Jul 15

கனடாவின் ஆளுநர் நாயகமாகிறார் முன்னாள் விண்வெளி வீரர்

கனடாவின் அடுத்த ஆளுநர் நாயகமாக முன்னாள் விண்வெளி வீரர் யூலி பெயட்டின்(Julie Payette) பிரதமர் ஜஸ்டின் ரூடோவால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டில் இறுதியில் அவர் ஆளுநர் நாயகமாக பதவியேற்கவுள்ள நிலையில், கனடாவின் நான்காவது பெண் ஆளுநர் நாயகமாக அவர் திகழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரால் நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதனை அடுத்து கருத்து வேளியிட்டுள்ள, மொன்றியலைச் சேர்ந்த 53 வயதான யூலி பெயட்டின், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் கிடைத்துள்ள மிகப்பெரும் மரியாதை இது என்று குறிப்பிட்டுள்ளார்.

தாம் மட்டுமின்றி தனது நண்பர்கள், தன்னுடன் கனடாவிலும் கனடாவுக்கு வெளியேயும் பணி புரிந்தவர்கள், பூமியில் உள்ளவர்கள் மட்டுமின்றி பூமிக்கு வெளியேயும் – விண்வெளியில் உள்ள ஒருசிலர் என அனைவரையும் பெருமைப்படுத்தும் ஒரு செயலாகவே இதனை தாம் நோக்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கனேடியர் ஒருவருக்கான உண்மையான பண்புகளைக் கொண்டுள்ள யூலி பெயட்டினும், அவரது பொதுச் சேவைகளும், சந்தேகத்திற்கிடமின்றி அவரை இந்த பதவிக்கு தகுதியுடையவர் ஆக்கியுள்ளது என்று, இந்த அறிவிப்பினை வெளியிடும் போது பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

அவரின் வாழ்க்கைப் பயணமானது ஒரு கண்டுபிடிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது எனவும், எது மிகவும் முக்கியமானதோ அதற்காக முழுமையான கவனத்தினை எப்போதும் செலுத்தும் பண்பினை அவர் கொண்டிருந்ததாகவும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

1999 ஆம் ஆண்டில் முதலாவது கனேடிய பெண் விண்வெளி வீரராக அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு சென்ற இவர், இரண்டாவது தடவையாக 2009ஆம் ஆண்டிலும் அதற்கு சென்றுள்ளார்.

தற்போதய ஆளுநர் நாயகத்தின் பதவிக்காலம் கடந்த 2015ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்த போதிலும், முன்னைய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரினால் அது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்ட நிலையில், அந்த கால நீடிப்பும் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் யூலி பெயட்டின் கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.