May 23

10 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் லண்டன் ட்ரபால்கர் சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக நினைவு கூறப்பட்டது!


உலகின் பார்வை ஈழத் தமிழர் பக்கம் திரும்புகின்றது. தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இன அழிப்பு, சர்வதேச விசாரணை மூலம் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும், அவர்கள் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள், என்று பல்வேறு  கட்சிகளை சார்ந்த சக்தி வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைத் தளத்தில் உலகளாவிய மதிப்புடையோர், சர்வதேச ஊடகத் துறையில் பிரபல்யமானவர்களின் குரல்கள் லண்டன் மாநாகரின் மத்தியிலுள்ள ட்ரபால்கர் சதுக்கத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற 10ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு தினத்தில் எதிரொலித்தது.

ஸ்ரீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பிரித்தனியா தமிழர் பேரவையினரால் 18 மே 2019 அன்று லண்டனிலுள்ள ட்ரபால்கர் சதுக்கம் (Trafalgar Square) என்னும் இடத்தில் பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் நினைவு கூறல் நிகழ்வு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான ஏனைய இன மக்களும் இந்த நிகழ்வில் பார்வையாளர்களாக இணைந்திருந்தனர்.

எம் மக்கள் மீதான இனப்படுகொலைக்கான நீதியையும் எமக்கான ஒரு இறுதி தீர்வையும் சர்வதேசத்திடம் வேண்டி  முள்ளிவாய்க்கால் நினைவு தினம், முக்கியமான தலைவர்களின் பிரசன்னத்துடனும் தமிழ் மக்களுக்கு அவர்களின் ஆதரவை வெளிப்படுத்தும் செய்திகளுடனும் செறிவான கருப்பொருளுடனும் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதனை சர்வதேச சமூகத்துக்கு வெளிக்கொணரும் முகமாகவும் தமிழர்களுக்கான நீதியையும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையில் உள்ள காலதாமதத்தை வெளிக் கொண்டு வருவதற்காகவும் 'தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம்' என்னும் கருப்பொருளுடன் 10 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நினைவு கூறப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தி சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் செய்தியும், தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான பல ஆவணப்படங்களை தயாரித்து எம் மீதானஇனப்படுகொலையினை வெளி உலகுக்கு கொண்டு வந்தவருமான ஊடகவியலாளர் கெலம் மெக்ரே அவர்களின் உரையும், நில அபகரிப்பு போன்ற விடயங்களை ஆவணப்படுத்தி உலகின் முன் வெளிப்படுத்தும் அமெரிக்காவிலுள்ள பிரபல்யம் வாய்ந்த ஓக்லாண்ட் நிறுவனத்தின் (Oakland institute) நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான அனுராதா மிட்டல் (Anuradha Mittal) அவர்களின் செய்தியும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினரும், கனடிய பாரம்பரியம் மற்றும் பன்முக கலாச்சார பிரதி அமைச்சரான கரி ஆனந்தசங்கரி அவர்களின் காணொளியும் காண்பிக்கப்பட்டது.

பிரித்தானிய பிரதான எதிர்க்கட்சியான தொழில் கட்சியின் நிழல் நிதி அமைச்சரான ஜோன் மெக்டோனல் (Rt Hon John Mcdonnell) மற்றும் 2009 ஆண்டு பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக இருந்து இலங்கையில் போரை நிறுத்துவதற்கு முயற்சி செய்த டேவிட் மிலிபாண்ட், சேர் எட் டேவி (Rt Hon Sir Ed Davey MP), தெரசா வில்லியர்ஸ் (Rt Hon Theresa Villiers MP) போன்றோர்களின் ஆதரவு செய்திகளும் இடம்பெற்று அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரைகளுடன் உணர்வுபூர்வமாக நினைவு கூறப்பட்டது.

