Jul 12

இத்தாலியின் மனிதாபிமானம் பாராட்டத்தக்கது: ஜிம் மாட்டிஸ்

மத்தியதரைக்கடல் ஊடாக ஆபத்தான பயணங்களை மேற்கொண்ட அகதிகளின் உயிர்காக்கும் முயற்சியானது இத்தாலி அரசாங்கத்தின் சிறந்த மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் தெரிவித்துள்ளார்.

இத்தாலி பாதுகாப்பு செயலாளர் ரொபர்டோ பினோட்டியுடன் பென்டகனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலி பாதுகாப்பு செயலாளர் ரொபர்டோ பினோட்டி அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுக்கு நேற்று விஜயம் செய்தார். பென்டகனுக்கு விஜயம் செய்த இத்தாலி பாதுகாப்பு செயலாளரை இராணுவ மரியாதையுடன் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வரவேற்றார்.

அதனை தொடர்ந்து இடம்பெற்ற சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதன்போது, கடந்த திங்கட்கிழமை மிசிசிப்பியில் அமெரிக்க இராணுவ விமான விபத்தில் 16 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இத்தாலி அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்புகு செயலாளர் ஆழ்ந்த இரங்கலையும் வெளிப்படுத்தியிருந்தார்.