May 09

வசந் வாத்தி தமிழீழத்தின் வீர ஆசான்

ஏப்ரல் 2009 ,வலைஞர் மடம் பகுதியில் வீடுகள் எதுவும்அற்று வெறும்தறப்பாள் கொட்டகைக்குள்ளும் வெட்ட வெளிகளிலும் வெட்டப்பட்ட பாதுகாப்பகழிக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருந்த பல்லாயிரம் குடும்பங்களில் ஒன்றாய்த்தான் தாயும் இருபிள்ளைகளையும் கொண்ட அந்தக் குடும்பமும் இருந்தது.


போரியலே வாழ்வாக மாறிவிட்ட அந்தநாட்களில் ஒர்நாள், அவர்கள் இருப்பிடம் தேடி நீண்டநாட்களாய்க் காணாததன் குடும்பத்தைக் காண அந்தக்குடும்பத் தலைவன் வருகிறார்.அந்தக் குடும்பமே மகிழ்ந்திருந்ததருணம் அது.

 பிள்ளைகளுடன்பேசுகிறார், சிரிக்கிறார், அம்மா சொல்வதைக்கேட்டு நடக்கவேணும், குழப்படி செய்யக்கூடாது வளர்ந்து நிறையபடிச்சு நல்லநிலையிலவாழவேணும், இப்படியாகப் பல அறிவுரைகள் அவர்களிற்கு சொல்கிறார்.  சரிஅப்பாவுக்கு நேரம் போட்டுது போட்டுவாறன். அவர் தனது பாசறைக்குச் செல்லப் புறப்பட்ட போது அந்தக்குழந்தைகள் தந்தையைப் பிரியமனமின்றி தம்மோடு இருக்கும்படி தடுத்தார்கள். ஆனால் அவர்களை மனைவியிடம் விட்டுவிட்டு பிள்ளைகள் பத்திரம், அவர்களை நல்லபடி வளர்த்துவிடு. உன்காலில் தனித்து நிற்கும் நம்பிக்கை உள்ளவள் நீ. தைரியமா இரு மனைவிக்குக் கூட அறிவுரைகள்தான் அதிகமாக இருந்தது.

கண்ணீரோடு நின்ற மனைவியை திரும்பிப் பார்க்காகமலே செல்கிறார். அவர் வேறு யாருமல்ல கேணல் வசந் வாத்திதான்.

“அணீசீராய் நில், இலகுவாய்நில், இயல்பாய்நில் இ… “தமிழீழ விடுதரைப் போராட்டத்தில் படைத்தறைப் பள்ளியில் பயிற்சிகளைப் பெற்றபலபேரின் காதுகளில் இன்றும் அந்தக் குரல் கம்பீரமாய் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிறந்த அணிநடைபயிற்சியாளர் என்ற பெயரை மட்டு மல்ல முதன் முதலாக கனரக ஆயுதங்களுடன் (PK, RPG, AKLMG)அணி நடைபயிற்சியை அறிமுகப்படுத்திய போரியல் ஆசான் என்ற பெயரையும் தன்னகத்தேகொண்ட பெருமைக்குரியவர் கேணல் வசந் அல்லது குமரிநாடான்.


விடுதலைபுலிகளின் படைத்துறைப்பள்ளி. இதை அறியாதவர்கள் யாரும்இல்லை. இங்குதான் அவரது திறனுக்கானதளம் அமைந்தது. அங்கு முதன்மை ஆசிரியராக இருந்த வசந் படைத்துறைப்பள்ளிப் போராளிகளுக்குத் தாயாக தந்தையாக நண்பனாக நல்ஆசானாக இருந்து அவர்களை வழிப்படுத்தினார். அணிநடையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அவர்களிற்குக் கற்றுக் கொடுத்தார்.

படையணிகளுக்கு இடையில் நடைபெறும் ஒவ்வொரு விளையாட்டு போட்டிகளிலும் தனதுப டைத்துறைபள்ளிப் போராளிகளைஅழைத்துச் சென்று போட்டிகளில் வெற்றி பெறவைத்தார். அதுவும் அணிநடையில் தொடர் வெற்றிகளை பெற்றுவந்தது படைத்துறைப்பள்ளி அணி.