இனப் படுகொலைகளின் ஆதாரபூர்வமான விடயங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியொன்றை இளையோர்கள் அங்கு பல்லின மக்களுக்கு விளக்கமளித்தனர். அங்கு வந்த பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்வையிட்டது மட்டுமல்லாது விளக்கங்கள் கேட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டனவற்றை புகைப்படமாக எடுத்துச் சென்றனர்.

இன அழிப்பு தொடர்பான முக்கியமான விடயங்களை வெளிக் கொண்டு வரும் முகமாக பல்வேறு விடயங்களைதாங்கிய ஒளித் திரையுடனான வாகனப் பவனி “நிகழ்வு” நடைபெற்ற இடங்கள் உட்பட 8 மணித்தியாலத்திற்கு மேல் லண்டன் மாநகரைச் சுற்றி வலம் வந்தது குறிப்பிடத் தக்கது.

இன் நினைவு தினத்தில் மேலும் சிறப்பம்சமாக பிரித்தானியாவாழ் தமிழ் சிறார்கள் மற்றும் இளையோர்களினால் இனப் படுகொலை தொடர்பான விடயங்களை அங்கு பிரசன்னமாகவிருந்தோர் மத்தியில் வெளிக்கொணரும் முகமாக மேடை நாடகங்களும் நாட்டிய நிகழ்வும்  முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் இளையோர் செயற்ப்பாட்டாளரும் இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால்வரை வந்து தனது சிறுபராயத்தில் தாங்கள் சந்தித்த அவலங்கள் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் கொடூரத் தாக்குதல்கள் பற்றிய தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டது மட்டுமன்றி இதற்கான சரியான தீர்வை பெற பாதிக்கப்பட்ட நாம் எப்படியான வேலைத் திட்டங்கள் மூலம் எமக்கான விடுதலையை பெற முடியும் என்பதனை தெளிவு படுத்தினார். ஏனைய இளைய செயற்ப்பாட்டாளர்கள் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப் படுகொலையை சர்வதேசத்தின் முன் கொண்டு சென்று எம் மக்களுக்கு நீதியையும் நிரந்தர பாதுகாப்பினையும் பெற்றுக் கொடுப்போமென உறுதி எடுத்தனர்.

அங்கே சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அரசியல், மனித உரிமை, ஊடகவியல் பிரமுகர்கள் வெளிப்படையாக நீதிக்கும் தமிழ் மக்களின் உரிமைக்குமாக குரல் கொடுத்தமை எம் மக்களின் கதறலும் கண்ணீரும் அவர்கள் கொடுத்த அளப்பரிய தியாகங்களும் வீணாகி விடாது, என்றோ ஒரு நாள் அவர்களின் கனவுகளும் அபிலாசைகளும் கை கூடி வரும் எனும் நம்பிக்கைக்கு வலுவூட்டியுள்ளது.

நவநீதம் பிள்ளை (Navaneetham Pillay, Former United Nations High Commissioner for Human Rights 2008 - 2014)

இவர் 2009ம் ஆண்டு இலங்கை இனவாத அரசினால் எம்மக்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கு எதிரான நீதி விசாரணை, பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக முக்கிய பணியாற்றியிருந்தார்.

அவர் சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக தொடரும் பல்வேறு மனிதவுரிமை மீறல் நடவடிக்கைகள சுட்டிக்காட்டியதுடன் இலங்கை அரசு தான் ஏற்றுக்கொண்ட ஐநாவின் தீர்மானமான 30/1 நிறைவேற்றாததனை சுட்டிக் காட்டினார். 70 வருடங்களாகியுள்ள சிறிலங்காவின் தேச நிர்மாணம் என்பது அங்கு ஆழமாக புரையோடிப் போயுள்ள பிரச்சனைகளை கண்டறிய தவறிவிட்டது, தமிழ்மக்களுக்கு எதிரான மனிதவுரிமை மீறள்களை கண்டறியவும் தவறிவிட்டது என்பதனை சுட்டிகாட்டினார்..

