Mar 26

மகிந்தவுடன் எந்த தொடர்பும் இல்லையாம்; அதிரடியாக அறிவித்தது லைக்கா நிறுவனம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லையென லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றும் செய்யாதவர்களின்  பொய்களை நம்பி ரஜினி தனது பயணத்தைஇரத்து செய்துள்ளார்.

ரஜினியை தர்மசங்கடத்திற்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே இலங்கைக்கு அவரை செல்வவேண்டாம் என்ற கூறி இப்படி ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் லைக்கா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

லைக்கா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

நடிகர் ரஜினி கலந்து கொள்வதாக இருந்த இலங்கை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினி தனது பயணத்தை இரத்து செய்துள்ளார்.

சுயலாபத்திற்காக சிலர் பரப்பும் வதந்திகளை அரசியல்வாதிகள் ஆதரிக்கின்றனர். தொழில் போட்டியாளர்களும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். 

முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷ வுடன் எங்களுக்கு தொழில் தொடர்பு இருப்பதாக வதந்தி பரப்பி வருகின்றனர். எங்களின் திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை.

இலங்கை போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே அவர்களுக்கு வீடு கட்டித் தருகிறோம். போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

நடிகர் ரஜினியை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே இப்படி ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி கலந்து கொள்ள இருந்தவிழா மட்டும் இரத்து செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும் ஏப்ரல் 10ஆம் திகதி நடக்க இருந்த வீடுகள் வழங்கும் விழா திட்டமிட்டப்படி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.