இதற்கு அடித்தளம் இட்டது வேறுயாரும் அல்ல “கேணல் வசந்த்” என்று அவரது நினைவுபகிர்வை என்னோடு பகிர்ந்துகொள்கிறார்.

படைத்துறை பள்ளியின் முதலாவது அணி போராளியாக இருந்து பின் நாட்களில் கணணிப்பிரிவின் முதுநிலைபொறுப்பாளர்களில் ஒருவராக இருந்தபோராளிஒருவர்.


படைத்துறைப் பள்ளியில் புடமிட்டுவளர்க்கப்பட்ட போராளிகளில் சிலரை சிறந்தபயிற்சி ஆசிரியர்களாக வலுமிக்க போராளிகளாக உருவாக்கிவிட்ட பெருமையும் அவரையேசாரும்.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற கராத்தேபோட்டி ஒன்றில் இவரது அணியும்,பொதுமக்களில் இருந்து பல வீரர்களும், விடுதலைப்புலிகளின் ஏனைய படையணியைச் சேர்ந்த கராத்தே அணியினரும் பங்குபற்றி இருந்தார்கள்.

“வசந்தன் வாத்தின்ர பெடியள் வந்திருக்கிறாங்கள்…..” என்பதே மற்றைய அணிகளுக்கு ஒருவிதகலக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு படைத்துறைப் பள்ளிஅணியினரின் சண்டையிடும் ஆற்றலும் திறனும் இருந்தது.

அந்தளவுக்கு அவர்களைப் புடமிட்டு வளர்த்த பெருமைக்குரியவர் வசந் வாத்தி என்றால் மிகையாகாது.

கேணல் வசந்த் நீண்ட காலமாக போராளிகளை வளர்த்தெடுக்கும் ஆசானாகவே தனது போராட்டபணியில் இருந்தார். ஆனால் அவர் அந்த காலங்களிலும் களமுனைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்பமுடிவுகளை எடுத்து ஒவ்வொரு களச்சூழலையும் போராளிகளுக்கு தெளிவுபடுத்துவார்.

அதற்காக களமுனைகள் ஒவ்வொன்றையும் நேரடியாக ஆய்வு செய்துகொண்டே இருப்பார். இது தொடர்பாக மூத்தபோராளி ஒருவரிடம் வினவினேன். அப்போது” தம்பி முதலில் வசந்தன் என்ற பெயரை உச்சரிக்காதீர்கள். அவருக்கு வசந்தன் அல்ல பெயர். “வசந்” என்பதுவே அவரது இயக்கபெயர்.

“வசந்தண்ண” என்று போராளிகள் அழைப்பதன் மூலமாக மருவிய பெயரே வசந்தன். ஆனால் அவனது உண்மை பெயர் வசந்.
தம்பி வசந்தை பற்றி ஆரம்பத்தில் இருந்து சொல்வ தென்றால் மன்னார் மாவட்டத்தில் ஆறுமுகம் கமலாதேவி தம்பதிகளுக்கு 09.04.1971 அன்று பிறந்தவர் தான் வசந்.இவருக்குப் பெற்றவர்கள் இட்டபெயர் “அன்பழகன்” .அவர்பிறந்து 31 ஆவது நாளிலையே அவரது தந்தையார் உடல் நலக் குறைவால் இறந்துபோகிறார்.

வீட்டில் வறுமைதாயின் உழைப்பு மட்டுமே இவர்களது ஆதாரம். எதையும் செய்ய முடியாத நிலையில் அவரது பன்னிரண்டாவது வயதில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பாதிரியாருடன் கல்வி கற்பதற்காக செல்கிறார். கற்றுக்கொண்டு இருக்கும் போதுவீட;டு நிலைமை அவரை கல்விகற்கவிடவில்லை.