டேவிட் மிலிபான்ட் (The Rt Hon David Miliband, Former Foreign Secretary of State for Foreign & Commonwealth Affairs for United Kingdom, President of the International Rescue Committee))

2009 ஆண்டு பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சராக இருந்து இலங்கையில் போரை நிறுத்துவதற்கு முயற்சி செய்த டேவிட் மிலிபான்ட் (David Miliband) பிரித்தானிய தமிழர் பேரவைக்கு வழங்கிய செய்தியில் தாம் 2009ம் ஆண்டு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததனை நினைவு கூர்ந்த அவர் அன்று தமிழ் மக்கள் பட்ட துயரங்களையும் சுட்டிக்காட்டி அவர்களுக்கான நல்லதொரு பதிலை தம்மால் கொடுக்க முடியாமல் போனதையிட்டு மனம் வருந்தினார். உண்மைக்கும் உரிமைகளுக்குமான போராட்டங்கள் இலங்கையில் மட்டுமல்லாது உலகலளாவிய ரீதியில் தொடர்கின்றன. நடந்தவற்றை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள் என்பதனை நான் அறிவேன் என்றும் நானும் அதனை மறக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டோனல் MP (Rt Hon John Mcdonnell MP, Shadow Chancellor of the Exchequer)

பத்து வருடங்களுக்கு முன் துயரமான இழப்புகள் நடக்கும் போது பாராளுமன்றத்தில் நாம் ஒன்றாக நின்றோம். தமிழ் மக்களுக்கு எதிரான ஏறத்தாழ இனஅழிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிலர் விபரித்ததை நான் அறிந்திருக்கிறேன். கொலைகளும் கற்பழிப்புகளும் அதன் பின்னர் துன்புறுத்தல்களும் தமிழர்களின் நில அபகரிப்புகளும் காணாமல் ஆக்கப்படுவதும் இப்போதும் இலங்கையில் நடைபெற்றுகின்றது. 10 வருடங்கள் ஆகியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இன்றும் அவர்கள் குடும்பங்கள் தேடியவண்ணம் உள்ளனர். ஆனால் அது 10 ஆண்டுகளுக்கு முன்பு மட்டும் அல்லாமல், 1983 ம் ஆண்டு காலப் பகுதியில் இருந்தே தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றது எம்மில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம். ஒரு விசயத்தை மிகத் தெளிவாக தெரிவிக்க விரும்புகிறோம், இலங்கையில் போர்க் குற்றம் புரிந்தவர்கள் எந்த வித விசாரணைகள் இன்றியும் தண்டனைகள் இன்றியும் சுதந்திரமாக உலாவுகின்றனர். என்ன நடந்தாலும் எவ்வளவு காலமாயினும் தமிழ் மக்கள் மீது மேற் கோள்ளப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பொறுப்பு கூறல்களையும் வெளிக் கொண்டுவருவோம். தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு, அமைதி, நீதி அத்துடன் தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கு நாம் ஆதரவு அழிப்போம். நடைமுறை சாத்தியமான கொள்கைகளை ஏற்படுத்தும் வரை இலங்கையின் மீது மிகவும் கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை பிரயோகிப்பேம். அத்துடன் இலங்கை போன்ற மனித உரிமைகளை மீறுகின்ற நாடுகளுக்கு ஆயுத விற்பனைகள், இராணுவப் பயிற்சிகள், காவல் துறை பயிற்சிகள் அல்லது வேறு எந்த பயிற்சிகளும்  பிரித்தானியாவில் நடைபெற மாட்டாது என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சேர் எட் டேவி (The Rt Hon Sir Ed Davey MP)

தமிழ்மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு தாக்குதலில் பலர் காயப்பட்டதுடன் பலர் காணாமல் போய்விட்டனர். தாம் பிரித்தானிய அரசாங்கத்திற்கு இரண்டு விசயங்கள் சொல்ல வேண்டியுள்ளது. 2015, 2016 காலகட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வர்த்தக சலுகைகளை கொடுக்க முன்னர், சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்தும் மீறிக்கொண்டு இருப்பதால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை வர்த்தக சலுகையை நிறுத்தி வைப்போம் என ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து அறிவிக்க வேண்டும். இரண்டாவதாக இந்த நாட்டிற்கு வரும் தமிழ் அரசியல் தஞ்சம் கோருவோர், அங்கே சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தால் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பப் கூடாது என்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

