Mar 25

அமைச்சர்கள், பிரதிஅமைச்சர்கள் ஒன்பது பேருக்கு வாகனக்கொள்வனவு

அமைச்சர்கள் மற்றும் பிரதிஅமைச்சர்கள் ஒன்பது பேரிற்கு வாகனம் கொள்வனவு செய்வதற்காக 37 கோடியே 10 இலட்சத்து 97 ஆயிரம் ரூபா கோரிக்கை உள்ளிட்ட குறை நிரப்பு பிரேரணையொன்று  சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஆளும் கட்சி பிரதம கொறடாவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை  அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் இந்த குறைநிரப்பு பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

இக்குறைநிரப்பு பிரேரணையின் பிரகாரம்,

கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனிற்காக 3 கோடியே 98 இலட்சம் ரூபாவும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பைசல் காசிம் ஆகியோருக்கு 8 கோடியே 20 இலட்சம் ரூபாவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்கு 4 கோடி ரூபாவும் விளையாட்டு பிரதி அமைச்சர் எம்.எம்.எம் ஹரீஸிற்கு 3 கோடியே 82 இலட்சம் ரூபாவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதானவிற்கு 4 கோடியே 30 இலட்சம் ரூபாவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சருக்கு  8 கோடியே 60 இலட்சம் ரூபாவும் குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதனிற்கு 4 கோடியே 20 இலட்சம் ரூபாவுமாக மொத்தமாக வாகனம் கொள்வனவு செய்வதற்காக 37 கோடியே 10 இலட்சத்து 97 ஆயிரம் ரூபா நிதி கோரப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் உத்தியோகபூர்வ வாசஸ்தள புனர் நிர்மாணத்திற்கு 2 கோடியே 15 இலட்சம் ரூபா கோரப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் அபிவிருத்தி உள்ளிட்ட மேற்குறித்த நடவடிக்கைகளுக்காக 7808 கோடியே 51 இலட்சத்து 79 ஆயிரத்து 213 ரூபா கோரி குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.