Mar 27

ஐ.நா. சொல்லும் எல்லாவற்றையும் செய்ய முதுடியாது: அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல

ஐ.நா.வுடன் இலங்கை அரசாங்கம் ஒருபோதும் முரண்பட்டுக்கொள்ளாது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ள சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல. அவ்வாறான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றோம் என்பதற்காக அந்த அமைப்பு கூறும் எல்லா விடயங்களுக்கும் தலை சாய்க்க வேண்டுமென்றில்லையெனவும் முடிந்ததை செய்வோம். முடியாததை செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். 

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிரியெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்துள்ளதாவது; 

"சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து அரசியல் அதிகாரங்களுக்காக அரசியல் கட்சிகள் இன மத வாதங்களை முன் வைத்து செயற்பட்டதன் விளைவாகவே 30 வருட கால யுத்தம் நிகழ்ந்தது.  சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் சுதந்திரம் கிடைத்த பின்னர் அந்நாட்டில் வசிக்கும் சகல இனங்களுக்கும் ஏற்றால் போல்  இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பை உருவாக்கி அதனை சிறப்பாக பேணியுள்ளன. 

மலேசியாவிலும் இலங்கை போன்று சிவில் போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனாலும் மக்களுக்கு ஏற்றாற் போல் அரசியலமைப்பை தயாரித்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையிலோ மாறி மாறி பந்தை வீசுவது போல் இனப்பிரச்சினையை கையாண்டதால் யுத்தத்தை எதிர்கொள்ள நேரிட்டது. எவ்வாறாயினும் தற்போது நாம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.   “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்புடன் இதனை செய்வோம். 

கடந்த ஆட்சிக்காலங்களில் இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் அதற்கு தமிழ் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. சகல மக்களிடமும்  அனுமதியை பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்புடன் இதனை செய்வோம்.  இதேவேளை புதிய அரசியலமைப்பினூடாக எமது நாட்டில் சிங்கள, பௌத்த மக்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் ஐக்கிய தேசிய கட்சி பாதுகாக்கும் என்பதனை நாம் பெருமையுடன் கூறிக்கொள்கின்றோம். 

எமது நாட்டுக்கு எதிராக கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன. அப்போது  ஆட்சியாளர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அந்த நிலைமை இப்போதும் தொடர்ந்திருந்தால் எமது நாடு தனிமைப்பட்ட நாடாக மாறியிருக்கும். ஆனால் நாம் அவ்வாறு செயற்படவில்லை. ஐ.நாவுடன் சிறப்பாக கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்கின்றோம். அவ்வாறு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றோம் என்பதற்காக அவர்கள் கூறுவது அனைத்தையும் செய்ய வேண்டுமென்றில்லை. சர்வதேச நீதிபதிகளை கொண்டு வருவோம் என கூறுகிறார்கள் ஆனால் அதனை நாம் செய்யப் போவதில்லை. 

இப்படித்தான் நாம் சர்வதேசத்துடன் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்கின்றோம். முடிந்ததை செய்வோம் முடியாததை செய்ய மாட்டோம் என்று  கூறிவிடுவோம்.  கடந்த அரசாங்கம் போல் சர்வதேசத்துடன் கோபித்துக்கொண்டு இருக்க மாட்டோம். எவ்வாறாயினும் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக நாம் சர்வதேசத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளோம். இதன்படி செயற்படுவோம். அதேபோன்று மற்றைய நாடுகள் மீறினாலும் அதனை எம்மால் சுட்டிக்காட்ட முடியும். எவ்வாறாயினும் சர்வதேசத்துடன் இணைந்து நாம் நாட்டை முன்கொண்டு செல்வோம். என அவர் தெரிவித்துள்ளார்.