கெலம் மெக்ரே (Callum MacRae, JOURNALIST, FILM MAKER and WRITER, DIRECTOR, "SRILANKA'S KILLING FIELD", "NO FIRE ZONE")

சனல் - 4 ஊடகவியலாளராகவிருந்த  கெலம் மெக்ரே கடைசியாக நடைபெற்ற சிறிலங்கா இராணுவத்தின் படுகொலைகள் சம்பந்தமான முக்கிய செய்திகளை உலகறியச்செய்தவர். 10 வருடங்களின் பின்னரும் உண்மைக்கும் நீதிக்குமாண பயணம் தொடரவேண்டும் என்றார்.

அனுராதா மிட்டல் (Anuradha Mittal, Founder & Executive Director, Oakland Institute, USA)

சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறி இலங்கை இராணுவம் தனது சொந்த குடிமக்களை குண்டு வீசித் தாக்கியதனை நினைவு கூர்ந்த அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த போதிலும், யுத்தத்தின் நீண்ட நிழல் பாதிக்கப்பட்டவர்கள் மீது தொடர்கிறது என்பதை தெளிவாக நிரூபித்துள்ளது. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் இன்னும் தங்கள் வீடுகள், நிலங்களை இராணுவத்தினர் விடுவிக்காததனையும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பாம்போஸ் கரோலம்போஸ் (Bambos Charalambos MP)

நான் சைப்ரஸ் மக்களை இனவழிப்புக்குள்ளாக்கியது பற்றி நினைவு படுத்த விரும்புகிறேன். அப்பாவி தமிழர்கள் மீது அட்டூழியங்களை ஏற்படுத்தியவர்கள் நீதிக்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்ய ஸ்ரீலங்கா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். இனப் படுகொலை புரிந்தவர்கள் தண்டிக்கபட வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் மீது நான் அழுத்தம் கொடுப்பேன். நான் APPGT உடன் இணயவுள்ளேன். நாங்கள் ஒருபோதும் கைவிடமாட்டோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நீதி கிடைக்கும் வரை நான் உங்களை ஆதரிப்பேன் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ஹால்ஃபன் (The Rt Hon Robert Halfon MP)

தமிழ் மக்கள் இனப்படுகொலை கொடூர இழப்புகளால் பாதிக்கப்பட்டனர். 146,000 தமிழர்கள் காணாமல் போனார்கள் அல்லதுகொல்லப்பட்டனர். 280,000க்கும் மேற்பட்டவர்கள் முட்கம்பி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். தமிழர்களுக்கு எதிராக நடத்தியஇனப்படுகொலை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்தது என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் தமிழ் 

மக்களின் உரிமைகளை அங்கீகரித்து முழுமையான சுயாட்சிஅவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நாம் கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், எதிர்காலத்தில் மீண்டும் இதுநடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறிலங்காவில் படுகொலைகளுக்கு பொறுப்பானவர்கள் 10 ஆண்டுகளுக்குப்பின்னர் சர்வதேச நீதிமன்றத்தில் நீதிக்கு கொண்டு வரப்படுவதுதான் ஒரே வழி என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் இயன் ஸ்டீவர்ட் (Iain Stewart MP)

உலகில் மேலும் மக்கள் இனப்படுகொலைகளால் பாதிக்கப்படுவதாகவும் எல்லோரும் ஒண்று சேர்ந்து அதை தடுப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் தம்மை பிரதிநிதித்துவம் படுத்தும் மக்களுக்கு தாம் உதவத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் கிராண்ட் - பழமைவாதக்கட்சியின் உப தலைவர் (Helen Grant – Vice Chair of the Conservative Party)

