Jul 16

முதல்வர்கள் மாநாட்டினை புறக்கணிக்கும் பழங்குடியின மக்கள்

எதிர்வரும் திங்கட்கிழமை எட்மண்டனில் நடைபெறவுள்ள மாநில முதல்வர்கள் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கனடாவின் தேசிய அளவிலான மூன்று பழங்குடியின குழுக்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

குறித்த அந்த மூன்று பழங்குடியின அமைப்புக்கள் நேற்று ரொரன்ரோவில நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ பழங்குடியின சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் குழுவின் தலைவர் கருத்து வெளியிடுகையில், மீள் நல்லிணக்கத்திற்கான பரீட்சார்த்தம் என்று கூறப்படும் விடயங்கள் எதனையும் குறித்த இந்த மாநாடு கொண்டிருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் பலனில்லை எனவும், அரசியல் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் என்றால் அவை அர்த்தபூர்வமானவையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த மாநாட்டில் நாட்டின் ஐந்து பழங்குடியின குழுக்கள் கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது மூன்று பழங்குடியின குழுக்கள் அதிலிருந்து விலகுவதான அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அல்பேர்ட்டா மாநில முதல்வர் தலைமையிலேயே இந்த முதல்வர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அல்பேர்ட்டா முதல்வரின் பேச்சாளர், பழங்குடியின குழுக்களை மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கான பேச்சுக்களில் தாம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.