் பல கார் ஓட்டுநர்கள் நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். ஆனால் சில சம்பவங்கள் மட்டுமே போலீஸாரிடம் வருகிறது. குற்றவாளிகள் தண்டனை பெற வெளியுறவு அமைச்சகத்தின் உதவியை கோர உள்ளேன்.

இந்த நிலையில் இந்தத் தாக்குதலுக்கு கேரள நாடளுமன்ற உறுப்பினர் ஜோஸ்.கே. மணி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் குரல் எழுப்ப உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.