இன்று முள்ளிவாய்கால் ஞாபகார்த்த தினம். எனது சிந்தனைகளும், பிரார்த்தனையும், இறந்த அந்த அப்பாவி பொதுமக்கள் அனைவருடனும் இருப்பதாகவும் இத்தகைய கொடூரமான மனித இழப்பு ஒருபோதும் மறக்கப்படக் கூடாது, மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது, மேலும் இங்கிலாந்திலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அவர்கள் நீதிக்காக தொடர்ந்து போராடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா கிரீஸி (Stella Creasy MP)

இலங்கையிலுள்ள தமிழ் சமூகம் அநீதிக்கு ஆளாகியுள்ளதோடு அவர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களுக்குத் தேவையான சமாதானமும் இல்லாமல் பாதிக்கப்பட்டனர் .முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூரும் மற்றும் தமிழர்களின் இனப்படுகொலைகளை அங்கீகரிப்பதற்காக இன்றைய பாராளுமன்றத்தில் நாம் இங்கு இருக்கின்றோம் . தமிழர்களுக்கு அநீதிகள் மிக நீண்ட காலமாக நடந்துள்ளது .ஐ.நா. தீர்மானங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதனை சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் தெரசா வில்லியர்ஸ் (The Rt Hon Theresa Villiers MP)

தமிழ்மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்த துயரத்தை நான் நன்கு அறிந்திருக்கிறேன், ஆனால் அந்த கொடூரமான அறிக்கைகள் மீண்டும் மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற கொலைகளை மீண்டும் வாசிப்பதில் இன்னும் வேதனையாக இருக்கிறது. கொடூரமான யுத்தத்தில் நடந்த எல்லாவற்றிலும் முள்ளிவாய்கால் படுகொலையானது இழிந்த ஒரு அத்தியாயமாக வெளிப்படுகிறது. இலங்கை அரசாங்கப் படைகள் குண்டுதாக்குதலினாலும் கனரக ஆயுதங்களுடன் தாக்குதல்கள் நிகழ்ந்தனர். உலகின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் மிக மோசமான செயல் இது. முள்ளிவாய்க்காலுக்குப் பொறுப்பானவர்கள் தமது கொடூரமான குற்றங்களுக்கு பதிலளிக்கும் ஒரு நாளை நாம் காண முடியும் என நான் நம்புகிறேன் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் பேக்கர் (Steve Baker MP)

இறந்த மக்களுக்காக தமது கவலையை தெரிவிக்கும் அதேவேளை எதிர்காலத்தை நோக்குகையில், ஐ.நா. சிறிலங்காவின் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான நிகழ்வுகளையும் உங்கள் கோரிக்கைகளையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார். 

பாராளுமன்ற உறுப்பினர் ரொம் ப்ரேக் (The Rt Hon Tom Brake MP)

இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களுக்கு நீதி வழங்கப்பட்ட வேண்டும் சர்வதேச விசாரணை இன்றி இலங்கையில் சமாதானம் , நல்லிணக்கத்தை அடைய முடியாது. அடுத்த வருடம் 11 ஆவது ஆண்டு நிறைவு கூ ரும்போது இலங்கையின் அனைத்து சமூகங்களின் ஆதரவுடன் இதற்க்கு தீர்வு காணவேண்டும். ஆனால் இது நடைபெறுமா என்பதனையிட்டு தான் கவலை அடைவதாக தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா (Virendra Sharma MP)

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் (APPG-T) யிலுள்ள என் சக உறுப்பினர்களுடன் சேர்ந்து குரல் கொடுப்பேன் என்ற உறுதிமொழியைத் தருகின்றேன். நீங்கள் உங்கள் நீதிக்காக போராடுகின்றவர்கள். சிறிலங்கா அரசு பொறுப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் நாள் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயன் (The Rt Hon Joan Ryan MP)

