Jul 18

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 37,000ற்கும் அதிகமானோர் இடம்பெயர்வு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுக்கடங்காது தொடர்ந்து பரவிவரும் காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக இதுவரை 37,000ற்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போதும் 160க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ எரிந்துவரும் நிலையில், தொடர்ந்தும் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேகமான காற்றும் வரட்சியான காலநிலையும் காட்டுத்தீ பரவலை தீவிரமடைய செய்துள்ள நிலையில், தீப் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காட்டுத்தீயின் பரவலை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பொதுமக்களையும், அவர்களது பெறுமதியான சொத்துக்களையும் முடிந்தவரை பாதுகாப்பதில் அதிகாரிகள் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இருந்த போதிலும் இதனையும் விடவும் மோசமான சூழ்நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ளதை விடவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் நாடகளில் எதிர்பார்க்கப்படும் நிலையில், மேலும் மோசமான தீப்பரவல்கள் ஏற்படக்கூடும் எனவும், எனவே அனைவரும் எப்போதும் வெளியேறுவதற்கு தயாரான நிலையில் இருக்கவேண்டிய தேவை உள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகள் என்று அனைத்து தரப்பினரும் இந்த நிலைமையினைச் சமாளிப்பதற்கு மிகுந்த பிராயத்தனத்துடன் செயற்பட்டு வருகின்றனர் என்பதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 415 பேர் உட்பட, 2,895 தீயணைப்பு படையினர் ஈடுபட்டு்ளளனர் என்பதுடன், இதுவரை 1,361,737 ஹெக்டேயருக்கும் அதிகமான பரப்பளவு காட்டுத்தீக்கு இரையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.