Jul 19

இந்து, பௌத்தம், இஸ்லாம் ஒரே குடையில்! திரங்கானுவில் ஒரு வித்தியாசமான குடும்பம்!

கோலாலம்பூர்,  ஓர் இந்து பெண்ணும் புத்தமதத்தை சேர்ந்த அவரது கணவரும் மூன்று முஸ்லிம் பிள்ளைகளைக் கடந்த 23 ஆண்டுகளாக வளர்த்து ஆளாக்கியுள்ளனர். அதுவும் அந்தப் பிள்ளைகள், இஸ்லாத்தின் போதனையைப் முறையாக பின்பற்றி வரும் வகையில் வளர்ந்துள்ளனர். 

திரெங்கானுவில் ஜெரித்தைச் சேர்ந்த 65 வயதான சி.செனியா என்ற அந்த இந்துப் பெண், புத்த மதத்தைப் பின்பற்றும் சீனரை மணம் புரிந்தார். அதேவேளையில், இஸ்லாம் மதத்தைத் தழுவிய தனது தங்கைக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளும் சிறு வயதிலிருந்தே செனியாவின் பாதுகாப்பில்தான் வளர்ந்து வருகின்றன.

தனது தங்கை முஸ்லீம் போலீஸ்காரரை திருமணம் செய்ய இஸ்லாமிய மதத்தைத் தழுவியதாக செனியா குறிப்பிட்டார். பின்னர், கணவரைப் பிரிந்து தனது மூன்று பிள்ளைகளையும் தன்னிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் கூறினார்.

சுமார் 23 ஆண்டுகளாக, 20-லிருந்து 24 வயதிற்கும் இடைப்பட்ட அம்மூன்று பிள்ளைகளும் தனது அரவணைப்பில் இருக்கின்றனர் என்று செனியா சொன்னார். கோலாலம்பூரில் வசிக்கும் தனது தங்கை அடிக்கடி வந்து பிள்ளைகளைப் பார்த்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்மூன்று பிள்ளைகளையும் இஸ்லாமிய மதப் போதனைகளின் அடிப்படையில் வளர்த்ததாக செனியா சொன்னார்.

தொழுகைச் செய்வது, நோன்பு எடுப்பது, திருக்குரான் ஓதுதல் போன்ற இஸ்லாமிய மதப் போதனைகளை இம்மூன்று பிள்ளைகளும் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர் என்று செனியா சுட்டிக்காட்டினார்.

முஸ்லீம், இந்து ,பௌத்தம் ஆகிய மூன்று மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் பிள்ளைகள் பின்பற்றும்  இஸ்லாமிய போதனைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். மூன்று பிள்ளைகளும் தொடர்ந்து இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுவதையே தனது கணவரும் ஆதரிக்கிறார் என செனியா பெருமையாகக் கூறுகிறார்.