Jul 14

ஒன்ராறியோவில் விமான விபத்து: இருவர் படுகாயம்

ஒன்ராறியோவின் ஒறில்லியா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள சென் ஜோன் பிராந்திய விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஏரி ஒன்றில் தரையிறங்க முற்பட்ட வேளையில் குறித்த அந்த விமானம் விபத்துக்குள்ளானதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அநத விமானம் நீர்ப் பரப்பின் மீது விபத்துக்குள்ளானதை அவதானித்த அந்தப் பகுதி மக்கள், படகுகளில் சென்று விமானத்தில் இருந்த இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

மிகவும் பாரதூரமான காயங்களுடன் காணப்பட்ட அவர்கள், உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானம் நீரினுள் முற்றாக மூழ்கிவிட்ட நிலையில், விசாரணை நடவடிக்கைகளுக்காக அதன் பாகங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.