Jul 13

காட்டுத்தீ: இடம்பெயரும் மக்கள் சீற்றம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தீவிரமடைந்துவரும் காட்டுத்தீ காரணமாக தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துவரும் மக்கள், அதிகாரிக்ள மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தினரின் நடவடி்க்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மக்கள் பெரும் சிரமங்களின் மத்தியில் இடம்பெயர்ந்து வருகின்ற நிலையில், அரசர்ஙக அதிகாரிகள் மற்றும் கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தினர் போதிய தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளவிலலை எனவும், தொடர்பாடல்களிலும் பெருமளவு குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முதல் ஒரு கட்டமாக இடம்பெயர்நத மக்கள், மறுபடியும் மீண்டும் இடம்பெயர நேர்வதாகவும், போதிய தரவுகள் இன்மையால் அவர்கள் இடம்பெயர்ந்து செல்லவேண்டிய இடங்கள் தொடர்பில் முடிவெடுக்க முடியாதிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று வரையிலான நிலவரப்படி இதுவரை 14,000ற்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதுடன், இவர்களுக்கு பிரிட்டிஷ் கொலம்பிய மாநில அரசின் ஊடாக 600 டொலர்கள் உதவி நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் இந்த அவசரகால உதவி நிவாரணப் பணிகளை முகாமைத்துவம் செய்துவரும் கனேடிய செஞ்சிலுவைச் சங்க உத்தியோகத்தர்களை சந்திப்பதற்கே தமக்கு மூன்று நாளானதாக பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் குறைகூறியுள்ளனர்.

இடம்பெயர்ந்தோர் தொலைபேசி வாயிலாகவும், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள படிவங்களை நிரப்புவதன் மூலமாகவும் தம்மைப் பதிவு செய்துகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமது முகாமில் ஒரு படிவம் கூட இல்லை என்று இடம்பெயர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு உணவு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமது குடியிருப்பு மக்களுக்கு எவையும் வழங்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.