Jul 15

நெடுஞ்சாலையில விபத்து: 3 சிறுவர் உட்பட 7பேர் காயம்

குயீன் எலிசபெத் வேயில், மிசிசாகா பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குயீன் எலிசபெத் வேயின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், Cawthra வீதிப்பகுதியில், நேற்று நண்பகலுக்கு சற்று முன்பாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பல்வேறு வாகனங்கள் மோதிக்கெர்ணட இந்த விபத்தில் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான 12 வயது சிறுவன் ஒருவர், ஆபத்தான நிலையில் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அதேவேளை, காயமடைந்த ஏனையோர் தரை மார்க்கமாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தரை மார்க்கமாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டோரில் இருவர் சிறுவர்கள் எனவும், ஏனையவர்கள் பெரியவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக முன்னே சென்று கொண்டிருந்த வாகனங்கள் வேகத்தினை குறைத்த வேளையில், ஒரு வாகனம் வேகத்தினை குறைக்கத் தவறியதால், தொடர்ச்சியாக வந்த பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை ஏறபட்டதாக அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த விபத்தில் கனரக வாகனம் ஒன்றும் தொடர்பு பட்டுள்ள நிலையில், விபத்தனை அடுத்து அந்த வீதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்ட போதிலும், நேற்று மாலை நான்கு மணியளவில் அவை மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன.