Mar 25

தமிழரசு கட்சியினால் சர்வதேச நீதிபதிகளை கொண்டுவர முடியுமா? சுரேஷ் கேள்வி

 

ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையிலே இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதற்கு   ஆதரவளித்துள்ள  தமிழரசுக் கட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியுமா என்று   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

 ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,

ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையிலே இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தையே மீளவும்  மேற்கோள்காட்டி அவற்றை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. 

இவ்வாறான நிலையில் இந்  தீர்மானத்தை இலங்கை அரசாங்கம்  நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசத்தை பெற்று கொண்டிருக்கும் நிலையில் ஏன் அந்த கால அவகாசம் வழங்கப்பட்டது என்ற கேள்வியெழுந்துள்ளது.

பயங்கரவாதத்தை தோற்கடித்த இராணுவத்தின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் நான் செயற்படப்போவதில்லை என்றும்,  அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்போவதில்லை என்றும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சர்வதேச நீதிபதிகளையோ சட்டத்தரணிகளையோ சர்வதேச வழக்கு தொடுநர்களையோ அழைக்க வேண்டிய அவசியம் இல்லை அழைக்கப்போவதுமில்லை என்ற அடிப்படையில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நாட்டில் யுத்தக்குற்றமே நடைபெறாத நிலையில் ஏன் கலப்பு நீதிமன்றம் தொடர்பான கேள்வியெழுந்துள்ளது என சிறிலங்கா சுதந்திர கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். 

 போர்க்குற்றத்தை விசாரித்தால் நாட்டில் மீண்டும் யுத்தமொன்று ஏற்படும் என்று நாட்டின் நீதியமைச்சரும் கலப்பு நீதிமன்ற விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அடிப்படையில் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தனவும்  கூறியுள்றனர். 

 நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஜக்கிய நாடுகள் கோருகின்ற பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்ற நீதியை வழங்க முடியாது, அவ்வாறு நீதியை வழங்கினால் சிங்கள மக்கள் கொதித்தெழுவார்கள் மீண்டும் போராட்டம் ஏற்படும் என தமது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளார்கள்.

இத்தகைய நிலையில் ஜக்கிய நாடுகள் வலியுறுத்துகின்ற பொறுப்புகூறல் என்ற விடயமும் இடம்பெறப் போவதில்லை. ஏனெ னில் பொறுப்புகூறல் இடம்பெறுவதற்கு நீதிவிசாரணை இடம்பெற வேண்டும்.

ஆனால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் கூறுவது போன்று விசாரணையே இடம்பெறாத நிலையில் ஜக்கிய நாடுகள் வலியுறுத்துகின்ற பொறுப்பு கூறல் என்பதும் இடம்பெற போவதில்லை.

 இவ்வாறான விடயங்களை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய செயற்பாடானது இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான ஓர் செயற்பாடாகவே உள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கிய செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே தமிழரசு கட்சி மாத்திரமே தமது ஆதரவை வழங்கியுள்ளது.

 இத்தகைய நிலையில் தமிழரசு கட்சி தமது  ஆதரவினூடாக எதனை சாதிக்கப் போகின்றது என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.அத்துடன் இக்கால அவகாசத்திற்கு ஆதரவழித்த தமிழரசு கட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச நீதிவிசாரணை ஆணைக்குழுவையோ அல்லது சர்வதேச நீதிபதிகளையோ சர்வதேச சட்டத்தரணிகளையோ வழக்கு தொடுநர்களையோ கொண்டுவர முடியுமா என்ற கேள்வியும் உள்ளது.

தமிழரசு கட்சியானது இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்குவதற்கு ஆதரவளித்து இலங்கை சர்வதேச அளவில் கிடைக்கும் உதவிகளை தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கு உதவியாக செயற்பட்டதனூடாக இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒர் நீதியை பெற்றுக்கொடுப்பதை தடைசெய்துள்ளது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

அந்தவகையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதை தடுக்கின்ற ஒர் செயற்பாடகவே உள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஜக்கிய நாடுகள் மனதிவுரிமை பேரவையிலே கொடுத்துள்ள வாக்குறுதியே நிஜமானது அதனை தவிர்த்து வெளியே கூறுவது உண்மையற்றது என்றும் அவ்வாறு அவர்கள் கூறியவாறு செய்யாவிட்டால் கடந்த ஜனாதிபதிக்கு ஏற்பட்ட கசப்பான நிலையே ஏற்படும் என்றும் கருத்தை கூறியிருந்தமை தொடர்பாக கேள்வியெழுப்பிய போது,

ஒரு நாட்டின் பிரதமர் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை உத்தியோகபூர்வமற்றது என ஒரு பாராளுமன்ற உறுப்பினரே கூறுவதறகு ஒன்று அவருக்கு அறியாமை அல்லது அவர் தமிழ் மக்களை முட்டாளாக்கும் வகையில் செயற்படுகின்றார் என்பதே அர்த்தம். 

பாராளுமன்றம் என்பது நாட்டின் உயரிய சபை. அங்கே ஒருவர் பொய் உரைக்கிறார் அங்கே பேசும் பேச்சு உண்மைதன்மை அற்றது உறுதியற்றது என்றால் மக்கள் எதனை நம்புவது யாரை நம்புவது.

அத்தகைய உயரிய சபையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியாதென்று.ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் கூறுகிறார்கள்.   


இது உறுதியற்றது உண்மை தன்மையற்றது என பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பதானது அவர் தமிழ் மக்களை முட்டாளாக்கும் ஒர் முயற்சியாகும்  என்றார்.