Mar 26

ரஜினிகாந்த் செல்வதைத் தடுத்தவர்கள் மக்களுக்கு இரண்டகம் இழைத்துள்ளார்கள்

நடிகர் இரஜினிகாந்த் இலங்கை செல்வதைத் தடுத்தவர்கள் எமது மக்களுக்கு இரண்டகம் இழைத்துள்ளார்கள்! நடிகர் இரஜினிகாந்த் பன்னாட்டு லைக்கா நிறுவனத்தின் அழைப்பில் இலங்கை செல்வதற்கு சில தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து தனது பயணத்தை கைவிட்டுள்ளார். இரஜினிகாந்த் இலங்கை செல்வது மகிந்த இராஜபக்சா அலலது மயித்திரிபால சிறிசேனா அழைப்பில் அல்ல. இரஜினிகாந்த் அங்கு போவது வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, ஞானம் அறக்கட்டளை மூலம் இலவசமாக கட்டிக் கொடுத்த 150 வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் விழாவில் கலந்து கொள்ளவே.

அந்த விழாவுகு நடிகர் இரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இரஜனிகாந்த் ஒரு நடிகர். தமிழ்நாடு முழுதும் பல இலட்சக்கணக்கான இரசிகர்கள் அவருக்கு உண்டு. அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. எந்த அரசியல் கட்சியையும் பகிரங்கமாக ஆதரிப்பவர் அல்ல. அரசியலைப் பொறுத்தளவில் அவர் ஒரு பற்றற்ற துறவி போல் இருந்து வருகிறார்.

இலங்கை சென்று பூமிக்குள் புதைந்திருக்கும் மாவீர மண்ணை வணங்கி, மாவீரர்கள் நடமாடிய இடங்களைப் பார்வையிட்டு, அவர்கள் சுவாசித்த காற்றையும் சுவாசிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன் அது முடியாமல் போய்விட்டது என இரஜினிகாந்த் மனம் நொந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். முப்பது ஆண்டு கால கொடிய போரினால் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் எமது மக்களது வாழ்வாதரங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

வீடு வாசல்களை இழந்து ஓலைக் குடிசைகளில் வாழ்கிறார்கள். மூன்று நேர உணவு உண்டவர்கள் ஓரு நேர உணவுக்குத் திண்டாடுகிறார்கள். இந்த நிர்க்கதியற்ற மக்களின் வாழ்வாதாரத்தை மீள்கட்டியமைக்க லைக்காவின் ஞானம் அறக்கட்டளை பல உதவித் திட்டங்களை கோடிக்கணக்கான பணத்தில் வடக்கிலும் கிழக்கிலும் நடைமுறைப் படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் லைக்கா நிறுவனம் 15 கோடி ரூபா செலவில் கட்டி முடித்துள்ள இந்த 150 வீடுகள். நடிகர் இரஜினிகாந்த் இந்த வீடுகளைக் கையளிக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் இலங்கை செல்வதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் கண்மூடித்தனமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இரஜினிகாந்த் யாழ்ப்பாணம் செல்கின்றார் என்ற செய்தி வெளியாகியவுடனே திருவாளர்கள் திருமாவளவன், இராமதாஸ், வைகோ, வேல்முருகன் போன்றோர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இது இரஜினிகாந்த்துக்கு எதிரான கண்மூடித்தனமான, யதார்த்தத்துக்குப் புறம்பான எதிர்ப்பு ஆகும்.

இப்படியான விடயங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அந்த மண்ணில் வாழும் மக்களது மனவுணர்வை மதிக்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொள்ளக் கூடாது. உதவி செய்கிறோம் என நினைத்து உபத்திரவம் செய்யக்கூடாது. நடிகர் இரஜினிகாந்த் வருவது தேவையற்றது எனத் தேர்தலில் தோற்று இன்று செல்லாக்காசாக இருக்கும் ஒரு உள்ளூர் அரசியல்வாதியும் சொல்லியிருக்கிறார். அதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. புலத்தில் உள்ள வன்னியின் மிச்சங்களின் தூண்டுகோலினால் இப்படியான ஒரு பயனற்ற எதிர்ப்பைத் தெரிவித்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

ஒரு சிறப்பான விழாவில் கலந்து கொள்ள இலங்கைக்கு நடிகர் இரஜினிகாந்த் வருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் வரவேற்றுள்ளார். அவரை எல்லோரும் வரவேற்க வேண்டும் என்றும் இந்த விழா சிறப்பாக நிறைவேற எல்லோரும் உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இது நடிகர் இரஜினிகாந்த் அவர்களை ஒட்டுமொத்த வட கிழக்கு மக்கள் வரவேற்றதற்கு ஒப்பானது. மக்களின் காணிகள் முற்றாக விடுவிக்கப்படவில்லை, காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை, படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில்லை - இதற்கும் இரஜினிகாந்துக்கும் என்ன தொடர்பு? பழைய மலட்டு அரசியல் (எல்லாவற்றையும் புறக்கணிப்பது, எல்லோரையும் பகைத்துக் கொள்வது) தொடர்வதைத்தான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலரது எதிர்ப்புக் காட்டுகிறது. எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு, கண்டனம் போன்ற எதிர்மறை அரசியலை நடத்துவது வலியைச் சுமந்து நிற்கும் எமது மக்களின் வலியைப் போக்க உதவாது. இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கழிவறையைத்தானும் கட்டமுடியாது துன்பப்படும் எமது மக்களுக்கு 150 வீடுகளைக் கட்டிக் கொடுத்த லைக்கா நிறுவனத்தை நாம் மனதாரப் பாராட்டப்பட வேண்டும். அந்த நிறுவனத்தின் உதவித் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்க மனம் இல்லாதவர்கள் அதற்கு இடையூறு செய்யாமல் ஆவது இருக்க வேண்டும். மேலும் லைக்கா முழுக்க முழுக்க ஈழத்தமிழர்களுக்கு சொந்தமான ஒரு பன்னாட்டு நிறுவனம்.

தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வரும் நிறுவனம். திரைத்துறையில் இது ஒரு பெரிய சாதனை. அதையிட்டு நாம் பெருமைப் படவேண்டும். இந்த விழா தொடர்பாக நடிகர் இரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்