முள்ளிவாய்க்காலின் 10 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் தமிழ் மக்களுக்கு எனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும், உங்களுடன் தோள் சேர்ந்து தோள் கொடுப்பதற்காகவும் இன்று நான் இங்கே நிற்கின்றேன். சத்தியம், நீதி மற்றும் நீடித்த சமாதானம் என்று நாம் பல முறை கூறினோம். நீதி மறுக்கப்படுகிறது என்பது உண்மைதான். இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் தொடர்பாக அந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோடாபாய தற்போது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக கருதுகின்றோம். இது உங்களுக்கு மிகவும் பயமாக இருக்கும் என்று எனக்கு தெரியும். மகிந்த மற்றும் கோடபாய ஆகிய இருவரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இருவருமே தமிழர் சமூகத்திற்கு ஒரு தெளிவான ஆபத்தாகவே இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சியோபான் பெனிட்டா, லிபரல் டெமக்ரற் லண்டன் மேயர் தேர்தல் வேட்பாளர்(Siobhan Benita)

நீதிக்கான உங்கள் பிரச்சாரத்தை ஆதரிக்கும் அதேவேளை உரிமைகளுக்கான உங்கள் போராட்டம் மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்ந்த அட்டூழியங்களுக்கான முறையான விசாரணை நடாத்தப்படவேண்டும் என்றும் நான் ஒரு லிபரல் டெமக்ராட் என்ற அடிப்படையில் நீதிக்கான உங்கள் பிரச்சாரத்தை ஆதரிக்கும் அதேவேளை மனித உரிமைகளுக்கான உங்கள் போராட்டம் மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்ந்த அட்டூழியங்களுக்கு எதிராக ஆதரவு வழங்கப்படும் என நான் தமிழ்மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று தெரிவித்தார்.

ஜனனி ஜனநாயகம் (Janani Jananayagam, Together Against Genocide)

இங்கு குழுமியிருக்கும் எம்மவர்ககள் பலரைப் போல தாம் வாழ்ந்த வடக்கில் ஸ்ரீலங்காவின் சிங்கள பௌத்த இராணுவம் 1995 இல் படையெடுத்தபோது, தப்பி ஓடி வன்னிக்குள் வசித்தார்கள் தமிழ் மக்கள். அவர்கள் காட்டில் இருந்து ஒரு புதிய தேசத்தைக் கட்டி எழுப்பினார்கள். அவர்கள் தங்கள் சொந்த தைரியம் மற்றும் ஆக்க சக்தியுடன் வேறு எந்த ஆதரவும் இல்லாமல் இதனைச் செய்தார்கள். அவர்கள் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நீதி நிர்வாகக் கட்டமைப்பை நிறுவி, சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகளை கட்டியெழுப்பினர், தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வணிகங்களை அமைத்தனர். சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியுடனான சமாதானத்திலும், பாதுகாப்பிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்பை அவர்கள் மேற்கொண்டார்கள். ஆனால் அந்த மக்களை வாழவிடாத சிங்கள இராணுவம் அவர்களை முள்ளிவாய்க்கால் வரை விரட்டி கொன்று குவித்தது மோசமான படுகொலைகளை செய்து முடித்தது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் போல் ஸ்கல்லி (Paul Scully MP, Chair, APPG for Tamils)

யுத்தக் குற்றங்கள் தொடர்பான சாட்சிகள் எவ்வாறு தமது கடந்த கால நிகழ்வுகளை நம்பிக்கை அற்றவர்கள் முன் வெளிக்கொணர முடியும். இதனால்தான் சர்வதேசத்தின் பங்களிப்பு தேவையாக உள்ளது என சர்வதேசவிசாரணைக்கான தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அலிஸ்டர் பேர்ட் (The Rt Hon Alistair Burt MP, Former Foreign & Commonwealth Office Minister)

முள்ளிவாய்க்காலில் வலி சுமந்த தமிழ் மக்களின் துயரங்களை  இலங்கை அரசு உணர்ந்து தமிழ் மக்களைஅங்கீகரிக்கும்  போதே அந்த நாடு முன்னேற்றப்பாதையில் செல்லும் என்னும் நம்பிக்கையுடன் இச் செய்தியைஉங்களுடன் பகிர்கின்றேன்.