May 30

கன்னியாவைச் சூழும் ஆபத்து


ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி நிலையில்தான் இருந்துகொண்டிருக்கின்றது. திருமலையை சிங்கள மயமாக்க 1947 ஆம் ஆண்டியிருந்தே சிங்கள ஆட்சியாளர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இதில் கணிசமான வெற்றியையும் அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். திருமலைத் தமிழர்களைப் பொறுத்தவரை சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து அதனைப் பாதுகாப்பதற்கான போராட்டம்தான் அவர்களின் வரலாறாக உள்ளது. தமிழ்த் தலைமைகளின் தூர நோக்கற்ற, உறுதியற்ற செயற்பாடுகளால்தான் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த திருமலையில், இன்று அவர்கள் சிறுபான்மையினராகிவிட்டனர். இப்போது, சரித்திர ரீதியாக தமிழர்களுக்கு இருக்கக்கூடிய சில அடையாளங்களையும் அழித்துவிடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

பாரம்பரியமாகத் தமிழ் மக்களின் புனிதப் பிரதேசமாக விளங்கி வருவது கன்னியா வெந்நீரூற்று. சரித்திர ரீதியாகவும், கர்ண பரம்பரைக் கதைகள் மற்றும் புராணக் குறிப்புகள் வாயிலாகவும் புனிதத் தமிழ் பிரதேசமாக மதிக்கப்பட்டு வந்த தலம் இது. தமிழ் மன்னன் இராவணனினால் கன்னியா வென்நீரூற்று ஸ்தாபிக்கப்பட்டது என்பது ஐதீகம். திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அண்டியிருக்கும் "இராவணன் வெட்டு" முதல் கன்னியா வெந்நீரூற்று வரை இலங்கேஸ்வரனைத் தொடர்புறுத்திப் பேசும் பழங்கதைகள் நம் மத்தியில் உள்ளன. தமிழர்களின் பாரம்பரியத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட முக்கிய பிரதேசம் அது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பகுதியைத் திட்டமிட்டு, பலவந்தமாக சிங்கள, பெளத்த பேரினவாதத்தின் அடையாளமாக மாற்றும் முயற்சிகள் இப்போது முன்னெடுக்கப்படுகின்றன.

கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் உள்ள வெல்கம் விகாரைப் பகுதித் தேரர்கள் வெந்நீரூற்றுப் பகுதியை பலவந்தமாகக் கைப்பற்றுவதற்கு மேலாதிக்கத்தைப் பிரயோகித்து வருகின்றமையை அண்மைக்காலத்தில் காணமுடிகின்றது. கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டிருக்கின்றது. பலவந்தமாக அந்த ஆலயம் இருந்த காணியைக் கையகப்படுத்துவதற்கான அடாவடித்தன நடவடிக்கை சிங்களவர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. நீண்ட காலமாக - பாரம்பரியமாக - சந்ததி சந்ததியாக இந்தக் காணி தமிழர்களுக்குரியதாக இருந்து வருகின்றது. அதனைவிட்டுக் கொடுக்கத் தமிழர் தரப்பு இணங்காத சூழலில் அதைப் பிடுங்கி எடுப்பதற்காக அரசின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. ஐ.எஸ். தாக்குதல் அச்சுறுத்தலில் நாடு உறைந்துபோய்க் கிடக்கும் நிலையில், இந்தக் கைங்கரியத்தில் அரச ஆதரவுடன் பிக்குகள் சிலர் ஈடுபட்டுள்ளார்கள். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே இன்று ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவராகப் பார்க்கப்படுகின்றார். ஜனநாயக ரீதியாக 16 உறுப்பினர்களை தமிழ் மக்கள் அவருக்குப் பெற்றுக்கொடுத்தார்கள். பாராளுமன்றத்தில் இது கணிசமான ஒரு பலம். சர்வதேச அங்கீகாரம். அதனால்தான் மூன்று வருடங்கபளுக்கு எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரால் இருக்க முடிந்தது. அவரது கோட்டையான திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் எல்லாம் சிங்கள, பெளத்த மயமாக்கப்பட்டுவிட்டது. 1977 முதல் பெரும்பாலும் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சம்பந்தன்தான். ஆனால், அவருடைய காலத்தில்தான் திருகோணமலை மண் மோசமாக பேரினவாத சக்திகளின் ஆக்கிரமிப்பில் சிக்கி, தமிழர் தேசம் சுருங்கிக் கொண்டிருக்கின்றது.

