Jul 13

லெனோவோ ஸ்மார்ட்போன்களின் விலை விரைவில் குறைகிறது: லெனோவோ அறிவிப்பு

லெனோவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் விரைவில் குறைக்கப்பட இருப்பதாக லெனோவோ அறிவித்துள்ளது.

விலை குறைப்புக்கு காரணம் இந்தியாவில் புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரிமுறை என லெனோவோ தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்மார்ட்போன்களின் விலை ஜி.எஸ்.டி. வரிமுறையால் குறையும் என்பதோடு புதிதாய் வெளியிடப்படும் ஸ்மார்ட்போன்களின் விலை ஜி.எஸ்.டி. வரிமுறையை சேர்த்து நிர்ணயம் செய்யப்படுகிறது என லெனோவோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் ஆப்பிள், அசுஸ் போன்ற நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு ஏற்ப தங்களது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்தன.

முன்னதாக ஸ்மார்ட்போன்களுக்கான வரி 8 முதல் 18 சதவகிதம் வரை அதன் விலைக்கு ஏற்ப வசூலிக்கப்பட்டது. தற்சமயம் அமலாகியுள்ள ஜி.எஸ்.டி. வரிமுறையில் ஸ்மார்ட்போன்களுக்கான வரி 12 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் மொபைல் போன் மற்றும் சில மொபைல் போன் பாகங்களுக்கான வரியை 10 சதவிகிதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. ஒப்பந்த முறையில் லெனோவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது. 

லெனோவோ நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் மோட்டோ இ4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ இ4 சீரிஸ் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும் விலை மற்றும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.