தனது உறவுகளை தான் உழைத்துபார்க்க வேண்டும் என்ற நிலை. அதனால் ஒரு தேநீர் கடையில் வேலைக்காகசேர்கிறார். அங்கே வேலைசெய்து கொண்டு இருக்கும் போது அரச பயங்கரவாதம் புரியும் அட்டூழியங்கள் தெரியும் வாய்ப்புக்கிடைத்தது.

சிங்கள இனவெறிபடைகளின் கொடூரமான செயற்பாடுகளை எதிர்த்துப்போராட வேண்டும் என்றஎண்ணம் துளிர்கிறது. வீட்டைக் காக்கும் கடமையை விட நாட்டைக் காக்கும் கடமை முதன்மையானது என்பதை உணர்ந்து தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தம்பி விக்டர் அண்ணாவின் தலைமையில் மன்னாரில் பெரிய சண்டை ஒன்றை செய்தனாங்கள். அந்தச்சண்டை வசந்துக்கு முதல் சண்டை. அந்த சண்டைக்கு போய் வரும் போது வசந்த் என்ற வேறு ஒரு போராளியின் வீரச்சாவை இவரது உறவுகள் இவர் என்று எண்ணிவிடவீட்டில் வீரச்சாவு நிகழ்வு நடந்தது.

இது எதுவுமே போராளிகளுக்கு தெரியாது. இந்த நிலையில் வசந்த வீட்டுக்கு சென்றுவர பொறுப்பாளர் அனுமதித்தhர். நான் உயிரோடு இருக்கிறேன். அழாதீர்கள் என்று அனைவரையும் தேற்றிவிட்டுவந்தான்.

அதன் பின் அவர் தாயை கண்டது இல்லை கிட்டத்தட்ட இருபத்தி நான்கு ஆண்டுகள் எந்த தொடர்புகளும் இல்லை எங்கே சென்றார்கள் என்ன ஆனார்கள் என்று எதுவும் தெரியாத நிலையில் சமாதானகாலத்தில் தான் எதோ ஒரு உறவின்மூலம் அவரது குடும்பம் இந்தியாவில் இருப்பது தெரியவந்து தொடர்புகிடைக்கிறது.

அதன் பின் திருமணபந்தத்தில் இணைந்து இரண்டு பெண்பிள்ளைகளின் தந்தையாகவும் இருந்தார்.
ஆனாலும் களமுனையே அவரது வாழ்வாக இருந்தது.அவர் எங்கெல்லாம் களமுனைகள் விரிந்து கிடந்தனவோ அங்கெல்லாம் களத்தினை தேடிச்செல்லும் துணிச்சல் மிக்க போராளியாக வலம்வந்தார். தான்வளர்த்த ஒவ்வொரு போராளிகளின் மனதிலும் தேசியத்தலைவரையும் மக்கள் மீதான மண் மீதானபற்றினையும் ஊட்டிவளர்த்தார்.

விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கான தற்காப்புபயிற்சி ஆசானாகவும் அதேநேரம் கனரக ஆயதப்பயிற்றுவிப்பாளனாகவும் ;இருந்து அவர்களைவளர்ப்பதில் பெரும் கவனம் செலுத்தினார். “கராத்தே” மட்டுமல்லாது எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியைகொல்லுவது, சிலம்பு ,கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, கத்திச்சண்டை. யோகாசனம் எதிரியை நினைவிழக்க செய்யும்முறைகள் போன்றவற்றோடு ஜப்பானிய சீனகலைகள் உள்ளடக்கியதற்காப்பு பயிற்சிகளை மகளிர் படையணிகளுக்கு விதைத்தார் கேணல் வசந்.


தேசியத்தலைவர் அவர்கள் சண்டைகள் பற்றிய திட்டமிடல்களைச் செய்யும் போது அருகிருக்கும் தளபதிகளில் ஒருவராக தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கை மிக்க தளபதியாக இவர் இருந்தார். அது மட்டு மல்லாது கள நிலவரங்களை உடனுகுடன் அறிந்து அதற்கேற் பதிட்டமிடல்களைச் செய்யும் மதிநுட்பத்தோடு தேசியத் தலைவர் அவர்களால் வளர்க்கப்பட்டார். அதனால் பலவெற்றிச் சண்டைகளின் பின்னணியில் அவரும் ஒருவராக இருந்தார்.

