Mar 25

புலம்பெயர் சூழலில் தமிழ் புத்திஜீவிகள்?

இத்தாலிய அறிஞர் அந்தனியோ கிராம்ஸி புத்திஜீவிகள் தொடர்பில் இவ்வாறு கூறுவார். ஓவ்வொரு சமூகமும் தனக்கான உயிர்ப்பு புத்திஜீவிகளைக் (Organic intellectuals) கொண்டிருக்கும். ஓரு சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு அவ்வாறான புத்திஜீவிகளே எப்போதும் உறுதுணையாக இருப்பர் ஆனால் தமிழ்ச் சூழலில் புத்திஜீவிகளின் பங்களிப்பு மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. தமிழ்ச் சூழலை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் புத்திஜீவிகள் என்றால் அவர்கள் சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும் என்பதான ஒரு புரிதல் இருந்தது. தமிழரசு கட்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றில் அங்கம் வகித்த தலைவர்கள் பலரும் சட்டத்தரணிகளாகவே இருந்தனர். மிதவாத அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் சட்டத்தரணியாக இருப்பது ஒரு அடிப்படைத் தகுதியாகவே நோக்கப்பட்டது. இதன் காரணமாக சிலர் சட்டத்தரணியானதும் உண்டு. இது ஒரு புறம் எனறால் பிறிதொரு புறம் பல்கலைக்கழ ஆசிரியர்களை புத்திஜீவிகளாக பார்க்கும் ஒரு போக்கும் இருந்தது. பல்கலைக்கழகம் சார்ந்து உருவாகியவர்களில் சிலர் அதற்கான தகுதிநிலையுடன் இருந்ததும் உண்மைதான். இந்த நிலைமை, தமிழரின் அரசியல் இளைஞர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் தொடர்ந்தது.
அரசியல் முற்றிலுமா இளைஞர்களால் கட்டுப்படுத்தப்பட்ட பின்புலத்தில் புத்திஜீவிகள் என்னும் சொற்பதத்தின் மீதான அதுவரையான மதிப்பீடுகளும் மாறிப்போயின. அடிமட்டத்திலிருந்து வந்த இளைஞர்கள் பலரும் தங்களின் தேடல்களால் பல உலகளாவிய அரசியல் விடயங்களை விவாதிப்பவர்களாக மாறினர். ஆனாலும் தமிழ் சமூகத்தில் சுயாதீன சிந்தனைக் குழாம்கள் எவையும் தலையெடுக்கவில்லை. இன்று தமிழர்கள் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற போதிலும் கூட, அவர்கள் மத்தியில் சிந்தனை குழாம்கள் எவையும் இல்லை. பல தமிழர்கள் ஜரோப்பிய பலக்லைக்கழகங்களில் கற்பிக்கின்ற போதிலும் கூட, அவர்களால், அவர்கள் வாழும் நாடுகளில் வெகுசன புத்திஜீவிகளாக பிரகாசிக்க முடியவில்லை. யுத்தம் நிறைவுற்று எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த எட்டு வருடங்களில் உலக நிiலைமைகளுக்கு ஏற்ப தமிழரின் அரசியல் செயற்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வது தொடர்பில் ஒரு ஆழமான உரையாடலை செய்ய முடியாதவர்களாக நாம் இருக்கின்றோம். இந்தத் தலையங்கத்தை எழுதிக் கொண்டுடிருக்கும் போது, இலங்கையின் தென்னிலங்கையில் சிறந்த இலங்கைக்கான தொழில் வல்லுனர்கள் என்னும்  அமைப்பொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் பிரதான நோக்கம் தற்போதிருக்கின்ற ஆட்சியை அகற்றி இலங்கையை சிங்களவர்களுக்கான, சிறந்த தலைவர் ஒருவரிடம் ஒப்படைப்பது. ஆனால் எங்கள் மத்தியிலோ குடும்பிச் சண்டைகளே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசியல் வாதிகள் அரசியல் தலைவர்களாவும் இருக்கின்றனர் அதே வேளை புத்திஜீவிகள் போன்றும் நடந்து கொள்கின்றனர். உண்மையில் இன்றிருக்கும் அனேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜ.நா என்றால் என்னவென்றே தெரியாது ஆனால் தாங்கள் ஜநாவை கையாளப் போவதாக மேடைகளில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் ஒரு காலத்தில் கல்விச் செருக்கால் மற்றவர்களை ஏளனமாகப் பார்த்த தமிழ் சமூகம் இன்று சகல துறைகளிலும் பின்தங்கியிருக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்;தால் தமிழ் சமூகம் தனக்கான அரசியல் குரலை முற்றலுமாக இழந்துவிடும் ஆபத்து நேரிடலாம். புதிய சூழலுக்கு ஏற்ப புதிய வழிமுறைகளில் நாம் பணியாற்ற வேண்டியிருக்கிறது. இதற்கு நமக்கு கருத்தாளமுள்ள, மொழியாற்றலுள்ள புலமையாளர்கள் தேவை. அவ்வாறானவர்கள் எம்மத்தியில் குறைவாக இருந்தால் புதியவர்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும். உண்;மையில் புலம்பெயர் சூழலில் இது சாத்தியமான ஒன்றே. நாம் ஒன்றுபட்டு திட்டமிட்டு செயற்பட்டால் நமக்கான உயிர்ப்பான புத்திஜீவிகள் குழாமொன்றை உருவாக்க முடியும். உலகெங்கும் சிதறிக் கிடக்கும் நமது ஆற்றலாளர்களை ஒன்றுபடுத்த முடியும். அதன் மூலமாக உலக அரங்கை அறிவோடும் ஆற்றலோடும் எதிர்கொள்ள முடியும். சிங்கள ராஜதந்திரம் நம்மை தோற்கடிப்பதில் தொடர்ந்தும் வெற்றிப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. நமது வாக்குகளைக் கொண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றமொன்றைக் கொண்டே, உலக அரங்கை தங்களுக்கான ஒன்றாக மாற்றுவதில் அவர்கள் வெற்றிபெற்றிருக்கிறது. சிங்களத்தின் கபட ராஜதந்திரத்தை எதிர்கொள்ள வேண்டுமாயின், அதனை எதிர்கொள்வதற்கென, முழுநேரமாக பணியாற்றுவதற்கான ஒரு சிந்தனையாளர் குழாம் எங்களுக்குத் தேவை. இதற்கு பெருமளவு நிதி பலமும் தேவை. ஒரு சமூகம் வளர்ந்து செல்லும் போது, அச் சமூகம் தனக்கான புத்திஜீவிகளையும் உருவாக்கிக் கொள்கிறது. எங்கு புத்திஜீவிகளுக்கு பஞ்சம் நிலவுகிறதோ அங்கு சமூகம் சிதைவடைந்து கொண்டு செல்கிறது என்றே பொருள். தனக்குள் சிதைவை எதிர்கொண்டிருக்கும் ஒரு சமூகம் தனக்கு முன்னாலுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப தன்னை தயார் செய்யும் ஆற்றலற்ற சமூகமாக இருக்கும். அவ்வாறான சமூகத்தால் உலக அரங்கை கையாள முடியாது. எனவே சிதறிக் கிடக்கும் தமிழ் ஆற்றல் ஒரிடத்தை நோக்கி குவிய வேண்டும். உலக நாடுகள் எங்கும் பரந்து வாழும் நமது புத்திஜீவிகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். உலகளாவிய புத்திஜீவிகள் அரங்கு என்னும் ஒன்றை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். உலகளவில் கொள்கை வகுப்புக்களில் செல்வாக்குச் செலுத்தும் சஞ்சிகைகள், பத்திரிகைகளில் நம்பவர்கள் எழுத வேண்டும். இன்று தமிழர்களிடம் இருக்கின்ற ஆற்றலைக் கொண், பல்வேறு மொழிகளில் எமது அரசியலை கொண்டு சேர்ப்பிக்கும் ஆற்றல் எமது இளைய தலைமுறையினர் மத்தியில் உண்டு. ஆனால் இதனை வழிப்படுத்துவதற்கும் வழிநடத்துவதற்கும் ஒரு சரியான தலைமை இல்லாமல் இருக்கிறது. இது முயன்றால் முடியாத காரிமயல்ல. எமது ஆற்றல்கள் எங்கெல்லாம் திரண்டு கிடக்கிறது என்பதை சரியாக இனம்கண்டு, அதனை ஒரு சக்தியாக உருமாற்றம் செய்யாமல் அடுத்த கட்டம் நோக்கி நாம் நகரவே முடியாது.

நன்றி Canada ஈழமுரசு