May 21

ஹுவாவியில் கூகுள் செயலிக்கு கட்டுப்பாடு


ஆண்ட்ரொய்ட் ஒபரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவி கைபேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது அந்த நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

ஹுவாவியின் புதிய ஸ்மார்ட்போன்களில் கூகுள் மெப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாத நிறுவனத்தின் பட்டியலில் ஹுவாவியின் பெயரை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூகுள் வெளியிட்ட அறிக்கையில், ஆணையுடன் இணைந்து செயல்படுவதாகவும், விளைவுகள் குறித்து மறு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கூகுள் ஆண்ட்ரொய்டின் அடுத்த பாகத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளிடவுள்ளது. அது ஹுவாவி சாதனங்களுக்கு கிடைக்காமல் போகலாம் என நம்பப்படுகிறது.

இதுகுறித்து ஹுவாவி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கூகுளின் இந்த நடவடிக்கை குறித்து முதலில் செய்தி வெளியிட்ட ரோய்டர்ஸ் நிறுவனம், கூகுளின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை ஹுவாவி இழக்கிறது என்றும், மேலும் புதிய கைபேசிகளில் யூடியுப் மற்றும் மேப்ஸ் போன்ற வசதிகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, அனுமதி இல்லாமல் அமெரிக்க நிறுவனத்துடன் வர்த்தகம் செய்ய முடியாது என்ற பட்டியலில் ஹுவாவியை அமெரிக்கா சேர்த்தது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள கூகுள் நிறுவனம், இப்போது பயன்பாட்டில் உள்ள கைபேசிகளில் இந்த கூகுள் சேவைகள் தொடரும், ஆனால் இனி வரும் ஹுவாவி கைபேசிகளில் ப்ளே ஸ்டோர், யூடியுப், மெப் போன்ற வசதிகள் இடம்பெறாது என அறிவித்துள்ளது.

ஹுவாவி வாடிக்கையாளர் வர்த்தகத்தில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

5ஜி மொபைல் வலையமைப்புகளில் ஹுவாவியின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என பல நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கூறப்பட்டுள்ளது.

இதுவரை இதுகுறித்து பிரிட்டன் எந்த ஒரு அதிகாரபூர்வ தடையும் அறிவிக்கவில்லை. ஹுவாவி தனக்கு சொந்தமான செயலிகளை உருவாக்க முயன்று வருகிறது.

இந்த நடவடிக்கை மேற்கத்திய நாடுகளில் ஹுவாவி வர்த்தகத்தை பாதிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் கூகுள் செயலிகளின் பயன்பாடு இல்லை. ஆகையால், கூகுள் நிறுவனத்தின் நடவடிக்கை சீனாவுக்கு வெளியில் மற்ற சந்தைகளைப் பாதிக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.