2005 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில் முற்றுமுழுதாக ஆசிரியர் என்ற நிலையில் இருந்து உயர்த்தப்பட்டு தலமைசெயலக ஆயுதபடைக்கலங்களுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோதும் தலைமைசெயலக சிறப்புத்தாக்குதல் அணியான”மணாளன் சிறப்புதாக்குதல்அணியின்” பயிற்சியாளராகவும்களமுனைஆலோசகராகவும்செயற்பட்டார்.

கேணல் வசந்த் படைக்கலபிரிவுக்கான பொறுப்பாளராக இருந்தபோது”ஸ்கோப்” என்று சொல்லப்படுகின்ற ஆயுத இலக்கு குறிகாட்டி ஒன்றினை தமிழீழ மண்ணில் கிடைக்கும் பொருட்களை வைத்தே செய்யமுடியும் என்பதை நிரூபித்துகாட்டினார்.

அதற்காக தேசியத் தலைவரின் அனுமதியைப் பெற்று அதை உருவாக்குவதற்காக ஆறு தடவைகள் முயற்சி எடுத்து தோல்விஅடைந்தாலும் ஏழாவது முறைவெற்றிகரமாகச் செய்து முடித்து தலைவர் அவர்களின் பராட்டைப் பெற்றார்.

அந்த குறிகாட்டியை உருவாக்குவதற்காக அவர் வெலவிட்டதுவெறும் 1200 ரூபாய்களே.
உடனடியாக இவற்றை விடுதலைப்புலிகளின் படைக்கல உற்பத்திநிலையங்களில் உற்பத்திசெய்யபணிக்கப்பட்டாலும், நெருங்கிவந்து கொண்டிருந்த இராணுவமுற்றுகையும்,சண்டைக்களங்களும்அதற்குநேரத்தைதராதுபோனது
இந்தவெற்றியில் இருந்து ஒரு பாடத்தை அவர் எம்மிடையே விட்டுசென்றார்.

தோல்வி என்பது எமக்கு படிக்கல் , எத்தனை முறைதோற்றாலும் அத்தனைமுறையும் ஒருவன் எழுவான் எனில் அவன் தோற்றதாக வரலாறு இல்லை. குறைந்த வளப்பரப்புக்குள் இருந்த எம்மால் இப்படியான குறிகாட்டிகளை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது எனில் அதற்கு வசந்த்வாத்தியோட விடாமுயற்சியும் கிடைத்த வளங்களை பயன்படுத்த தெரிந்த நுண்ணறிவும் என்றால் அது பொய்யில்லை.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி மாலை கடந்து இரவு நெருங்கிக்கொண்டிருந்தது. முள்ளிவாய்க்கால்பகுதியில் அவருடன் இருந்த சில போராளிகளுடன் சண்டைக்கான ஆயுத விநியோகத்துக்கான தயார் படுத்தல்களில் சுத்திகரிப்பு, சீர்தருத்தம், களஞ்சியம், விநியோகம் என பலமுனைப்புக்களில் இருந்தநேரம். பல்முனைதாக்குதல்கள் நெருங்கிக் கொண்டிருந்தது.

மக்கள் வார்த்தைகளால் சொல்லமுடியாத அவலங்களைச் சுமந்த படி உயிர்காக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்.போராளிகள் எதிரியைஎ திர் கொள்வதற்கான தயார் படுத்தல்களில் மும்முரமாகிக் கொண்டு இருந்தர்கள். அந்தநேரத்தில் எதிரியின் தாக்குதலிற்கு வசந்த்வாத்தியுடைய படைக்கலகளஞ்சியம் உள்ளாகின்றது.

பகைவன் அடித்த தானியங்கி 40 எறிகணை ஒன்று (Auto dongan) அவரது களஞ்சிய எரிபொருள்கலன் மீதுவிழுகிறது.

எரி பொருள் கலன் சிதறி தீ அனைத்து இடங்களிலும் பரவுகிறது. அந்ததீயை அணைக்கமுடியாத நிலை.. போராளிகளும் வசந்த்தும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். தீபரவிகளஞ்சிய முழுவதுக்கும் பரவுகிறது. கரும்புகை மூட்டம்வானைத் தொடுகிறது. கட்டுப்படுத்தமுடியாதளவுக்குவெடிபொருள்களஞ்சியத்தின்ஏனையபகுதிகளும்தீயால்சூழ்கிறது.

கட்டுக்கடங்காமல் சூழல் இவர்களுக்கு பாதகமாகிக் கொண்டு போன நிலையில் ஆயுதம்துடைக்கும் துணி (சிந்தி) மீது தீ மூள்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலை
அடுத்தது வெடி பொருள்கள் மீது பரவப்போகிறது. நடப்பைப் புரிந்தது கொண்ட வசந்வாத்தி கட்டளை இடுகிறார். ஓடு ஓடு எல்லாரும் ஓடுங்கடா…. வெளியால எல்லாரும் ஓடுங்கடா. அனைவரும் வெளியேறி விடுகின்றனர்.

அருகிருந்த மக்கள் காயப்பட்ட போராளிகள் என அனைவரும் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்துவெளியேற்றப்பட்டார்கள். ஆனால் வசந்தனது பொறுப்பில் இருந்த அந்த வெடி மருந்து களஞ்சியம் தன்முன்னே எரிந்து கொண்டிருப்பதைத் கூட மறந்துமீ ண்டும் உள்நோக்கிஓடுகிறார்.

மாஸ்டர்வேண்டாம்… நெருப்பு எல்லா இடமும் பரவீட்டுது இனி ஆபத்து போகவேண்டாம் போராளிகள் மறித்தார்கள், கெஞ்சினார்கள் ஆனால் வசந்த்மாஸ்டர் கேட்கவே இல்லை. தடுத்தவர்களுக்கு தனது தெளிவான நிலைப்பாட்டைவிளக்குகிறார்.

 தமிழீழ படைக்கல பொறுப்பாளர் நெருப்புக்கு பயந்து தனது உயிரைகாத்துக் கொள்ள தன்னுடைய கைத்துப்பாக்கியையே விட்டிட்டு ஓடிட்டாராம்” என்று என் எதிர்காலம் பேசக்கூடாது. இந்த இழி சொல் எனக்கு வேண்டாம்.

அதைவிட இத்தனை காலமாக நான் பயிற்சி கொடுத்த போராளிகளுக்கு நான் எதை கண்டிப்பாகபோதித்Nதனோ அதை இனி வரும்காலங்களில் புதிய போராளிகளுக்கு எப்படிபோதிப்பேன்…? படைகல பாதுகாப்பு பற்றியகட்டுக் கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்விகேட்கமாட்டார்களா?

“நெருப்புக்கு பயந்துதானே அன்று நீ உன்னோ டபிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்கமாட்டாங்களா? இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதைவிட்டிட்டு அவரிடம் எப்படிபோவது…? அவரிடம் எந்த முகத்தைவைத்து பிஸ்டல நெருப்புக்க விட்டிட்டு வந்திட்டன் என்று சொல்வது.

என் உயிரிலும் மேலான எனதுஆ சிரியத்துவத்தையும் எனது படைக்கல பாதுகாப்பையும் நானே பாதுகாக்கவேண்டும். நான் எடுத்து கொண்டு ஓடிவாறன்.
போராளிகள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் எத்தனையோ சமர்க்களங்களில் தீய்க்கு தீயாக எரிந்த நாயகர் வரிசையில் தானும் சேர்வது தெரியாது கைத்துப்பாக்கியை பாதுகாக்க தீயின் நாக்குகளுக்கு போக்குக்காட்டி உள்ளே நுழைகிறார். எரிபொருள் மூண்டுஎரிகிறது, வெடிபொருட்கள் வெடிக்கின்றன. துப்பாக்கிகளைத் துடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் துணி கொழுந்து விட்டு எரிகிறது. வாகனங்கள் தீயின் நாக்குகளால் பொசுங்குகின்றன.