பேரினவாதப் பிடியிலிருந்து தனது மாவட்டத்தை, தனது தொகுதியைக்கூட பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கும் சம்பந்தன், எப்படி முழுத் தமிழினத்துக்கும் தலைமை தாங்கி, இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தரப் போகின்றார் என்ற கேள்வி பல தரப்பினராலும் இன்று எழுப்படுகிறது. கன்னியா வென்னீருற்றுப் பகுதி ஏற்கனவே பெருமளவுக்கு சிங்கள மயமாக்கப்பட்டுவிட்டது. அந்தப் பகுதியில் புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு சில பிக்குகளும் குடிவந்துவிட்டார்கள். அறிவித்தல் பலகைகள் பெரும்பாலும் தனிச் சிங்களத்தில்தான் உள்ளன. உள்ளுறைவதற்கான பற்றுச் சீட்டில்கூட தமிழ் இல்லை. அதுகூட தனிச் சிங்களத்தில்தான். கேந்திர முக்கியத்துவம்மிக்க  திருமலையை சிங்கள மயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் ஒரு கட்டமாக வென்னீரூற்றுப் பகுதியும் சிங்கள மயமாகியிருக்கின்றது. 

பேரினவாதிகளுக்கு இப்போதுள்ள ஒரேயொரு பிரச்சினை - சிங்கள மயமாக்கினால் மட்டும் போதாது, தமிழர்களுக்கென இருக்கக்கூடிய வரலாற்று அடையாளங்களையும் இல்லாமல் செய்வதுதான். அதற்கான முயற்சிகள்தான் இப்போது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்தப் பகுதியில் இந்துக் கோவில் ஒன்று இருந்தமைக்கான அடையாளத்தையும் இல்லாமல் செய்துவிட்டால், எந்தக் காலத்திலும் தமிழர்கள் அதற்கு உரிமை கொண்டாட முடியாது என சிங்கள அதிகார வர்க்கம் சிந்திக்கின்றது. இது போல பல இடங்களில் ஏற்கனவே நடைபெற்றிருக்கின்றது. சிங்கள மயமாக்கலையே இலக்காகக்கொண்டு செயற்படும் தொல்பொருள் திணைக்களம் இதற்கு உதவுகின்றது. திருமலை பெருமளவுக்கு இழக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை. அடுத்ததாக நாம் அங்கு வாழ்ந்தற்கான அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியையும் நாம் பார்த்துக்கொண்டு இருக்கப்போகின்றோமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு - குறிப்பாக திருமலையின் பிரதிநிதியாக சுமார் 4 தசாப்தங்களாக இருக்கும் சம்பந்தனுக்கு இதனைப் பாதுகாப்பற்கான பொறுப்புள்ளது என்பதை "ஈழமுரசு" வலியுறுத்துகின்றது. திட்டமிட்ட முறையில் தமிழர் தரப்பு செயற்படாவிட்டால் எமது மண்ணை மட்டுமல்ல எமது அடையாளங்களையும் இழந்துவிட வேண்டிய நிலை உள்ளது என்பதையும் ஈழமுரசு சுட்டிக்காட்டுகின்றது. சிங்களவர்கள் வேகமாகவும், திட்டமிட்ட முறையிலும் செயற்படும் நிலையில் நாமும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் செயற்படாவிட்டால் எதிர்கொள்ளப்போகும் ஆபத்தை கன்னியாவில் நடைபெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இது கன்னியாவுடன் மட்டும் நின்றுவிடப்போவதில்லை என்பதையும் தமிழ் மக்கள் மனங்கொள்ள வேண்டும்.