Jul 18

2,845 ரிங்கிட் வளர்ப்பு மீனை பொரித்து தின்பதா? 'வறுத்தெடுத்த' வலைத்தள வாசிகள்! (VIDEO)

அழகிய 'லோஹான்' வளர்ப்பு மீனை 2,845 ரிங்கிட் கொடுத்து வாங்கி வந்து, அதனை வெட்டி, எப்படி பொரித்துச் சாப்பிடுவது என்று முகநூலில் போட்டுக் காட்டிய ஆடவரை ஆவேசமாகவலைத் தளவாசிகள் விமர்சனங்களால் வறுத்தெடுத்தனர்.

சீனர்களின் அதிர்ஷ்ட தேவதையாகக் கருதப்படும் லோஹான் மீனை பொரித்து, ருசித்து சாப்பிடும் காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த அந்த நபரின் செயல் பலரின் ஆத்திரத்தைத் தூண்டியது. பலர் வண்ணம் மிகுந்த அந்த மீனுக்காக அனுதாபப்பட்டனர்.

கடந்த ஜூலை 11-ஆம் தேதி, 28 வயதான முகமட் பிர்டாவுஸ் ஒஸ்மான் என்ற இயந்திரத்துறை தொழில்முனைவர், 2,845 ரிங்கிட் கொடுத்து தனது நண்பரிடமிருந்து அந்த அழகிய மீனை வாங்கினார்.

அழகிய கொண்டையுடன் விளங்கிய லோஹான் மீ்னின் தலைப் பகுதியை வெட்டி எடுக்கும் காட்சியும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது. பின்னர் மஞ்சள் தூள், உப்பு மற்றும் புளியில் ஊற வைத்து அந்த மீனை நன்றாக பொரித்தார். பின்னர் தனது வீட்டில் குடியிருக்கும் நண்பருடன் அந்த மீனை ருசித்துச் சாப்பிட்டும் காட்சியையும் காணொளியில் பதிவேற்றம் செய்தார்.

'தலப்பியா' மீனை விட இந்த மீன் இன்னும் சுவையாக இருந்ததாக அதில் விமர்சனமும் செய்தார். அதை உண்ட பின், அவருக்கும் அவரது நண்பருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று பெருமையாகவும் கூறிக்கொண்டார்.  இந்தக் காணொளி சமூக ஊடகத்தில் பரபரப்பாக பரவலானது.

இதற்கு மாறாக, அழகுக்காகவும் அதிர்ஷ்டம் கருதியும் வீடுகளில் கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கப்படும் இந்த அழகான மீனை இப்படியா ஈவு இரக்கமின்றி வறுத்துத் தின்பார்கள்? என்ற கேள்வியை எழுப்பிய வலைத் தளவாசிகள் அவரது செயலை மிக கடுமையாக விமர்சித்தனர்.

'அழகாக இருந்தால் தொட்டியில் தான் வளர்க்க வேண்டுமா? மீன் என்றால் உண்பதற்கான ஓர் உணவு வகைதானே...அப்படியானால் சாப்பிடக் கூடாது என்று சொல்வது தவறான கூற்று தானே..' என்று அந்த மீன் பிரியர் பதிலுக்கு வாதிட்டார்.