உள்ளே ஓடிய புலியை பார்த்துக்கொண்டு காத்திருக்கிறது புலியணி. ஆனால் போனவர் மீண்டும் வரவில்லை… காத்திருப்புஅதிகாலைவரைதொடர்கிறது. ஆனால் தீயின் நாக்குகள்அடங்கவில்லை.
நடு இரவு கடந்து விடியலுக்கு நேரம் வரும் போது தீ அடங்கத் தொடங்கி எல்லாம் ஓய்வுக்கு வந்தபோது அனைவரும் வசந்த்மாஸ்டரை தேடுகிறார்கள். வோக்கிகள் அனைத்தும் ஒவ்வொரு நிமிடமும் அந்தபெயரை உச்சரிக்கிறது.

புலிகளின் அணிகள் தாம் தங்களது வசந்த் மாஸ்டரை இழந்துவிட்டோம் என்பது தெரியாது தேடிக் கொண்டிருக்கிறார்கள். எங்கும் கிடைக்காத அவரது தொடர்பு இவர்களை அந்த களஞ்சியத்தின் உட்பகுதிக்குள் தேடவைக்கிறது. தேடல் தொடர்ந்து உள்ளே சென்ற போது களஞ்சியத்தின் உள்பகுதியில் அவரது உடலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது.

காலிலிருந்து இருந்து அரைவாசி வயிற்றுப் பகுதி வரை எரிந்துகிடந்தது புலியாசானின் வீரஉடலம். தான் நேசித்த கைத் துப்பாக்கியை இறுக்க பற்றி கிடக்கிறது அவரது கரம். தான் நேசித்த விடுதலை போராட்டத்திற்காக தடையுடைக்கும் முது நிலை போராளியாக வாழ்ந்த வசந்த் நெருப்பின் நாக்குகளுள்ளுள் எரிந்து கிடக்கிறார்.

ஆனாலும் உடலத்தை துளைத்து கிடந்த எறிகணை துண்டுகள் அவரது வீரவுடல் தீயால் வீழவில்லை என்பதைஎமக்குகாட்டிநின்றது.
அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து விட்டு வெளியில்வரும் போது எதிரி தொடர்ந்து களஞ்சியம் மீது ஏவிய எறிகணைகளின் துண்டுகள் அவரை வீழ்த்தியிருக்கிறது. அவரால் காயத்துடன்வெளியேறமுடியவில்லை அவர் முயன்றுகொண்டே இருக்கிறார்.

ஆனால் அவரது உடலத்தை துளைத்து வெளியேறிய இரும்புத்துண்டுகள் அவரை நிலத்தில்சாய்த்துவிட்டது.

எறிகணை குண்டுகளால் வீரச்சாவடைந்த பின்தான் தீயின்நாக்குகள்அவரைதீண்டமுடிந்தது… அதுவும் அவரை முழுமையாக அல்ல குறையாகவே தீண்டி சென்றது நெருப்பு.

என்னை சுட்டு விட்டு ஆயுதத்தை தலைவரிடம் கொடுங்கள் என்று தன்கதை முடித்த சீலன் தடம்பதித்து நிமிர்ந்தவர்களில் ஒருவனாக எங்கள் வசந்த் மாஸ்டரும் தான் நேசித்த கைத்துப்பாக்கிகாகதன் உயிரை  அர்ப்பணித்துக்கொண்டார்.

தேசத்தலைவனின் தம்பியாக நேசத்துக்குரியவனாக வாழ்ந்து தேச விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவசந் தான் நேசித்த ஆயுதத்தை காப்பாற்கிக் கொள்வதற்காகவே தன்னுயிரை ஆகுதியாக்கி கேணல் வசந் (குமரிநாடான்) ஆக எங்கள் மனங்களை வென்று தமிழீழ வரலாற்றில்  இடம் பிடித்துக் கொண்டான்.