May 15

‘நான் திரும்பி வரப்போவதில்லை பெற்றோரை பார்த்துக்கொள்’ – குண்டுதாரியின் கடிதம்!

நான் திரும்பி வரப்போவதில்லை. பெற்றோரை கவனமாக பார்த்துக்கொள்’ என குண்டுதாரி ஒருவர் தாக்குதலுக்கு முன்னதாக தனது சகோதரனுக்கு கடிதம் எழுதியதாக குறித்த குண்டுதாரியின் மைத்துனர் சாட்சியம் அளித்துள்ளார்.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது தற்கொலைக் குண்டுதாரியான, அகமட் முகத் அலாவுதீனின் மைத்துனர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்கும்போதே குறித்த கடிதம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு குண்டுதாரியின் தாயும் தந்தையும் முன்னிலையாகியதோடு, பயங்கரவாதியின் தலை தனது மகனான அகமட் முகத் அலாவுதீனுடையதென்றும் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

தனது கணவனும் மகனும் வேலையை இழந்த பின்னர், தனது குடும்பத்தை, அலாவுதீனும் அவரது குடும்பத்தினருமே கவனித்துக்கொண்டதாக தாயார் இதன்போது கூறியுள்ளார்.

மேலும் இதன்போது, சட்டமருத்துவ அதிகாரி பிரேத பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்ததுடன், பெற்றோரினது மரபணுவுடன் குண்டுதாரியின் மரபணு பொருந்துவதாகவும் அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.