Mar 26

கல்குடா மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பணிப்புரைக்கமைய கல்குடாவில் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறப்படும் மதுபான உற்பத்திச் சாலைக்கு  எதிராக வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளரால்  முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இதனடிப்டையில் இன்று பிற்பகல்  வாழைச்சேனை பிரதேச  சபையின் செயலாளரால்  கல்குடா  பொலிஸ் நிலையத்தில்  இந்த  முறைப்பாடு  பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 

குறித்த  நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள் எதிர்காலத்திலும் எந்த அரசியல் சூழ்நலையின் கீழும் முன்னெடுக்கப்படாமல் இருக்கும்பொருட்டு  நீதிமன்ற தடையுத்தரவை பெறும் நோக்கிலேயே  இந்த முறைப்பாடு  பதிவுசெய்யப்பட்டுள்ளது.

 

குறித்த  முறைப்பாட்டுக்கமைய  விரைவில்  நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்புக்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை  அதிகரித்துள்ள நிலையில்  மதுபான உற்பத்தி நிறுவனங்களும்  இங்கு கால்பதிப்பதை   ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது,

 

கடந்த செப்டம்பர் மாதம் கிழக்கு மாகாண சபையின் 63  ஆவது  அமர்வில்  நிர்மாணிக்கப்படுவதாக கூறப்படும் மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக  தீர்மானமொன்றுகொண்டு  வரப்பட்டு அதன் நிர்மாண நடவடிக்கைகளை  உடனடியாக நிறுத்துமாறு பிரதேச  சபையின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது.

 

இதனடிப்படையில்  எதிர்காலத்திலும் எவ்வாறான  அரசியல் சூழ்நிலைகளின் கீழும்  மதுபான உற்பத்திசாலை  கிழக்கில் நிர்மாணிக்கப்படக் கூடாது என்ற நோக்கில்   விரைவில  அதற்கான  தடையுத்தரவொன்றை பெற்றுக்கொள்ளுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  பணிப்புரை விடுத்திருந்தார்,